Pages

Monday, October 18, 2010

Thursday, August 19, 2010

உப்பு போட்டு டீ குடித்திருக்கிறீர்களா?

-->
-->
உப்பு போட்டு டீ குடித்திருக்கிறீர்களா?
 

ஆம் என்பவர்கள் ஜம்மு காஷ்மீர் சென்றிருக்கலாம். அல்லது சுவைகளில் வித்தியாசமான புதுமையை விரும்புபவராக இருக்கலாம். சர்க்கரை கூட போடாமல் சுவைப்பவர்கள் மருத்துவர்கள் அறிவுரைகளுக்கு கட்டுபட்டவர்கள்.
முகர்ந்து பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம் இனிப்பு இல்லாத டீயை. இன்னும் கொஞ்சம் பார்த்தால், பால் கூட இல்லாத கருந்தேநீர் (பிளாக் டீ). சூடு மட்டுமே தேவை இங்கே. வெப்பத்தை உள்ளே கடத்துவதற்குத் தானோ இந்த எதுவுமே இல்லாத கருந்தேநீர். பேக்கிரவுண்ட் மியூசிக் இல்லாத ஹீரோ அறிமுகம் தான்.  

முழு உலகத்தையே உணர்கிறேன் இந்த உப்பு தேநீரில். மலை தந்த தேயிலையும், அலைகடல் தந்த உப்பும் உதட்டை தொடும்போது.

பல்வேறு சுவைகளில் டீ. எலுமிச்சை சாறுடன் தேன் கலந்த தேநீர், இஞ்சி டீ, தேயிலைத் தூளுடன் ஏலக்காய் கலந்தால் ஏலக்காய் டீ, துளசி கலந்தால் துளசி டீ என்று விற்பனை செய்கிறார்கள். புளியங்கொட்டை  கலந்த டீயை புளியன் டீ என்று விற்பதில்லையே?

இன்னும் சுவைகளில் மாற்றம் தேவை என்றால் பசும்பால், ஆட்டுப்பால், எருமைப்பால், ஒட்டகப்பால், கழுதைப்பால், காட்டு எருமைப்பால் !!!!!!!!!

பெட்ரோல், டீசலில் ஓடும் ஊர்திகளைப் போல டீயிலேயே ஓடும் மனிதர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மைதான் பெட்ரோலைப் போல  மிகப்பெரிய சந்தை தேயிலைக்கும் இருக்கிறது. சூரியனே பார்க்காமல் கூட இல்லாமல் பல நாள்கள் விடிந்திருக்கின்றன தேநீருடன். பீடி, சிகரெட்டை தடை செய்தால் தீப்பெட்டித் தொழில் பாதிக்கும், தேயிலையை தடை செய்தால் பால் வியாபாரம் பாதிக்கும். ஓரளவு உண்மைதான். 

என்னதான் தேநீரை வடிகட்டினாலும் குடிக்க முடியாமல் அடியில் நிற்கும் துகள்களைப் போல இங்கேயும் படிக்க முடியாமல் அடியில் நிற்கும் எழுத்து துகள்கள் ............................

Wednesday, June 30, 2010

மழை

இதுவரையில் நான் மழை பெய்யும் இடத்தில் நின்றிருக்கிறேன், மழை பெய்யாத இடத்தில் நின்றிருக்கிறேன். மழை பெய்யும் இடமும் மழை பெய்யாத இடமும் சந்திப்பது எங்கே? அங்கே நான் நிற்க வேண்டும் இரு கையை விரித்து ஒரு கையில் மட்டும் மழை தொட வேண்டும்.

பாலைவனத்தில் மழை சூடாகப் பெய்யுமோ? மழைத் துளி மண் சேரும் முன் ஆவியாகி விடுமோ? அப்படியே ஒரு வேளை மழை வந்து நனைந்தாலும் உடைகள் சீக்கிரம் காய்ந்துவிடும். மழை வேண்டி தவளைகளுக்கெல்லாம் திருமணம் செய்து வைக்கிறார்கள். உண்மையில் மழை வந்து குட்டையில் தண்ணீர் தேங்கும் வரை தவளைகளிடமிருந்து திருமணத்திற்கான குரலே கேட்பதில்லை. நல்ல வேளை உப்பு, கடல்நீருடன் சேர்ந்து ஆவியாவதில்லை. அப்படி ஆவியாகியிருந்தால் குடிநீர் கரிக்கும், காந்தியின் உப்பு சத்தியாகிரகம் தோல்வியடைந்திருக்கும்.

எல்லா வருடங்களிலும் பருவத்திலேயே இருக்கிறது மழை. இதை விட்டால் காடுகளுக்கு நீர் ஊற்ற யார் இருக்கிறார்கள். யாரால் முடியும்.
மேகத்தில் இருந்து விழும் மழைத் துளி முதலில் பூமியின் எந்த இடத்தைத் தொடும்? உயரமான மலை உச்சியிலா? பள்ளத்தாக்கிலா?


இமயமலையில் ரூப்கண்ட் அருகில் ஒரு பள்ளத்தாக்கில் ஏராளமான (300) மனித எலும்புகளும் மண்டை ஓடுகளும் 1942 ல் பார்வையில் பட்டது. இவைகளை ஆய்வுக்குட்படுத்திப் பார்த்ததில், இவை அனைத்தும் நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஒரு சமுகத்தை சேர்ந்தவை என்ற துப்பு கிடைத்தது. ஏன் அனைவரும் ஒட்டு மொத்தமாக இறந்தார்கள் என்ற கேள்விக்கு விடை காண முற்பட்டார்கள். போராக இருக்குமோ? ஆனால் கிடைத்த எலும்புகளில் தாக்குதல்களின் தடயமே இல்லை. விஷமா? நோய் தாக்குதலா? அதற்கு ஏன் பள்ளத்தாக்கிற்கு வந்து சாக வேண்டும். ஏதாவது மூட நம்பிக்கையால் பலி கொடுக்கப் பட்டவர்களா? ஒட்டு மொத்த தற்கொலை முயற்சியா? இன்னும் எத்தனையோ வகைகளில் சிந்தித்துப் பார்த்தனர். விடை காண இன்னும் ஒரு தகவல் இருந்தது. மண்டை ஓடுகளிலும், தோள்பட்டை எலும்புகளிலும் விரிசல்களும் பலமான அடி விழுந்த அடையாளம் இருந்ததது. யார் தாக்கினார்கள்? 2004 ல் ஆலங்கட்டி மழை தான் காரணமாக இருந்திருக்கும் என்று முடிவுக்கு வந்தார்கள். ஆலங்கட்டிகள் சுமார் கிரிக்கட் பந்தின் அளவுடையதாக இருந்திருக்குமென்றும் பாதுகாப்பாக ஒதுங்குவதற்கு இடம் இல்லாததுமே இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

மழை நாள் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது வந்தது வானவில். எங்கோ ஒரு மின்னல் கீற்றும் வானம் முழுக்க மழையும் பெய்து கொண்டிருந்தது. எங்கோ ஒரு மழைத் துளியும் வானம் முழுக்க மின்னலும் வருவதாக எண்ணிக் கொண்டிருந்தேன். அதைப் போன்ற ஒரு வாய்ப்பில்லை. நலம்.

Sunday, June 27, 2010

எழுதுவது – பேனா பிடித்த விரல்கள்

உங்கள் கையெழுத்து உங்கள் கைவிரல்களிலிருந்து வருவதல்ல, மூளையிலிருந்து வருவது. விபத்தில் கை இழந்தவர்கள் காலால், வாயால் எழுதும்போது கவனிக்கலாம் கையெழுத்து ஒத்திருப்பதை.

நான் எழுதுகிறேன் என்பது நான் சிந்திக்கிறேன் என்பதைக் காட்டுகிறது. எழுதுவது மிகக் குறைவே. போனில் சொல்லும் எண்ணை எங்காவது துண்டு காகிததிலோ உள்ளங்கையிலோ எழுதுவதை இங்கே நான் சொல்லவில்லை. என்ன எழுதலாம் என்று நினைத்துக்கொண்டு அதையே இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் எழுதும் பேனா, நான் எழுதுவதை பற்றி என்ன நினைக்கும். இங்கும் அங்கும் அதைப் பிடித்து காகிதத்தில் உரசிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்குமோ?

நான் எந்த மொழியில் எழுதுகிறேன் என்று என் பேனாவுக்குத் தெரியுமா? நான் எழுதுவதே தெரியாதென்றால் மருத்துவர்கள் எழுதும் prescription ஐப் பற்றி என்ன நினைக்கும். பேனா எழுதுவது தன் தலையாலா அல்லது ஒற்றைக் காலாலா? நான் எழுதும் அனைத்தையும் தன் நினைவில் கொள்ளுமா என் பேனா? மையுடன் சேர்ந்து அதன் நினைவுகளும் காகிதத்திற்கு மாறிவிடுமோ? சிறுகுழந்தைகள் கையிலுள்ள பேனா என்ன எழுதுகிறது என்று குழந்தைக்கோ, பேனாவுக்கோ அல்லது வேறு யாருக்காவது தெரியுமா?அதன் வடிவங்கள் என்ன குறிப்பிடுகிறது என்று யாரவது ஆராயலாம். எதாவது கற்கால வடிவங்களுடன் ஒப்பிடலாம். நாம் நினைப்பவற்றை எல்லாம் எழுத முடியுமா? அதற்கென்று ஒவ்வொருவருக்கும் எத்தனை லிட்டர் மை தேவைப்படும். அதை படிப்பதற்கு எத்தனை ஆயுள் தேவைப்படும். யாருக்காவது அதிகபட்ச தண்டனையாக நான் எழுதுவதை படிக்கக் கொடுக்கலாம்.

கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானது தானா? ஆகவே தான் ஜாக்கிரதையாக எழுதிக்கொண்டிருக்கிறேன். பேனா முனையைவிட கூர்மையானது எழுத்தாணி முனை. அதனால் தான் புள்ளிகளே இல்லாமல் எழுதி இருக்கிறார்கள் பனை ஓலையில்.

என் சட்டைப் பயில் தொங்கிக் கொண்டிருப்பதுதான் என் பேனாவின் முழு நேர வேலை. தினமும் நான் அணியும் வெவ்வேறு சட்டைகளில் தொங்குவது அதன் பொழுதுபோக்கு. நானாக எப்போதும் எடுப்பதில்லை. யாரவது இரவல் கேட்கும் போதும், போன் நம்பர் குறித்துக் கொள்ளச் சொல்லும் போதும் சற்று தொங்குதலில் இருந்து விடுபடும். நூலகங்களில் வருகைப் பதிவேட்டுக்குப் பக்கத்தில் பேனா தூக்கிலிடப்பட்டதாகவே நான் கருதுகிறேன். திருட்டுக்கு பயந்து தூக்கிலிடப்பட்ட பேனா அது. எனக்குப் பிடித்த முற்றுப்புள்ளியை உங்கள் நலன் கருதி இங்கே வைக்கிறேன்.

பறவை

-->மேகம் சூழ்ந்த மாலைப் பொழுதில் V வடிவத்தில் கூட்டமாய், விசிலடித்து தனிமையாய், மின்சாரக் கம்பியில் வரிசையாய், வயலோரங்களில், ஏரிக்கரை மரங்களில் சிறகடித்து பறந்த பல்வேறு வகையான பறவைகளை பார்த்து ரசித்து விட்டு மீண்டும் அந்த நினைவுகளில் மூழ்க இதோ இப்போது எழுத ஆரம்பித்து விட்டேன் பறவைகளுக்காக.

ஒரு குழந்தைக்கு மட்டுமல்ல பறவை ஆச்சரியமான உயிரினம். பறப்பதற்கு ஆசைப்படாத மனிதனில்லை. நம் கதைகளில் குதிரை, பெண் தேவதைகள், சூப்பர்மேன், ஏமாந்தால் எருமை கூடப் பறக்கும். பறவையைப் பார்க்கும் ஒவ்வொரு குழந்தையும் இறக்கை கட்டிக் கொண்டு வானத்தில் பறக்கலாம் என்று கற்பனை செய்யும்.

நாம் பார்த்து பெயர் தெரியாத பறவைகள் உள்ளதா? யோசித்து பாருங்கள்...
வால் நீளமாக, அலகு கூர்மையாக, வளைந்து, திக்கித் திக்கி கத்திக் கொண்டு, உடலிலே வண்ணம் வேறாக,.... இப்படி எத்தனையோ.
சரி, நமக்கு தெரிந்த பறவைகளின் பெயர்களைப் பட்டியலிடுவோம். காகம், குருவி, வாத்து, கொக்கு, நாரை, மீன் கொத்தி, மரங்கொத்தி, மைனா, கழுகு, குயில், மயி
ல், தேன் சிட்டு, கிளி, லவ் பேர்ட்ஸ், உள்ளான், காடை, கௌதாரி, ஆந்தை, புறா, பருந்து, பெங்குயின், சேவல், கோழி, வான்கோழி, நீர்கொழி, நெருப்புக்கோழி, நாட்டுக்கோழி, பிராய்லர் கோழி.

இதுவரை வகைப்படுத்தப்பட்ட பறவை இனங்கள்
9000 திற்கும் மேல். இன்னும் அறியப்படாத பறவை இனங்களும் இருக்கலாம். பறவைகளுக்கு பெறும்பாலும் dayshift தான். ஆந்தை போன்ற சில பறவைகளைத் தவிர. ஆகவே பறவைகளைக் கண்காணிப்பது எளிது. உலகம் முழுக்க பறவை ஆர்வலர்கள் பறவைகளைக் கண்காணித்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பறவையினம் இல்லாத இடமே உலகில் இல்லை எனலாம். துருவப் பிரதேசங்களிலும் வெப்ப பிரதேசங்களிலும் மற்றும் அனைத்து இடங்களிலும் பறவைகள் வாழ்ந்து வருகின்றன. பறவைகள் உணவு பெரும்பாலும் அசைவமே. பூச்சிகள், புழுக்கள், எலி போன்ற சிறு பிராணிகள்,
இறந்து போன உயிரினங்கள், மீன்கள், கடல் உயிரினங்கள், பாம்புகள். அதனதன் வாழுமிடத்திற்கேற்ப மாறுபடுகிறது. சைவ மெனுவில் பழங்கள், கொட்டைகள், காய்கள், தானியங்கள் எல்லாம் உள்ளன.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் பறவைகள் மூலம் காடுகளையே உருவாக்கலாம். பறவைகள் பழங்களை உண்டு அதன் எச்சத்தில் கொட்டைகளை வெளியேற்றிவிடும். நிறைய பழ மரங்களை வளர்த்து பறவைகள் உதவியோடு. காடுகள் வளர்ப்பதிலும், விவசாயத்திலும் பறவைகளின் உதவி குறிப்பிடத்தகுந்தது. பயிர்களை பூச்சித் தாக்குதலில் இருந்து காப்பதற்கு பறவைகளைப் பயன்படுத்துவது இயற்கை விவசாய முறை. பயிருக்கு கெடுதல் ஏற்படுத்தும் பூச்சிகள் பறவைகளுக்கு உணவாகிவிடும்.

பறப்பதற்கு ஏற்றவாறு பறவைகளின் உடல் எடை மிக லேசானது. அதன் இறக்கை எலும்புகளில் காற்று பைகள் இருக்கிறது. மேலும் பறவைகளால் நம்மைப் போல் அளவுக்கு அதிகமாக சாப்பிட முடியாது. அப்படியே சாப்பிட்டால் பறக்க முடியாது. ஆகவே கொஞ்சம் கொஞ்சமாக நிறைய தடவை சாப்பிடுவது அவசியமாகிறது.

மனிதர்களின் செயல்பாடுகளாலும், ஆக்கிரமிப்புகளாலும் பாதிக்கப்படும் உயிரினங்களில் பறவைகளும் அடங்கும். அழிந்து போன பறவையினங்கள் எத்தனையோ. மனித செயல்பாடுகளுக்கும், நகர வாழ்க்கைக்கும் பழக்கிக் கொண்ட பறவைகளும் இருக்கத்தான் செய்கின்றன. காடுகளின் ஆக்கிரமிப்புகளால் வாழ்விடம் இழந்து அழிந்து போன பறவையினங்கள் வேட்டையாடி அழிக்கப்பட்ட பறவைகளை விட அதிகம். நகரங்களின் குப்பைகளில் இரைதேடும் பறவைகளின் ஆயுள் குறைவதும், இனப்பெருக்கம் குறைவதும் ஆய்வுகள் சொல்லும் செய்தி, கண்கூடு. சுமார் பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த பல பறவைகள் இப்போது பார்க்க முடியவில்லை. உதாரணம் கருடன் என்று சொல்லப்படும் பறவை. இதற்கு காரணம் நாம் உபயோகப் படுத்தி சரியான முறையில் அப்புறப்படுத்தப் படாத ரசாயனம் மிகுந்த மருத்துவக் கழிவுகள், மாமிச கழிவுகள்.

பொதுவாகவே பறவைகள் பகல்நேரத்தில் செயல்படுபவை. மாலை சூரியன் மறைந்ததும் கூட்டுக்குத் திரும்பும் வாழ்க்கை முறை. நகரங்களில் உள்ள அதிக ஒளியால் அலைக்கழிக்கப்பட்டு பறவைகளின் இயல்பு வாழ்க்கைமுறை மாற்றம் அதன் இனப்பெருக்கத்திலும் பாதிப்பு ஏற்படுத்தி விட்டது.

குளிர் காலங்களில் வெப்ப நாடுகளுக்கு வரும் பறவைகள் பல ஆயிரம் கிலோமீட்டர்களை பறந்து கடக்க வேண்டும். கடல் பரப்பின் மேல் பறக்கும் பொது இளைப்பாற இடமும் இல்லை.

இன்று நீங்கள் எத்தனை வகை பறவைகளைப் பார்த்தீர்கள்? தட்டு, கூண்டு, தொலைக்காட்சிக்கு வெளியே.