Pages

Showing posts with label pen. Show all posts
Showing posts with label pen. Show all posts

Sunday, June 27, 2010

எழுதுவது – பேனா பிடித்த விரல்கள்

உங்கள் கையெழுத்து உங்கள் கைவிரல்களிலிருந்து வருவதல்ல, மூளையிலிருந்து வருவது. விபத்தில் கை இழந்தவர்கள் காலால், வாயால் எழுதும்போது கவனிக்கலாம் கையெழுத்து ஒத்திருப்பதை.

நான் எழுதுகிறேன் என்பது நான் சிந்திக்கிறேன் என்பதைக் காட்டுகிறது. எழுதுவது மிகக் குறைவே. போனில் சொல்லும் எண்ணை எங்காவது துண்டு காகிததிலோ உள்ளங்கையிலோ எழுதுவதை இங்கே நான் சொல்லவில்லை. என்ன எழுதலாம் என்று நினைத்துக்கொண்டு அதையே இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் எழுதும் பேனா, நான் எழுதுவதை பற்றி என்ன நினைக்கும். இங்கும் அங்கும் அதைப் பிடித்து காகிதத்தில் உரசிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்குமோ?

நான் எந்த மொழியில் எழுதுகிறேன் என்று என் பேனாவுக்குத் தெரியுமா? நான் எழுதுவதே தெரியாதென்றால் மருத்துவர்கள் எழுதும் prescription ஐப் பற்றி என்ன நினைக்கும். பேனா எழுதுவது தன் தலையாலா அல்லது ஒற்றைக் காலாலா? நான் எழுதும் அனைத்தையும் தன் நினைவில் கொள்ளுமா என் பேனா? மையுடன் சேர்ந்து அதன் நினைவுகளும் காகிதத்திற்கு மாறிவிடுமோ? சிறுகுழந்தைகள் கையிலுள்ள பேனா என்ன எழுதுகிறது என்று குழந்தைக்கோ, பேனாவுக்கோ அல்லது வேறு யாருக்காவது தெரியுமா?அதன் வடிவங்கள் என்ன குறிப்பிடுகிறது என்று யாரவது ஆராயலாம். எதாவது கற்கால வடிவங்களுடன் ஒப்பிடலாம். நாம் நினைப்பவற்றை எல்லாம் எழுத முடியுமா? அதற்கென்று ஒவ்வொருவருக்கும் எத்தனை லிட்டர் மை தேவைப்படும். அதை படிப்பதற்கு எத்தனை ஆயுள் தேவைப்படும். யாருக்காவது அதிகபட்ச தண்டனையாக நான் எழுதுவதை படிக்கக் கொடுக்கலாம்.

கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானது தானா? ஆகவே தான் ஜாக்கிரதையாக எழுதிக்கொண்டிருக்கிறேன். பேனா முனையைவிட கூர்மையானது எழுத்தாணி முனை. அதனால் தான் புள்ளிகளே இல்லாமல் எழுதி இருக்கிறார்கள் பனை ஓலையில்.

என் சட்டைப் பயில் தொங்கிக் கொண்டிருப்பதுதான் என் பேனாவின் முழு நேர வேலை. தினமும் நான் அணியும் வெவ்வேறு சட்டைகளில் தொங்குவது அதன் பொழுதுபோக்கு. நானாக எப்போதும் எடுப்பதில்லை. யாரவது இரவல் கேட்கும் போதும், போன் நம்பர் குறித்துக் கொள்ளச் சொல்லும் போதும் சற்று தொங்குதலில் இருந்து விடுபடும். நூலகங்களில் வருகைப் பதிவேட்டுக்குப் பக்கத்தில் பேனா தூக்கிலிடப்பட்டதாகவே நான் கருதுகிறேன். திருட்டுக்கு பயந்து தூக்கிலிடப்பட்ட பேனா அது. எனக்குப் பிடித்த முற்றுப்புள்ளியை உங்கள் நலன் கருதி இங்கே வைக்கிறேன்.