Pages

Saturday, April 2, 2016

தோட்டா துளைக்காத கவச உடை - Bulletproof jacketநாம் எப்போதும் அணியும் உடைகள், ஒரு துணி அல்லது இரு துணி அடுக்குகள் கொண்டு தைக்கப்பட்டிருக்கும். கவச உடை சாதாரண உடையப் போல் இல்லாமல் சுமார் 20-40 அடுக்கு துணிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும். இவ்வுடையிலிருக்கும் நூலிழைகள் அதிக வலிமையையும் குறைந்த நீளும் தன்மையும் கொண்டிருக்கும். பாரா அராமிட் (para aramid) இழைகள் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு கிராம் முதல் 20 கிராம் வரையும் நொடிக்கு 200 முதல் 800 மீட்டர் வேகத்திலும் தாக்கக் கூடிய துப்பாக்கி தோட்டாக்களை தாங்கி கவச உடை அணிந்திருப்பவரைக் காக்கிறது. இதன் பின்னணியில் உள்ள அறிவியல் இதுதான். கவச உடை தோட்டாவின் ஆற்றலை உள்வாங்கி குறுக்கும் நெடுக்குமாக நெய்யப்பட்டுள்ள பாவு மற்றும் ஊடை நூலிழைகளின் வழியாக பரவவிட்டு தாக்கும் வேகத்தையும் குறைக்கிறது. இவ்வாற்றல் தோட்டா தாக்கிய புள்ளியியை நோக்கி அலை போல் ஆடை அடுக்குகள் உள் நோக்கி குவிந்து ஆற்றல் பரவுதலை சமன்படுத்தும். தோட்டாவின் வேகம் குறைந்து குவிந்த துணி அடுக்குகள் தன் இயல்பு நிலைக்குத் திரும்பும் போது துணி அடுக்குகளினுள் சிக்கி கவச உடை அணிந்திருப்பவரைக் காக்கும். இந்த ஆற்றல் குறைப்பு கவசப் பணியின் முக்கிய அம்சம். ஆகவே சாதாரண உடையைப் போல் பல துண்டுகளாக வெட்டித் தைக்கப்படாது. பல துண்டுகளாக வெட்டினால் தோட்டாவின் ஆற்றல் பரவி வேகம் குறைவது தடைபடும்.  நூலின் முறுக்கும் குறைவாகவே இருக்கும், அப்போதுதான் ஆற்றல் பரவுதல் விரைவாகவும் ஒரே கோணத்திலும் நடக்கும். நூலின் முறுக்கினால் தோட்டாவுக்கும் நூலுக்கும் இடையே ஏற்படும் உராய்வும்  நெருக்கமான நெய்தலினால் ஏற்படும் உராய்வும் தோட்டாவின் வேகக் குறைப்பில் பங்கேற்கிறது. இந்த அனைத்து செயல்களும் ஒரு விநாடிக்குள்ளாகவே நடந்து முடிந்துவிடும். ராணுவ வீரர்களின் முக்கிய உறுப்புகளைக் காத்து உயிர் காக்கவும் வேகமாகச் செயல்படவும், மேலுடம்பை (கை, கால் மற்றும் தலை தவிர்த்து) காக்கும் கவச உடை சுமார் ஆறு கிலோ வரை இருக்கும். வெடிகுண்டு செயலிழக்கச் செய்பவர்களின் கவச உடை, (தலைக்கவசம் முதல் கால்கள் வரை முழு உடல்) சுமார் 25 கிலோ வரை இருக்கும். இந்த முழு உடல் கவச உடையுடன் வேகமாக நடக்கவோ ஓடவோ முடியாது. மேலும் உடையினுள் காற்றோட்டம் இல்லாததால் உடல் வெப்பம் சீராக இருக்காது அதிக வியர்வை வெளியேறும். நீண்ட நேரம் அணிய முடியாது. ஆகவே தான் ராணுவ வீரர்களின் கவச உடை, முழு உடலையும் காக்காமல் முக்கிய உறுப்புகளை மட்டும் காப்பது போல் வடிவமைக்கப்படுகிறது.     Thursday, January 14, 2016

இரவு நேரத்தில் பயணிப்பது ஒரு வித அனுபவம்

நந்தனம், சென்னை
ஒரு வெள்ளிக்கிழமையில் இல்லை, இல்லை. வியாழக்கிழமை இரவு ஊருக்குச் செல்லக் கிளம்பினேன். இரவு உணவு முடித்துவிட்டேன். பத்து மணிக்கு அறையை விட்டுக் கிளம்பினேன்.  இரவு நேர பேருந்துகளில் பயணிப்பது ஒரு வித அனுபவம். யார் தான் இந்த பேருந்து பலகை நிறங்களைத் தேர்வு செய்வார்களோ? இரவு நேரங்களில் பெயர்பலகையின் நிறம் கருப்பில் வெள்ளை எழுத்துக்கள். நந்தனம் பேருந்து நிறுத்தத்தில் நின்றுருந்தேன். சில பேருந்துகளும், நிறைய லாரிகளும் விரைந்து போய்க்கொண்டிருந்தன.   நான் எதிர்பார்த்த இரவுநேர (நைட் சர்வீஸ்) பேருந்து இன்னும் வரவில்லை. ஒரு நாய் என் அருகில் வந்து குறைத்தது. நான் நகர்ந்து நின்றதும், சுற்றிச் சுற்றி மோப்பம் பிடித்து விட்டு படுத்துவிட்டது. எதிர்பார்த்தது போல கருப்பு நிற பலகையுடன் தாம்பரம் செல்லும் இரவுப் பேருந்து வந்தே விட்டது, கை நீட்டி வண்டியை நிறுத்தினேன். கத்திப்பார ஒரு டிக்கெட் வாங்கிவிட்டு எங்கே அமர்வது என்று யோசித்தேன், என்னைத் தவிர மூவர்தான் பேருந்தில் இருந்தனர். நடத்துனர் தன் பையை இன்ஜின் மேல் போட்டுவிட்டு ஓட்டுனருக்கு வலதுபக்க இருக்கையில் அமர்ந்து எதையோ பற்றி பேசிக் கொண்டிருந்தார்.  நான் ஓட்டுனருக்கு பின் இருக்கையில் அமர்ந்தேன். சைதாபேட்டையில் இருவர் வண்டியை நிறுத்தி ஏறினர். ஒரு குப்பை லாரி கடந்து சென்று விட்டது. அதன் நாற்றம் கடக்க கொஞ்சம் அதிக நேரமானது. கிண்டி யில் பணி முடித்த இரு நடத்துனர்கள் வந்து ஓட்டுனருக்கு வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தனர். அந்த இரு நடத்துனர்களோடு கத்திப்பாராவில் இறங்கிக் கொண்டேன்.


குளிர்காலம் ஆரம்பித்த தாக்கம் தெரிந்தது. ஏ சி , ஏ சி ....... என்று கத்திக்கொண்டே ஒரு  தனியார் பேருந்து வந்து நின்றது. எங்கு போகும் பேருந்து என்றே தெரியவில்லை. பல வட இந்திய தொழிலாளர்கள் ஆரஞ்சு நிற உடைகயோடும் ஹெல்மேட்டோடும் உரக்கப் பேசிக் கொண்டே சென்றனர். மெட்ரோ ரயில் பணியாளர்களாக இருக்கக் கூடும். இன்னும் ஓரிரு தனியார் பேருந்துகள் வந்து பாதிக்கு மேற்பட்ட சாலையை அடித்துக்கொண்டு நின்றது. கும்போணம், தாஞ்சூர் ஏ சி என்று பயணிகளுக்கு தூண்டில் போட்டபடி அழைத்துக் கொண்டிருந்தனர். இரண்டு கள்ளக்குறிச்சி செல்லும் பேருந்துகள் ஒரே நேரத்தில் பணிகளைத் தாண்டிச்  நின்றதும் பயணிகள் தன் உடமைகளுடன் ஓடினர். திருச்சி பேருந்துகள் காலியாகச் சென்றது. கள்ளக்குறிச்சிக்கு அடுத்தபடியாக திருவண்ணாமலைக்குதான் அதிக பேருந்துகள். ஆனால் இன்று எதையும் காணோம். பேருந்து நிழற்குடையில் சைக்கிளில் பிளாஸ்குகளில் டீ விற்றுகொண்டிருந்தவரிடம் பயணிகள் பேருந்து வரும் விவரங்களை விசாரித்துகொண்டிருன்தனர். பேருந்து தகவல் மையமும் குடிநீர் விற்பனையும் இங்கு அமைக்கலாம் திருவண்ணாமலைக்கு ஒரு பேருந்து வந்தது. ஏறும் வழியில் ஏறி அமர இடமில்லாததால் இறங்கும் வழியில் இறங்கி விட்டேன். இரவு நேரப் பேருந்துகள் சிலதும், தாம்பரம்  செல்லும் ஷேர் ஆட்டோக்கள் சிலதும் பயணிகளை கத்திப்பாராவில் குறைத்தது. போளூர் செல்லும் பேருந்து ஒன்று வந்தது. ஏறி விட்டேன். முன்னே தன் இருக்கையில் இருந்த நடத்துனர் வந்து நின்றார். சேத்துப்பட்டு ஒண்ணு என்று நூறு ரூபாய் கொடுத்தேன். சில்லறையும் பயனஸ் சீட்டும் கொடுத்துவிட்டு திரும்ப தன் இருக்கியில் அமரும் முன் பென்டிரைவ்சொருகினார். ஓட்டுனர் தன் பக்கம் இருந்த சுவிட்சை அழுத்தினார். பாடல் கத்தியது. ஒரு குழந்தை அழ ஆரம்பித்தது. யாரும் திட்ட ஆரம்பிக்கும் முன்பே நடத்துனர் சத்தத்தை குறைத்து விட்டார். பல்லாவரத்தில்  நின்றது, தாம்பரத்தில் நின்றதும் நடத்துனர் நேர்க காப்பாளர் அலுவலகத்திற்கு சென்றார். பேருந்திலிருந்த ஒருவர் இயற்கை அழைப்பை ஏற்க இறங்கி ஓடினார். நடத்துனர் வந்து யாராவது வரணுமா என்று கேட்டவுடன் வந்துவிட்டார் இயற்கை அழைப்பை ஏற்றவர். பெருங்களத்தூரில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. நம்ம டாய்லெட் என்று  ஒன்று நல்ல வெளிச்சத்துடனும் சுத்தமாகவும் ஒரு விஷயம் தென்பட்டது. சமீபத்திய அரசுத் திட்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன். படிக்கு பக்கத்தில் அமர்ந்திருந்ததால் குளிர் காற்று தாக்கவே, என் பையில் இருந்த குளிர்தொப்பியை மாட்டிக்கொண்டேன்.   எழுந்து படிக்கட்டின் ஷட்டரை மூடினேன். என் பக்கத்தில் தன் நிறுவன அடையாள அட்டையை பெல்டில் மாட்டிக் கொண்டிருந்த ஒருவர் அமர்ந்திருந்தார்.  எஞ்ஜினுக்கு பக்கத்தில்  இரண்டு மூட்டைகள் அதன் மேல் ஒரு சிறுவன் தூங்கிக்கொண்டும் இருந்தான். இவற்றைத் தாண்டி வந்து பேருந்தில் இருந்த அனைவரையும் எண்ணிக்கொண்டு சென்று திரும்ப தன் இருக்கைக்கு வந்தார். பல பேர் தூங்கி விட்டிருந்தனர், சிலர் காதில் மொபைல் ஹியர்போன் போட்டுக்கொண்டிருந்தனர். எனக்கு பக்கத்து சீட்டில் இருந்தவர் கைகொள்ளாத அளவு மொபைல் போன் ஒன்றில் சினிமா பார்த்துக்கொண்டிருந்தார்.   .... இன்னும் நினைவு படுத்தி எழுத வேண்டும். ......

Sunday, May 3, 2015

தாதூண் பறவைகள் - பறவைகளும் தண்ணீரும்

மலைகள் இணைய இதழ் 4 ஆம் ஆண்டு சிறப்பிதழில் பதிப்பிக்கப்பட்ட என் கட்டுரை  

http://malaigal.com/?p=6705

கட்டுரைச் சுருக்கம்:

இவ்வுலகில் உள்ள 8650 பறவையினங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளவை உணவுக்காக வளர்க்கப்படும் பறவைகளான கோழி, வாத்து மற்றும் வளர்ப்புப்பிராணிகளாக வளர்க்கப்படும் பறவைகளும் தான். 8650 இனங்களில் 1200 இந்தியாவில் காணலாம். நிலத்தின் மேல் உள்ள நீர்நிலைகள் அளவில் சுருங்கி மாசடைந்து குளங்கள், ஏரிகள், ஆறுகள் விஷ சாக்கடையாக உள்ளன. போர் போட்டு தொட்டியிலும் புட்டியிலும் நீரை அடைத்து வைத்துள்ளோம். நீர் இல்லாமல் நமக்கு நா வரளும். வியர்வை சுரப்பியற்ற பறவைகளுக்கு உடலும் வரளும். பறவைகள் தாகம் தணிக்க எங்கே தேடியலையும்? பறவைகளின் நீர் குடிக்கும் பழக்கங்கள், நீர் தேவை போன்றவற்றின் காரணங்கள். 


சில வாரங்களுக்கு முன் நான் காலையில் பணிக்குச் செல்ல விரைந்து நடந்து கொண்டிருந்தேன். சாலை ஓர மர நிழலில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி கையை நீட்டி என்னை அழைத்தாள். ‘என்னம்மா வேண்டும்’ என்று கேட்டு விட்டு நின்றேன். மூதாட்டி தன் கையிலிருந்த வாட்டர் பாக்கெட்டை என்னிடம் கொடுத்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் உலர்ந்து போன வாயினால் ‘தண்ணியை பிரிச்சு குடிக்க கொடு’ என்று கூறினாள். ‘கடிச்சி பாக்கெட்ட பிரிக்கவா?’ என்றதும், சரி எனத் தலையாட்டினாள். அவளுக்கு தண்ணீர் பாக்கெட்டைப் பிரித்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டேன். தண்ணீர் கையிலிருந்தும் நகமோ பல்லோ இல்லாமல் குடிக்க முடியாத நிலையில் மூதாட்டியின் நிலையை பிறகு எண்ணி வருந்தினேன்.
தண்ணீரை நாம் இந்த அளவுக்கு அடைத்துவைத்து விற்பனைப் பொருளாக்கி இருக்கிறோம். கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் விளங்கும், நகரங்களில் பொதுவான குடிநீர் அல்லது சுத்தமான நீர் எங்குமே இல்லை. அனைத்து நிலத்தடி நீரையும் உறிஞ்சி மேல்நிலைத் தொட்டிகளிலும், லாரியின் தொட்டிகளிலும், மற்ற வாட்டர் கேன்களிலும் அடைத்து வைத்து ஆளுமை செலுத்துகிறோம். காசுள்ள மனிதர்கள் குடி நீரை வாங்கிக் குடிக்கிறார்கள். பறவைகளும் விலங்குகளும் சிறு உயிரினங்களும் தண்ணீருக்கு எங்கு செல்லும்?

சரி. நீர் எங்குமே இல்லையா என்று கேட்கலாம். வெளியே நாம் பார்க்கும் நீர் அனைத்துமே நாம் வீடுகளில், அலுவகங்களில், தொழிற்சாலைகளில் பயன்படுத்தி கழிவாக வெளியிடப்பட்ட நீர் அல்லது இக்கழிவுகளால் மாசுபட்ட நீர்தான். விவசாய நிலங்களைக் கடந்து செல்லும் பாசன நீரும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் மாசடைந்து தான் உள்ளது.

இயற்கை ஒரு இடத்தில் கட்டிப் போடப்பட்டு அங்கு மட்டும் செயல்படுவதில்லை. இதை நாம் புரிந்துகொள்ள நீர் ஒரு சிறந்த உதாரணம். மாசடைந்த நீர் எல்லாப் பகுதுகளிலும் பாய்கிறது. நிலத்தின் உள்ளே இறங்குகிறது, நிலத்தடி நீருடன் கலக்கிறது. நிலத்தடி நீர் நகர்ந்து கொண்டே இருக்கிறது. பல மைல்கள் தாண்டி உள்ள கிணற்றின் ஊற்றுகளிலோ, குளத்தின் அல்லது நீர்நிலைகளின் ஊற்றுகளாகவோ வந்து கலக்கிறது.
இயற்கையில், பறவைகளும் நீரைப் போலவே கட்டிப்போடப்படாத ஒன்று. பறவைகள் ஆண்டுக்கு இருமுறை இலையுதிர் காலத்திலும் இலைதுளிர் காலத்திலும் பல்லாயிரக்கணக்கில் பல பறவைகள் வடக்கும் தெற்குமாக சில மைல்கள் முதல் பல ஆயிரம் மைல்கள் வரை பயணித்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று திரும்புகின்றன. வலசை வந்த இடத்தில் குஞ்சு பொறித்து தன் தாய் தேசம் திரும்பும் போது இளம் பறவைக் குஞ்சுகளே தன் முதல் பயணத்தில் பறவைக் கூட்டத்தின் முன்னே வழி காட்டிப் பறக்கின்றன. வியப்பு தான் மிஞ்சுகிறது. பல ஆபத்துகள் அடங்கிய ‘வலசை’ என்று வழங்கப்படும் இடம்பெயர்தலின் காரணங்களும் திருப்தியான விளக்கங்களும் இன்னும் விளக்கப்படாத வியப்புக்குரிய ஒன்று.

சென்னையில் நாம் பார்க்கும் பறவைகளில் வலசை வந்த வெளிநாட்டுப் பறவைகளும் அடங்கும். உலகமெங்கிலும் பறவைகளுக்கு நீர் அளிக்க பல உயிர்மநேயம் உள்ளவர்கள் தன் வீட்டு முற்றங்களிலும், வீட்டின் முன்னும் பின்னும், கூரை மீதும் கிண்ணங்கள் வைத்து நீர் ஊற்றி வைக்கிறார்கள். இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் கோடை காலத்தில் இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. குளிர் பிரதேசங்களில் நீர் உறைந்து பறவைகளுக்கு நீர் இல்லாமல் போவதால் வெதுவெதுப்பான நீர் கிண்ணங்களில் நிரப்பி வைக்கப்படுகிறது.

பூமியின் பெரும்பகுதி நீர்தான் என்றாலும் குடிப்பதற்கு ஏற்ற நீர் மிகவும் குறைந்த அளவே உள்ளது. நகரமயமாக்கலில் பல நீர்நிலைகளை இழந்துவிட்டோம். இந்த நீர்நிலைகளை நம்பி வாழ்ந்த பல பறவைகளைப் பற்றியும், பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வரும் பறவைகளைப் பற்றியும் சிறிது கூட நாம் சிந்திக்கவில்லை. பறவைகள் மரத்தில் கூடு கட்டும் என்று பொதுவாக அறிந்திருக்கிறோம். நீர் நிலைகளுக்கருகே வாழும் மீன்கொத்தி மண்மேடுகளில் படுக்கை வாட்டமாக சுரங்கம் போல் அமைத்து முடிவில் அகன்று இருக்கும் பகுதியில் முட்டையிடும் வழக்கமுள்ளது. வலசைப் பறவைகளான பூநாரைகள் அல்லது செங்கால் நாரைகள் (flamingo) ஒரு அடி உயரத்திற்கு களிமண்ணைக் கொண்டு கூம்பாக கூடமைக்கும். சூரிய வெப்பத்தில் காய்ந்து அடுப்புபோலிருக்கும் அதன் உச்சியில் குழி போல் அமைத்து முட்டையிட்டு கால்களை மடக்கி அமர்ந்து அடைகாக்கும். இன்னும் பல பறவைகள் தண்ணீரில் மிதக்கும் கூடுகளை அமைக்கும். நாம் பல காரணங்களுக்காக நீர் நிலைகளை அழிக்கும்போதும், நீர்நிலைகளின் தன்மையைக் கெடுக்கும்போதும் இப்பறவையினங்களை அழிவுக்குத் தள்ளுகிறோம்.

மீன்கொத்தியின் கூடு 

பூநாரைகளின் மண்கூடு  
நீரின்றி அமையாது உலகு என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. அனைத்து உயிர்களுக்கும் நீர் ஒரு அத்தியாவசியத் தேவை. பறவைகளின் உடல் வெப்ப நிலை பாலூட்டிகளின் உடல் வெப்ப நிலையை விட அதிகமிருக்கும். பாலூட்டிகளைப் போல உடலில் வியர்வைச் சுரப்பிகள் பறவைகளுக்கு இல்லை. பறவைகளுக்கு பாலூட்டிகளைவிட குறைவான நீரே தேவைப்படும். இருப்பினும் நீரே இல்லாமல் வாழ முடியாது. பறவைகளின் உடலில் நீர் இழப்பு தோலின் மேல்புறத்திலும், சுவாசிப்பதால் நுரையீரல் ஈரப்பதத்தையும் இழக்கும், உடல் கழிவு வெளியேற்றத்திலும் நீர் இழப்பு நடக்கும். வியர்வைச் சுரப்பிகள் இல்லாததால் பறவைகள் நீர் ஆவியாதலின் மூலமே உடல் வெப்பத்தை குறைத்துக்கொள்ளும். நீர் இழப்பு கோடை காலத்தில் இன்னும் அதிகமாகும். அளவில் பெரிய பறவைகளை விட அளவில் சிறிய பறவைகளே அதிக நீர் இழப்புக்கு ஆட்படுகின்றன (surface area to volume ratio). நீர் இழப்பால் (dehydration), பறவைகள் சோர்வடையும், மயங்கி விழும், இறக்கக்ககூட நேரலாம். நீர் இழப்பை ஈடு செய்ய பறவைகள் நீர் குடிக்கும், நீரில் குளித்து சிறகுகளை நனைத்துக்கொள்ளும்.

நீரில் குளிப்பது தன் சிறகுகளில் உள்ள தூசுகள், அழுக்குகள் நீக்கவும் சீராக பராமரிக்க உதவும். தன் அலகுகளால் சிறகுகளைக் கோதி விட்டுக்கொள்ளும் போது எண்ணெய் சுரப்பிகளிலிருந்து வரும் திரவம் சீராக பரவச் செய்து சிறகுகளின் நீரில் நனையாத தன்மையைக் காக்கும்.


அலகை தண்ணீரில் முக்கி மேலே தூக்கிக் குடிக்கும்
அமெரிக்க ராபின்கள் 
பறவைகள் இரண்டு முறைகளில் நீர் குடிக்கும். கோழிகள் தண்ணீர் குடிக்கும்போது அலகைத் தண்ணீருக்குள் மூழ்கியபின் தலையை மேலே தூக்கிக் குடிக்கும். புறா வம்சத்தைச் சேர்ந்த பறவைகள் மாடுகள், குதிரைகள் போல நீர் குடிப்பது போல அலகைத் தண்ணீருக்குள் வைத்து உறிஞ்சிக் குடிக்கும். மணற்கோழிகள் (sand grous) காலையும் மாலையும் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் தாகம் தீர்த்துக்கொள்ள ஒரு குறிப்பிட்ட குட்டைக்கு நாலா புறங்களிளிருதும் பறந்து வந்து நீர் பருகும். மணற்கோழிகளில் ஆண் பறவைகள் நீர் அருந்திவிட்டு தன் வயிற்றுச் சிறகுகளை நீரில் நனைத்துச் செல்லும். நீர்நிலைக்கு பறந்து வர முடியாமல் கூட்டில் இருக்கும் சிறு குஞ்சுகள் ஆண் பறவையின் வயிற்றை நக்கிக் குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும். கூழைக்கடா (pelican) பறவைகள் தன் பெரிய அலகை திறந்து வைத்துக்கொண்டு மழை நீரைக் குடிக்கும். மிகச் சிறிய சிட்டுகள், இலைகளில் நிற்கும் பனிதுளிகளைக் குடிக்கும். பொதுவாக அனைத்து பறவைகளும் நல்ல நீரையே குடிக்கும். கடல்காகங்கள் (sea gulls) மட்டும் உவர்ப்பான கடல் நீரைக் குடிக்கும். தேன்சிட்டுக்கள் (humming bird) உணவே பூக்களில் உள்ள இனிப்பான திரவம்தான். நீர் கிண்ணங்கள் வைப்பது போல தேன் சிட்டுகளுக்கு இனிப்பு நீர் கிண்ணங்களில் வைப்பது உண்டு.

 
ஆண் மணற்கோழியின் வயிற்றுச் சிறகை நக்கி
நீர் அருந்தும் குஞ்சுகள்
 
பழங்கள், பூச்சிகள் மற்றும் ஊண் உண்ணும் பறவைகளுக்கு தேவையான பெரும்பகுதி நீர் அதன் உணவிலிருந்தே கிடைக்கிறது. கொட்டைகள், தானியங்கள் உண்ணும் பறவைகளுக்கு நீர் அதிகம் தேவைப்படுகிறது. பறவைகளின் சிறுநீரகத்தின் முக்கிய வேலையே நைட்ரோஜன் கழிவுகளை பிரித்து தாது உப்புக்களை சமநிலையில் வைத்து (சிறு)நீரை சிறிய அளவில் வெளியேற்றுவதே ஆகும். சிறுநீரின் யூரிக் அமிலத்தை வெளியேற்ற பறவைகள் அதிக சக்தியை செலவிட வேண்டியுள்ளது. கோடை காலங்களில் கட்டிடங்களில் மேலுள்ள நீர்த்தொட்டிகளில் பறவைகள் விழுந்து இறந்துவிடுவதை கவனித்திருக்கலாம். அவையெல்லாம் தண்ணீருக்காக தேடி அலைந்து தொட்டியில் உள்ளே நுழைந்து இருக்கும். வெளியே வர முடியாமல் இறந்திருக்கும்.


      

பறந்த வண்ணம் தேன் உறிஞ்சும் தேன்சிட்டு 
தன் நீண்ட நாவினால் நீர் உறிஞ்சும் தேன்சிட்டு 


பறவைகளுக்கு குறிப்பாக காகங்களுக்கு அன்றாடம் உணவு வைக்கும் மதப்பழக்கம் நம்நாட்டில் உண்டு. ஆனால் தண்ணீர் வைக்கும் பழக்கமில்லை. நகரங்களில் பறவைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. ஆகவே பறவைகளுக்கு ஒரு கிண்ணத்தில் நீர் வைக்கலாம். அதை இரண்டு நாளைக்கு ஒருமுறை சுத்தம் செய்து புது நீர் ஊற்றி வைத்தால் எந்த வித நோய்க்கிருமிகள், லார்வா மற்றும்  கொசு வளர்ச்சியைத் தடுக்கும்.  நகர வாசிகள் கோடைக் காலத்திலாவது கிண்ணங்களில் தண்ணீர் வைத்து பறவைகளின் தாகத்தைத் தணிக்கலாம்.

குறிப்புகள்:
  1. ஸலீம் அலி, லயீக் ஃபதஹ் அலி, “பறவை உலகம்”, நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, https://archive.org/details/CommonBirdsTamil
  2. ரெய்ச்சல் கார்சன், தமிழில் பேரா. சா. வின்சென்ட், மௌன வசந்தம், எதிர் வெளியீடு, ISBN-13 9788192868080
  3. http://www.rspb.org.uk/makeahomeforwildlife/advice/helpingbirds/water/
  4. http://web.stanford.edu/group/stanfordbirds/text/essays/Drinking.html

photo credits
1. http://indianbirdsphotography.blogspot.in/2010/04/delhibirdpix-male-chestnut-bellied.html 
2. http://www.poweredbybirds.com/synchronized-drinking-team/ 
3. http://besgroup.org/wp-content/uploads/KfisherWT-nesting-hole-AmarSingh.jpg
4. http://imgarcade.com/1/flamingo-nest/
5. http://d3u5xmnnxiuz0w.cloudfront.net/wp-content/uploads/2015/01/how-animals-drink-their-water-62557.gif
6. http://d3u5xmnnxiuz0w.cloudfront.net/wp-content/uploads/2015/01/how-animals-drink-their-water-62557.gif
7. http://www.learner.org/jnorth/images/graphics/humm/RThompson_forktongue.gifதாதூண் பறவை : தேன் சிட்டு,  தாது - பூவில் இருக்கும் தேன் - உண்ணும் பறவை 
அகநானூற்றுப் பாடல் வரிகள் 
"தாதூண் பறவை பேதுறல் அஞ்சி
மணி நாஆர்த்த மாண்வினைத் தேரன்"
மணிகள் ஒலிக்க வேகவேகமாகத் தேரோட்டி வந்தபோது, மணியோசையில் சிறு பறவைகள் பதறித் திரிவதைப் பார்த்து மனம் வெதும்பி, மணியின் நாக்குகளைக் கட்டச் சொன்ன தலைவனைக் குறித்த பாடல். 


Wednesday, December 31, 2014

புது வருட ரெசல்யூஷன் :)

நியூ இயர் வருது உங்கள் ரெசல்யூஷன் என்னங்க? 
640*780 HD. தம்பி என் மொபைலுக்கு தான கேட்டீங்க? டீவி க்கு 1084 இருக்கும். என் வீட்டுல வேற எந்த ரெசல்யூஷனும் இல்லை.
உங்க புத்தாண்டு சபதங்கள் என்ன? 
யாருகூடவும் நமக்கு பகை இல்லைங்க தம்பி. அதனால "இந்த நாள்.... உன் காலண்டர்ல குறிச்சி வச்சிக்கோ......" அப்டினு சபதம் எதுவும் விடலை. 
உங்களுக்கு புது வருஷ கொண்டாட்டம் எதுவும் இல்லைங்களா? கொண்டாடலாமுன்னு ஒருதரம் ஆரம்பிச்சேன். இருபது முப்பது நாளுக்கு ஒருமுறை கொண்டாடும்படி ஆகிப்போச்சி. 
என்னண்ணே சொல்றீங்க? 
சீன நியூ இயர், சிறீலங்கா நியூ இயர், கன்னட நியூ இயர், முஸ்லீம் நியூ இயர், கிரிஸ்டீன் நியூ இயர், தமிழ் நியூ இயர், இப்படியே ஆப்பிரிக்கா, அண்டார்க்டிக்கா, நெப்டியூனின் நியூ இயர் வரைக்கும் கொண்டாடிட்டேன். இதுக்கெடயிலே எனக்கு 30 பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்துச்சி, இப்போ "அண்ணனை  வாழ்த்த வயதில்லை ...." அளவுக்கு ஆகிப்போச்சி பாத்துக்கோங்க. இதனால ஐநா வுக்கு போட்டியா பல தினங்களை கொண்டாடிட்டேனு கிப்டு எல்லாம் வந்து குடுத்தாங்க தம்பி. Saturday, November 8, 2014

அதிமதுரம் Liquorice


அதிமதுரம்: தாவரப்பெயர்:Glyeyrrhiza glabra.ஆங்கிலத்தில் Liquorice, ஹிந்தியில் மூலேதி (मुलेठी) இது ஒரு சர்வதேச மருத்துவ மூலிகை. உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கொடிவகையைச் சார்ந்தது. நட்ட 3 (அ) 4 ஆண்டுகளில் அறுவடை செய்யப்படும்.
எந்த மண்ணிலும் நன்றாக வளரும். தொட்டிகளில் மாடியில் வளர்த்து கீழே தொங்கவிடலாம். முல்லைக்கொடி போல மாடிமேலே ஏற்றலாம். வீட்டின் முன் ஆர்ச்சில் படரவிடலாம். அழகுக்காகவும் மருந்துக்காவும் வளர்க்கலாம். 

பயன்படும் பாகங்கள்: வேர்த்தண்டு மற்றும் வேர்கள்.தண்டு, கிழங்கு பூமியின்3,4 அடிஆழத்தில் பரவலாகக்கிடைக்கும். 

இலைகள் இனிப்பு சுவையும் வெப்பத்தன்மையும், வேர் இனிப்பு சுவையும் குளிர்ச்சித்தன்மையும் கொண்டது.  

சீன மருத்துவத்தில் உடலைப்'புதுப்பிக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது.

பல்வேறு மருத்துவப் பொருள்களுடன்அதிமதுரம் சேர்க்க ஓராயிரம் நோய் போக்கும் என பாட்டி வைத்தியம் கூறுகிறது.

அதிமதுரப் பொடி சித்தாவிலும்,அலோபதியிலும் பயன்படுத்தப்படுகிறது. சுவைக்காக ஐஸ்கிரீம்,,மிட்டாய்கள், சிரப்புகளில் அதிமதுரம் சேர்க்கப்படுகிறது.
பயன்: மலமிளக்கி, கபமகற்றி, வரட்ட்சியகற்றி, உரமாக்கி.

வேரின் கஷாயம், இருமல்,சளி,தொண்டை பிரச்சனைகள் தீரும். கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும். நுரையீரலுக்கு நல்ல மருந்து. நாட்பட்ட மூட்டுவலி குணமாகும். வேரின் பொடி+குங்குமப்பூ+பால் இக்கலவையை வழுக்கையில் தடவ சிலவாரங்களிலேயே முடிகள் தோன்றும். வேரின் பொடி+வெல்லம் மலச்சிக்கல் தீரும். வேரின் பொடி+கடுகு எண்ணெய் கால் ஆணி குணமாகும். அதிமதுரம்+மிளகு+தேன் வரட்டு இருமல் குணமாகும். அதிமதுரம்+தேவதாரு சுகப் பிரசவம் ஆகும். அதிமதுரம்+பால் கண்பார்வைக் குறைவு நீக்கும், ஒற்றைத்தலைவலி தீரும். குளிக்கும் நீரில் அதிமதுரம் 1/2மணி நேரம் ஊரவைத்து குளிக்க நாள் முழுதும் உடல் மணமாக இருக்கும். நோய்க்கிருமிகளை அழிக்கும், எளிமையாகப் பயன்படுத்தினாலே பல நோய்கள் தீரும் என ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வீக்கம், சுளுக்கு, ரத்தக்கட்டு போக்கும்.       

உரிக்கப்பட்ட தோலுடன்விதைகள்
என்னிடம் இயற்கையான முறையில் விளைந்த அதிமதுர விதைகள் ஒன்றரை கிலோ உள்ளன. தேவையை கோட்டூர்புரம் ட்ரீ பார்க்கில் பகிர்ந்து கொள்ளலாம். 
அதிமதுரவிதை
கொய்யா மரத்தில் படர்ந்துள்ள அதிமதுரக்கொடி
மூன்றுஆண்டு ஆனகொடியின் தண்டு
:தானாக முளைத்த 2 மாதக்கொடி

மாடித் தோட்டமும் நகர மக்களும் 

பதிவைப்  படிக்க இங்கே செல்லவும்

http://vaidheeswaran-rightclick.blogspot.in/2014/02/kitchen-garden-organic-small.htmlWednesday, June 18, 2014

வட்டப்பாத்தி விவசாயமுறை - Permaculture


வட்டப்பாத்தி விவசாயமுறை பயிற்சி முகாம்

    திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தில் திருவேங்கடம் அவர்கள் நிலத்தில் நம்மாழ்வாரின் "வட்டப்பாத்திவிவசாயமுறை பயிற்சி முகாம் 15.06.2014 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் மலை 5.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, புதுவை மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள், இயற்கை விவசாய ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பயிற்சி இடம் தேக்கு மரத் தோப்பு. அதைச் சுற்றி நாற்புறமும் கரும்பு வயல், குளிர்சாதன அரங்கு போன்ற இயற்கைச் சூழல். இயற்கை அன்னையை வணங்கி பயிற்சி துவங்கியது.முதலில் நிலத்தை வளப்படுத்துதல், காலத்திற்கேற்ற பயிர் வகைகள், நடும் முறைகள், நிலத்தில்  முதலில் உரிமையாளர் நடுதல், அதன் பின் மற்றவர் நடுதல்பற்றி கூறப்பட்டது. மூலிகை, சிறுதானியம், செடி, கொடி, மரம், பூ, காய்கறி, கீரை, இவைகள் நடுவதற்கான மாதம், கிழமை, நேரம் கூறப்பட்டதுடன் பனிக்காலத்தில் நடக்கூடாது என்பதற்கான காரணம் கூறப்பட்டது. இச்செய்திகளை மரம் பற்றிய நூலில் இருந்து ஒருவர் வாசிக்க, திருவண்ணாமலை மாவட்ட மரம் வளர்ப்போர் சங்கத்தைச் சேர்ந்த திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் எளிய, அரிய விளக்கங்கள் அளித்தார். 


முகாமில் உரையாற்றியவர்கள் நம்மாழ்வாரை நினைவு கூறத்தவறவில்லை. தலையாம்பள்ளம் உழவர் மன்றம் அவரால் துவக்கப்பட்டது என்ற பெருமைக்குரியது தலையாம்பள்ளம் உழவர் மன்றத் தலைவர் திரு. பன்னீர் அவர்கள் தலைமையில் மன்றச்செயலர் திரு. சம்பத் அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். அயராத உழைப்பால் அபெக்ஸ் சுரேஷ்குமார் அவர்கள் பயிற்சி முகாமை ஒருங்கிணைத்ததோடு மட்டுமின்றி மரக்கன்றுகள், காய்கறி, கீரை, சிறுதானியம், சீரகச்சம்பா, குதிரைவாலி, நெல் விதைகள் அனைவருக்கும் வழங்குவதற்காக கொண்டுவந்து வைத்திருந்தார். மேலும் அவர் மண்புழு உரம் வாங்கி வந்து போடத்தேவையில்லை. சாக்கு பையை சதுர துண்டுகளாக வெட்டி, சாணம், கோமியம் வெல்லம் கலந்த கரைசலில் நனைத்து நிலத்தில் ஆங்காங்கே போட்டு தினமும் நீர் தெளிக்க மண்புழுக்கள் தானே அங்குவந்து உரத்தயாரிப்பில் ஈடுபடும் என்றார். அத்தியந்தல் அரசு விதைப் பண்ணையில் பணிபுரியும் முனைவர் யோகலட்சுமி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 

காலை 10.30 மணி அளவில் அனைவருக்கும் சிறுதானிய உணவு, ராகிகூழ், ஊறுகாய், வெங்காயத்துடன் போதிய அளவு செவிக்கு உணவு இருக்கும் போதே வயிற்றுக்கும் வழங்கப்பட்டது.
 மரம் வளர்ப்போர் சங்க செயலர்  திரு. அமரேசன் அவர்கள் மண்புழு உரம், இயற்கை விவசாயம் பற்றி விரிவாகப்பேசினார். நல்லவன்பாளையம் திரு சின்ராஜ் அவர்கள் தன் உரையில் மீன்கசடு 10கிலோ வெல்லம் இத்துடன் நீர் ஊற்றி கலந்து மீன் அமிலம் தயாரித்தல். இதில் 10 மில்லியுடன் 1லிட்டர் நீர் சேர்த்து பயிருக்கு தெளிக்க பயிர் நன்கு வளரும். இலைச்சருகு மூடாக்கினால், 1.மண் ஈரம் காக்கப்படுதல் 2.களை இல்லை 3.உரம் கிடைக்கிறது. சம்பங்கி, மல்லி நடவில் தண்ணீர் போகும் காலில் பனை ஓலை வைத்தால் ஈரம்காக்கும். வெங்காய பூண்டு சருகு தென்னைக்கு மூடாக்குபோட பெரிய காய்கள் காய்க்குமென தன் அனுபவத்தைக் கூறினார். மேலும் மண்புழு உரம் தயாரிக்க பிளாஸ்டிக் தொட்டி வேளாண் அலுவலரை அணுகிப் பெறலாம் என்ற தகவலையும், புளிய மரங்கள் குறைந்து வருவதால் அவற்றை வளர்த்தல், 4 மூட்டை பனங்கொட்டைகளை சாலை ஓரம் போட்டது, பனங்கொட்டை சேகரித்து அனுப்புதல், பனை 25 ஆண்டுக்குப்பின் காய்க்கத்தொடங்கி 200, 300ஆண்டுகள் காய்க்கும்,இப்போது நுங்கின் விலை அப்போது விலை கூறி லாபக்கணக்கு பற்றியும், செங்கல்சூளையால் பனை அழிவு பற்றியும் கூறினார்.

திரு. நெல் ஜெயராமன், திருத்துறைப்பூண்டி நெல் திருவிழா 250 வகை நெல் பற்றி பேசப்பட்டது. அவலூர்பேட்டை திரு. சிவநேசன் அவர்கள், தன் தோட்டத்தில் இருந்து பாரம்பரிய கீரை விதைகளை, ஒரு பெண் விவசாயிக்கு கொடுத்தது, நன்கு வளர விவசாயி யூரியா போடலாமா? என கேட்கும் போது ஒரு பகுதி யூரியா போடு. மறு பகுதி அமிர்தக்கரைசல் ஊற்றச்சொன்னது, அமிர்தக் கரைசல் ஊற்றிய கீரை நல்ல நிறத்துடனும் நல்ல சுவையுடன் இருந்ததால், வாங்கியவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டது பற்றி தன் அனுபவத்தைக் கூறினார். கீரை விளைவித்த பெண் விவசாயி திருமதி ருக்குமணி பயிற்சிக்கு வந்திருந்தார். இனி நான் இயற்கை விவசாயம் தான் செய்யப்போகிறேன் என்று கூறினார்.       கலசபாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் திரு.பச்சையப்பன் அவர்கள்,வரகு, சாமை போன்ற சிறு தானியங்கள் பயிரிடுதல், மானாவாரி நிலங்களைப் பயன்படுத்துதல், சீரகச்சம்பா, பொன்னி பயிரிட வேண்டுமென வலியுறுத்திக் கூறினார். செங்கம் திரு. இளங்கோவன் அவர்கள் 10 ஏக்கர் நிலத்தில் இயற்கை உரம் மட்டுமே போட்டு பயிர் செய்வதாகவும் தென்னை மரக்கழிவுகளே அதற்கு உரமாகப் பயன்படுத்துவதாகத் தன் அனுபவத்தைக் கூறினார். கலசபாக்கம் திரு.ராஜேந்திரன் அவர்கள் விவசாயிகள் ஒருவருக்கு ஒருவர் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டும். டீக்கடையில் அரசியல் பேசாமல் விவசாயம் பற்றி பேசவேண்டும். அரசு கொள்கை, உற்பத்தி பெருக்கம் இன்மை, விற்பனைவிலை உயர்வு, விவசாயியின் வாங்கும் திறன் உயர்தல் பற்றி ஆவேசமாகப் பேசினார். பாசுமதியைவிடச் சிறந்தது சீரக சம்பா. மூட்டை ரூ. 3000 என்றால் ஏற்றுமதிமூலம் ரூ. 5000 கோடி கிடைக்கும். இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றியது பொன்னி நெல் ரூ 1 கோடிக்கு ஏற்றுமதியானது. உற்பத்தியைவிட 30% லாபம் வேண்டும். டீலக்ஸ் நெல் வேண்டாம். தாய்லாந்தில் ரூ. 2000 கொடுத்து நெல் கொள்முதல் செய்கின்றனர் என உரையாற்றினார்.


          திரு. ராஜேந்திரன் அவர்கள், பாமாயில் இறக்குமதியைத் தடை செய்ய தீர்மானம், கடலை எண்ணெயை சந்தைப்படுத்துதல், ஆமணக்கு பயிரிடுதல், பூக்கள், பூண்டு, வெங்காயம், அரிசி விலை ஏற்றம் கூடாது. இது அரசின் கொள்கை. பர்மா உளுந்து, துவரை, மொச்சை அரசு வாங்கத்தயாரா? எனவும் விவசாயிகள் கஷ்டத்தை குறைத்தல். குறைந்த செலவில் அதிக லாபம் பெறுதல் பற்றியும் விளக்கிக் கூறினார். திரு. சுப்பிரமணியன் அவர்கள், கிராமம் முன்னேறுவதை அரசு விரும்பவில்லை, நெல் விலை ஏற்றமுடியாது என்கிறது. வேளாண்மை பற்றிய புதிய செய்திகள் அறிந்து இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்தல், செயற்கை உரம் போடாமல் பயிர் செய்தல், அரசின் கலப்பின ஒட்டுவகை (HYBRID) பசுமைப் புரட்சி திட்டம் வந்துதான் நான் வீழ்ச்சி அடைந்தேன் என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பச்சை மிளகாய் 1ஏக்கரில் 1ஆண்டுக்கு ரூ5 லட்சம் பெறலாம். நெல்லாக விற்காமல் அரிசியாக விற்க வேண்டும். விலையை நாமே நிர்ணயிக்க வேண்டும் எனும் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.


        நெல் கிருஷ்ணமூர்த்தி எனும் பட்டமும் பாராட்டும் பெற்ற திருவாளர் அவர்கள், கெட்டுப்போன நிலத்தை மாற்றினார். 250 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்துவருகிறார். தேவைக்கு பார்வையிடலாம். திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் ஆன்மீகத்தை வளர்த்தார். நம்மாழ்வார் வியசாயத்தை வளர்த்தார். ஆன்மீகமும் விவசாயமும் ஒன்று என்று தன் பேச்சை துவக்கி, குழந்தை முதல் மாத்திரை, அனைவரின் உடலிலும் இது இறுதிவரை. செயற்கை உரத்தால் விளைந்த விஷக்கீரையை உண்டதால் மருத்துவருக்கு வருமானம். வாழைத்தண்டு உண்டால் ஏதும் சரியாகவில்லை. காரணம் செயற்கை உரத்தால் அது விஷமானது. உரம் போட்டது போடாதது  பார்த்தாலே தெரியும். இயற்கை வேளாண்மையில் இனிக்கும் செயற்கையில் கசக்கும். இயற்கை வேளாண்மையால் நீர் பாய்ச்சாவிட்டாலும் வாழை காடு மாதிரி வளர்ந்திருக்கிறது. தழை உரம்,எரு இடாததால் நிலம் கெட்டது. மண் வளப்படுத்த அமிர்த கரைசல் இட்டால் போதும். நிலம் நலம் பெறும். மீன் அமிலம் அடிக்கும் பச்சையத்திற்கு பூச்சி வராது. யூரியா அடிக்கும் பச்சையத்திற்கு பூச்சி வரும். நிலத்தை வளப்படுத்தாமல், பஞ்சகவியம், மீன் அமிலம், அமிர்த கரைசல் மட்டும் இட்டால் பலன் இல்லை. பாரம்பரிய நெல், மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, குள்ளங்கார் நட்டேன். விதை விற்பனை செய்ய கோட்டை கட்டுதல், கலவை சாதங்கள் செய்தல் நிகழ்ச்சி நடத்தி அனைவரையும் வரவழைத்தேன் என்று கூறினார். வறுத்த பொரி அரிசி முகாமில் வழங்கப்பட்டது.  


        நெல்லாக விற்காமல் அரிசியாக விற்றால் லாபம் அதிகம்.   75 கிலோ நெல்லில் உரித்தல் மூலம் 55 கிலோ அரிசி கிடைக்கிறது. 1கிலோ  ரூ 70. நெல்லைவிட  வைக்கோல் அதிகம். மாடுகள் நன்றாக உண்கிறது. நெல்வயலில் உள்ள களைகளைப் பிடுங்க வேண்டாம்.  18 வகையான மூலிகைகள் நெல்வயலில் உள்ளன. தங்கபஸ்பம் இருக்கும். வல்லாரை, கோரைக்கிழங்கு போன்றன. கோரைக்கிழங்கின் 1 கிராம் தூள் உண்ண புத்திகூர்மை பெறும், முகம் பொலிவு பெறும். பயன்படுத்தி பலன் பெறுக. செயற்கை உரம்போட்ட வயலின் வைக்கோல் நஞ்சு. உண்ணும் பசுவின் பாலும் நஞ்சு. குடிக்கும் குழந்தை முதல் அனைவருக்கும் நஞ்சு பரவுகிறது. பற்பசையில் நிகோடின் இருக்கிறது.  இதனால் அதற்கு அடிமையாகிறார்கள். கோல்கேட்டால் பல் மருத்துவ மனைகள் பெருகி உள்ளன. நான் குச்சியால்தான் பல்துலக்குகிறேன். வேம்பு பல் துலங்கும், ஆல் ஈறு இறுகும், வேல் பல் உறுதி, நாயுருவி பல் கூச்சம் போக்கும். பாரம்பரிய அரிசியை வாங்க மக்கள் என்னை நாடி வருகின்றனர். ஒருநாள் ஆங்கில மருத்துவர் வயலை சுற்றிப்பார்க்க வந்தார். இது என்ன வாழை? காடு போல் உள்ளது. அது காடு இல்லை. மருந்தகம். என் நோய்க்கு இதில் உள்ள மூலிகைகள்தான் மருந்து. நான் இதுநாள்வரை மருத்துவமனைக்கு சென்றதில்லை. மருத்துவரை தங்களுக்கு எத்தனை குழந்தைகள் எனக்கேட்ட போது 3ஆண்டுகளாகிறது. இன்னும் ஏதும் இல்லை என்றதும் வயாக்ராவிற்கு இணையான பூனைக்காளி விதைகள் 200 கொடுத்து நாள் 1க்கு 1விதைமட்டும் உண்ணுமாறு சொல்லி. தன் நீண்ட நெடிய அனுபவங்களைக் கூறி விளக்கினார். சளியால். தொண்டை சரியில்லாத நான் எப்படி பேசப்போகிறேன் என்று இருந்தேன். முகாமில் வழங்கிய வெறும் அவல் உண்டவுடன் தொண்டை சரியான அனுபவத்தையும் கூறினார்.வட்டப்பாத்தி  அமைப்பது எப்படி?

        வானகப் பயிற்சியாளர் புதுச்சேரி திரு. செங்கீரன் அவர்கள் காலை முதலே அளவு நாடாவுடன் மண்வெட்டி, கடப்பாரை சகிதம் சிலருடன் வட்டப்பாத்தி அமைப்பதிலேயே இருந்தார். பேச்சு முடிந்து, பசி நேரம் என்பதால் வட்டத்தட்டில் உருண்டை வயிற்றுக்கு உணவாக, தக்காளி சாதமும், தயிர் சாதமும் வழங்கப்பட்டன. உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பது பழமொழி. எந்த மயக்கமும் இன்றி ஆர்வம் காரணமாக தொடர்ந்து வட்டப்பாத்தி நேரடி செயல் விளக்கம் நடை பெற்றது. நிலத்தின் மையத்தில் ஒரு புள்ளியில் வலிமையான குச்சி நடப்பட்டது. அனைவரும் வட்டமாக நிற்க கைதட்டலுடன் செயல்முறை விளக்கத்துடன் துவங்கியது. குச்சியில் கயிற்றைக் கட்டி 2அடி அளவில் ஒரு வலிமையான கூரான குச்சி கட்டி கயிறு தளராமல் குச்சியால் வட்டம் வரையப்பட்டது. பின்னர் மையத்திலிருந்து 6 அடி அளவில் ஒரு வட்டம் வரையப்பட்டது. முதல் வட்டத்திலிருந்து மண்ணை அடுத்த வட்டத்தில் போட்டு மேடாக்கப்பட்ட்து. 2 அடி வட்டம் நடை பாதை. 4 அடி வட்டம்  பயிர் நடும் பாதை. நடை பாதையில் நடுதல் கூடாது. நடும்பாதையில் நடக்கக்கூடாது. இது நம்மாழ்வாரின் சுலோகம். அடுத்து மையத்திலிருந்து 8 அடி அளவில் ஒரு வட்டம் வரையப்பட்டது.  அடுத்து மையத்திலிருந்து 12 அடி அளவில் ஒரு வட்டம்   வரையப்பட்டது. அடுத்து 12 அடி, 14 18 என்ற அளவுகளில் வட்டங்கள் வரையப்பட்டன. 2 அடி வட்டம் பள்ளமாகவும் .4 அடி வட்டம் மேடாக விளிம்பு ஓரங்கள் சாய்வாக  இருக்கும்படியும் அமைக்கப்பட்டன (242) எனும் அளவில், நடை பாதை - நடும் பாதை - நடை பாதை என மாறி மாறி வரும் வகையில்) பயிற்சிக்கு வந்தவர்கள் பாத்தி அமைக்கும் பணியில் ஈடுபட்டு பயிற்சி பெற்றனர். சமமான நீர் பாய நடும் பாதையில் 2 அடி அகலத்தில் வழி மேட்டிலிருந்து பள்ளம்   நோக்கி நீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. நடும் பாதையில் இலைச்சருகு மூடாக்கு போட்டு, நீர் தெளித்து, அதன் மேல் எரு போடப்பட்டது. வட்டப்பாத்தி முறையை அறிமுகப்படுத்தியவர் ஆஸ்திரேலியப் பேராசிரியர் பில் மொல்லிசன் (Bill Mollison) ஆவார். இதன் பயன்: பல் பயிர் சாகுபடி; வேர் அழுகல் வராது; நல்ல காற்றோட்டம்; ஒரேமாதிரியான சூரிய வெளிச்சம், நீர் சிக்கனம், ஏர் உழவு தேவையில்லை, பலபயிர் சாகுபடி. 20 ஆண்டுகள்  தொடர்ந்து வைத்திருக்கலாம். 2 ஆண்டுகள் கழித்து மண்ணை பிளந்து, எரு இட்டு, மண் மேட்டை உயர்த்தலாம்.


        கிழங்கு வகைகளை வட்டவிளிம்பின் ஓரங்களில் நடுதல். ஒரேவகை பக்கத்தில் பக்கத்தில் நடக்கூடாது. வெண்டை, கத்தரி, பீன்ஸ், தக்காளி, மிளகாய், கீரை செடி அவரை, “இஞ்சிகண்டிப்பாக நட வேண்டும். மூலிகைச் செடிகள் நடல். இவைகளைத் தேவையான இடைவெளியில் நடுதல், பப்பாளி, முத்துக் கொட்டை நட பூச்சி அண்டாது. செண்டு மல்லி, சாமந்தி நட பூச்சிகளைக் கவரும். பயிர்களில் அண்டாது. பூச்சி மருந்து தேவையில்லை. சிறு தானியம், கரும்பு, பச்சைப்பயிறு நட, நைட்ரஜனை கிரகித்துக் கொடுக்கும். சணப்பை, துளசி, தக்கைப்பூண்டு, பூச்சி கட்டுப்படுத்த முருங்கை, வாழை நடுதல். நிலத்தைச் சுற்றிலும் வாய்க்கால் வெட்டி, பக்கத்து நிலத்தின் செயற்கை உரம் மழை நீரால் அடித்து வராமலும், நம் இயற்கை உரம் அடித்துச் செல்லாமலும் பாதுகாத்தல் பற்றி விரிவாகக் கூறி விளக்கியதோடு, சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.


        திரு பச்சமுத்து அவர்கள், ரசாயன உரத்தால் மண்ணின் உயிர் தன்மை கெட்டது, டிராக்டர் கொண்டு உழுது, மண் கெட்டியானது, மண் புழு அழிந்தது. மண்மலடாகியது எனக் கூறி, டிராக்டரால் உழாமல், மாடு கொண்டு உழுதல் அல்லது பவர்டில்லரால் உழுதல், நிலத்தில், கிடை மடக்குதல். இதனால் மண்வளம் காத்தலின் அவசியத்தை வலியுறுத்தினார். அத்தியந்தல் அரசு விதைப்பண்ணையில் பணியாற்றும், விதை நேர்த்தியில் முனைவர் பட்டம் பெற்ற யோகலட்சுமி அவர்கள் 2013 அக்டோபர் முதல் விதைப்பண்ணை செயல்படுவது, சிறுதானியம் பயன்பாட்டு மையமாக, ஜவ்வாதுமலை, சேலம், தர்மபுரி, இவைகளுக்கு மையமான பகுதியாக திருவண்ணாமலையில் தொடங்கப்பட்டது, இங்கு பாரம்பரிய விதைகள் தவிர புதிய விதைகள் கண்டுபிடித்தல் பற்றி ஆய்வு நடைபெறுவது தொடர்பாகவும் கூறி விளக்கியதோடு விதைநேர்த்தி, 1 எக்டருக்கு 4 டன் மகசூல் கிடைக்கும் ராகி ரகங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட 65 நாட்களில் அறுவடைக்கு வரும் ரகங்கள், சாமை கிலோ ரூ 80,  100 என்ற விலையில் விற்கப்படுவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கும் அரசின் நோக்கம் பற்றி கூறியதோடு சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.        அடுத்து பஞ்சகவியம் தயாரித்தல் செயல் விளக்கத்தை திரு. செங்கீரன் அவர்கள் அளித்தார். இம்முறையை அறிமுகப்படுத்தியவர் டாக்டர் கொடுமுடி திரு. நடராசன் அவர்கள் ஆவார். பஞ்சஎன்பது ஐந்து. பசுவின் பால், தயிர் நெய், கோமியம், சாணம், இவை முறையே 5,4,3,2,1  என்ற விகிதத்தில் கலந்து கொடுக்க மனிதன் நோயின்றி நலம் பெறுவான். உறவின் மறைவால் 30 நாட்கள் சரியாக உண்ணாமல், உறங்காமல் உடல் நலன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீத்தார் இறுதி வழிபாட்டில் வழங்க, உண்டு நலன் பெற்றது அந்தக்காலம். இப்போதும் நடை முறையில் இருந்தாலும் போதுமான அளவு உண்பதில்லை. பாழாய்ப் போனது பசு வாயில்என்பது பழமொழி. மனிதன் பயன்படுத்தாமல் போனது பயிர் வயலில்என்பது புது மொழி. பஞ்சகவியம் 5 பொருட்களோடு, மேலும் பல பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படுவது. இதனால் பயிர்கள் அதிக வளர்ச்சி, பூக்கும் பருவம் நீடித்தல், குறைந்த செலவில் அதிக லாபம், நீர் சேமிப்பு சூழல்மாசு தடுப்பு, போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.பஞ்சகவியம் தயாரித்தல்

      நாட்டுப்பசுவின் 5 கிலோ சாணியை 1/4. கிலோ நெய்யுடன் முதல்நாள் பிசைந்து வைத்து, அதை ஒரு பிளாஸ்டிக் கேனில் போட்டு ( பானை பயன்படுத்துவது சிறப்பு ) அதனுடன் 3 லிட்டர் நாட்டுப்பசுவின் கோமியம், 2 லிட்டர் பால், 2 லிட்டர் தயிர், 1/2 கிலோ நாட்டு சர்க்கரை, 1 லிட்டர் கரும்பு சாறு, 1 லிட்டர் இளநீர், 1 லிட்டர் தேன், 1//2 லிட்டர் திராட்சை ரசம் ஊற்றினார். ஒவ்வொரு பொருளாகப் போடப்போட அதை கையால் நன்கு கலக்கிக்கொண்டே இருந்தார்.  இதனுடன் போட்ட அனைத்து பொருளுக்கும் சமமாக சுமார் 16 லிட்டர் நீர் ஊற்றிக் கலந்து பஞ்சகவியம் தயாரித்தல் செயல் விளக்கத்தை நிறைவு செய்தார். இதை காலையில் தயார் செய்தல், நிழலில் வைத்தல், தினமும் சூரிய உதயத்திற்கு முன்னும், சூரிய அஸ்தமனத்திற்கு பின்னும் கலக்குதல், 21 நாள் கழித்து இதை நீருடன் கலந்து பயிருக்கு ஊற்றுதல் அல்லது பாய்ச்சும் நீரில் சிறுக கலந்து செல்லுமாறு செய்தல். இதனுடன் கனிந்த வாழைப்பழம் 12, 1 கிலோ உளுந்து மாவு 2 லிட்டர் வடித்த கஞ்சியும் சேர்க்கலாம் என ஒருவர் கூறினார்.

மேலும் புகைப்படங்களைக் காண இந்த லிங்கில் செல்லவும்.
https://drive.google.com/folderview?id=0BwVTzSdMLu-DRlZPMkJvWnpzVVk&usp=sharing
மேலும் சில செய்திகள்.. தலையாம்பள்ளம் கிராமத்தில் கரும்பு வயலில் சோகை கொளுத்துவது இல்லை. தென்னை ஓலையை நீரில் நனைத்தால் வேதி அமிலம் உண்டாகிறது. எல்லாவற்றையும் வட்டமாக அமைத்தலின் நன்மை. மண்ணை மாற்றும் சருகுகள், கரையான், மண் புழு, பட்டாம் பூச்சி. நமக்கு வேண்டிய காய்கறிகளை நாமே விளைவித்தல். கொடிவகைகளை ஓரங்களில் நடுதல். கோமியத்தில் உப்பு அதிகமாக இருப்பதால் அளவாகப்பயன் படுத்துதல். சுனாமியின் போது மற்ற பயிர்கள் சாய, இயற்கை வேளாண்மை மூலம் மரக்காணத்தில். பயிர் செய்திருந்த மாப்பிள்ளை சம்பா நிமிர்ந்து நின்றது. பஞ்சகவியம் கலக்கும் போது உழவர் மன்ற செயலர் நகைச்சுவையில் கலக்கினார்.  அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. முகாம் சொற்சுவை, பொருட்சுவையுடன் பல்சுவைகளுடன் பயனுள்ளதாக இருந்தது. 
 - செய்தி தொகுப்பு திரு. நா. சிவநேசன், அவலூர்பேட்டை. sivanesan53@gmail.com