Pages

Tuesday, January 7, 2014

வருடத்தின் 182 மணி நேரம்

அரை மணி நேரம் TV யை நிறுத்துங்கள், உங்கள் வாழ்க்கையிலும் சமூகத்திலும் நல்ல மாற்றம் ஏற்படும். ஒரு நாளில் சுமார் மூன்று மணி நேரம் டிவியில் செலவிடுகிறீர்கள் என்றால் அதை இரண்டரை மணி நேரமாக குறையுங்கள். அதுவும் நீங்கள் அடிமைப்பட்டுக் கிடக்கும் நிகழ்ச்சியின் நேரத்தில் குறையுங்கள். நம் வீட்டில் இருக்கும் சாதனங்களிலேயே மிகவும் எச்சரிக்கையாக கையாளப்பட வேண்டிய சாதனம் TV தான். ஒரு நாளைக்கு, உங்கள் நேரம் அரை மணி நேரம், உங்கள் மொத்த குடும்ப நேரம் 2  மணி நேரம் (4 பேர் கொண்ட குடும்பம்) இப்படி கணக்கிட்டால் வருடத்தின் 182.5 மணி, குடும்பத்தின் நேரம் 730 மணி நேரம் பல பயனுள்ள காரியங்களுக்கு செலவிடப்படும். பல நேரங்களில் ஒய்வு எடுக்க நேரமின்றி இருந்திருப்பீர்கள். இந்த அரை மணி நேரத்தை அதற்கு கூட பயன் படுத்திக்கொள்ளலாம்.

மக்களை டிவி முன் அமரவைத்து டிவி பேசிக்கொண்டிருக்கிறது மக்கள் முடமாக அதன்முன் அனைத்து புலன்களையும் அடகு வைத்துவிடுகிறார்கள். கண்ணும் காதும் டிவியை கவனித்துக் கொண்டிருக்கிறது. கண் காதுக்கு ஒத்திசைவாக உங்கள் உடல் இயக்கம் இன்றி நிற்கிறது. அதைவிட முக்கியமாக உங்களை சிந்திக்க விடுவதில்லை. இந்த நேரம் உங்கள் மக்களுடன் நண்பர்களுடன் சுற்றத்தாருடன் செலவிடப் பட வேண்டிய நேரம். குறைந்த பட்சம் உங்களுக்காக செலவிடப்பட வேண்டிய நேரம் இது.

மொபைல் போனும், இன்டர்நெட்டும் இவ்வகையானதே என்றாலும் அனைத்து புலன்களையும் முடக்குவதில்லை. தெரிவு செய்து கொள்வதற்கு பல விஷயங்கள் உள்ளன. டிவி நிகழ்ச்சிகள் ஒவ்வொரு மக்கள் பிரிவினரையும் குறி வைத்துள்ளது. குழந்தைகள், மகளிர், இளைஞர்கள், ஏன் வயதானவர்களைக் கூட விடுவதில்லை பல பழைய திரைப்பட சேனல்கள் உள்ளன. சேனல்கள் பார்வையாளனிடம் பரபரப்பையும் உணர்ச்சியையும் தூண்டி தன் ரேட்டிங்கை அதிகமாக்கிக் கொள்வதிலேயே குறியாக உள்ளது. செய்திச் சேனல்களும் விதி விலக்கல்ல. கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக மக்களவைத் தேர்தல் பரபரப்பே பிராதானமான செய்தியாக வெளியிட்டு  உள்ளது. செய்தி சேனல்கள் என்று பார்த்தால் ஒரு நிகழ்வை ஊதிப் பெரிதாக்குவதும் இருட்டடிப்பு செய்வதிலும் சிறப்பாக செயல்படுகிறது, அரசியல்வாதிகளின்  கொள்கைகளும் கொள்ளைகளும் எரிச்சல் மூட்டுகின்றன.

தமிழ்மொழியை சிதைப்பதில் பெரும்பங்கு டிவி சேனல்களையே சாரும். பல ஆங்கில சேனல்கள் நம் மக்கள்தொகை அதிகமென்பதால் வணிக நோக்கத்திற்காக தமிழில் பேசிக் கொண்டிருக்கின்றன.

சமைக்கும் போதும் கவனத்தை டிவி சீரியலிலேயே வைத்துள்ளதால் அவசர உணவு தயாரிக்கலாம் ஆரோக்கிய உணவு அல்ல. இதனால் குடும்பத்தின் ஆரோக்கியம் பாதிக்கப் படுகிறது. உணவு சாப்பிடுவதும் டிவி முன்தான் என்றால் இன்னும் மோசம். உங்களின் வார விடுமுறை நாளை டிவியே புக் செய்து கொள்கிறது அதன் திரைப்பட நிகழ்ச்சிகளால். நீங்கள் விரும்பிய வேலையை செய்ய விடுவதில்லை.

நீங்கள் தினமும் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பது டிவி நிகழ்சிகளுக்குத்தான் என்பதை உங்கள் குழந்தைகள் கவனிதுக்கொண்டுதான் உள்ளனர் என்பதை அறிவீர்களா? மறைமுகமாக டிவி தான் முக்கியம் என்று சொல்லிக் கொடுக்கிறீர்கள். சினிமா தவிர வேறு எதுவும் கணிசமாக நிகழவில்லை டிவிக்களில். டிவியில் வெளியிடப்படும் சினிமாக்களுக்கு தணிக்கை இருந்தபோதிலும் டிவி நிகழ்ச்சிகளுக்கும், விளம்பரங்களுக்கும் தணிக்கை என்று எதுவுமே இல்லை.  உங்கள் செயல்கள் நல்லனவாக இருந்தாலும் டிவியே உங்கள் குழந்தைகளை அதிகமாக கவர்ந்து அவர்களின் சிந்தனையையும் செயலையும் பாதிக்கிறது. உங்கள் குழந்தைகள்  டிவியைத் தவிர்த்து கவனம் சிதறாமல் படிக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?
கற்பனை என்பது அறிவை விட சிறந்தது என்று கூறுகிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். குழந்தைகளிடம் கற்பனைத்திறனும் சிந்திக்கும் ஆற்றலும் குறைய டிவி தான் காரணம் என்பது மிகையல்ல.

சினிமா, செய்திகளுக்கு  அடுத்தபடியாக கிரிக்கெட் சேனல்கள் உள்ளன. கிரிக்கெட்டை வைத்து பெரிய பொருளாதாரமே உள்ளது. தொழிற்சாலை தொழிலாளிகள் போல தினமும் விளையாடிக்கொண்டே இருக்கிறார்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள். முக்கிய கிரிக்கெட்  நடக்கும் நாட்களில் பல பணிகள் முடங்குகின்றன என்று ஒரு சர்வே சொல்கிறது.

டிவியை நிறுத்தி வைத்து விட்டால் முதலில் அந்த நேரத்தில் என்ன செய்வது என்கிற திகைப்பு மேலிடலாம். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாலே டிவியால் பூட்டியிருந்த உங்கள் சிந்தனை வேலை செய்ய ஆரம்பிக்கும். சிறு வயதில் நீங்கள் நினைத்தவற்றை இப்போதும் கற்கலாம். எழுத்து, பேச்சு, ஓவியம், இசை, போன்றவை. பிறருக்கு கற்பிப்பது, வீட்டு வேலை போன்ற பல விஷயங்களை செய்யலாம். நாம் என் ஒரு வருடத்திற்கு 134 கிலோ அரிசியை உண்கிறோம்? வேறு தானியம் எதுவும் உண்ணக்கூடாதா? உங்களை நீங்களே கண்ணாடியில் பார்த்துக் கொள்ளலாம். டிவியால் உங்கள் கண்களின் பொலிவு இழந்தது விட்டிருப்பதை உணரலாம். உங்கள் பருமன் அதிகரித்திருந்தால், உடற்பயிற்சிக்கு நேரத்தை செலவிடலாம். உங்கள் பற்களின் ஆரோக்கியம் எப்படி உள்ளது என்றும் கண்ணாடியில் பார்க்கலாம்.

உங்கள் குழந்தைக்கு எத்தனை கதை சொன்னீர்கள்? உங்கள் குழந்தையிடம் எத்தனை கதை கேட்டீர்கள்? உங்கள் குழந்தையிடம் அவர்தம் பள்ளி நிகழ்வுகளை கேட்டறியலாம். அவர்தம் பழக்க வழக்கங்கள் பற்றியும் நண்பர்களைப் பற்றியும் அறிவது மிக முக்கியம் அல்லவா?

உங்கள் வீட்டின் சுற்றுபகுதியில் கொஞ்சம் நடந்து பாருங்கள். பல  நிகழ்வுகள் உங்களை சிந்திக்கத் தூண்டும். மாட்டு வண்டிகள் இப்போது இல்லையே? என்ன ஆனார்கள்? எத்தனையோ வட மாநில கட்டிடத் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து விட்டார்களே. அவர்கள் கல்வி என்ன ஆவது? நீங்கள் வாங்கும் காய்கறிகள் எங்கே விளைவிக்கப்பட்டது என்று அறிந்து கொள்ளலாம்.

உங்கள் வீட்டு முற்றத்தில் அல்லது மாடியில் சிட்டுக்குருவிக்கு தானியமும் தண்ணீரும் வையுங்கள். பறவைகள் உங்களை வாழ்த்தும். வீட்டிலேயே நீங்கள் உண்ணும் காய்கறி வளருங்கள். மாடியில் கூட வளர்க்கலாம்.

விவசாய நிலங்கள் வீட்டு மனைகளுக்காக விற்கப்பட்டு  உணவு உற்பத்தியின்றி நிலங்கள் வீணாக்கப்படுகிறது. அந்த விவசாயி என்னவானான் என்று யோசித்ததுண்டா மனைகளை முதலீடாக விளம்பரப்படுத்தும் டிவிக்களும் வாங்குபவர்களும்.  பல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்கள் (மீத்தேன் எடுப்பு, நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பு ) உங்களையும் பாதிக்கும் என்று எண்ணியதுண்டா?

எப்போது நீங்கள் வானத்தில் நட்சத்திரங்களை ரசித்தீர்கள்?

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். உங்கள் நேரத்தை மேலும் நான் வீணாக்க விரும்பவில்லை, வருடத்தின் இந்த 182  மணி நேரத்தை டிவியிடமிருந்து பிடுங்கி விட்டால் உங்கள் வாழ்க்கையை  சிறப்பானதாக மாற்றிக் கொள்ளலாம்.  வாழ்த்துக்கள்.