Pages

Showing posts with label காலண்டர். Show all posts
Showing posts with label காலண்டர். Show all posts

Wednesday, December 31, 2014

புது வருட ரெசல்யூஷன் :)

நியூ இயர் வருது உங்கள் ரெசல்யூஷன் என்னங்க? 
640*780 HD. தம்பி என் மொபைலுக்கு தான கேட்டீங்க? டீவி க்கு 1084 இருக்கும். என் வீட்டுல வேற எந்த ரெசல்யூஷனும் இல்லை.
உங்க புத்தாண்டு சபதங்கள் என்ன? 
யாருகூடவும் நமக்கு பகை இல்லைங்க தம்பி. அதனால "இந்த நாள்.... உன் காலண்டர்ல குறிச்சி வச்சிக்கோ......" அப்டினு சபதம் எதுவும் விடலை. 
உங்களுக்கு புது வருஷ கொண்டாட்டம் எதுவும் இல்லைங்களா? கொண்டாடலாமுன்னு ஒருதரம் ஆரம்பிச்சேன். இருபது முப்பது நாளுக்கு ஒருமுறை கொண்டாடும்படி ஆகிப்போச்சி. 
என்னண்ணே சொல்றீங்க? 
சீன நியூ இயர், சிறீலங்கா நியூ இயர், கன்னட நியூ இயர், முஸ்லீம் நியூ இயர், கிரிஸ்டீன் நியூ இயர், தமிழ் நியூ இயர், இப்படியே ஆப்பிரிக்கா, அண்டார்க்டிக்கா, நெப்டியூனின் நியூ இயர் வரைக்கும் கொண்டாடிட்டேன். இதுக்கெடயிலே எனக்கு 30 பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்துச்சி, இப்போ "அண்ணனை  வாழ்த்த வயதில்லை ...." அளவுக்கு ஆகிப்போச்சி பாத்துக்கோங்க. இதனால ஐநா வுக்கு போட்டியா பல தினங்களை கொண்டாடிட்டேனு கிப்டு எல்லாம் வந்து குடுத்தாங்க தம்பி. 



Monday, April 14, 2014

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் இரண்டாம் பட்சமா

இங்கிலீஷ்* புத்தாண்டுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பே அட்வான்ஸ் வாழ்த்துக்கள் மற்றும் முதல் ஆளாக(i am the first to wish.,) அடுத்த வருடத்திற்கு வாழ்த்து சொல்லும் தமிழ்நாட்டு மக்களெல்லாம், தமிழ் வருடத் தொடக்கத்தை இரண்டாம் பட்சமாக பார்ப்பது ஏன் என்கிற வினா ஒன்று தோன்றுகிறது.
ஒருவேளை இங்கிலீஷ் நாட்காட்டியின் படி சம்பளம் பெறுவதாலா? தமிழ் புத்தாண்டுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் வரி கட்டி  கையிருப்பில் பணம் இல்லாது போவதாலா?
தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு கொண்டாடவில்லை என்றால் கர்நாடகாவிலா அரசு விடுமுறை அளித்து கொண்டாடுவார்கள். தமிழ்நாட்டில் இங்கிலீஷ் புத்தாண்டும்,  தமிழ் புத்தாண்டும் sms blackout days என்று அனைத்து மொபைல் நெட்வொர்க்கும் குறிப்பிட்டு பணம் சம்பாதிக்கிறது. ஆங்கிலப் புத்தாண்டில் மட்டுமே sms பரிமாற்றம் அதிகமிருக்கிறது. இதனால் தமிழ் புத்தாண்டு தினத்தை sms blackout தினத்திலிருந்து நீக்கச் செய்ய வேண்டும். சம்பளம் தமிழ் மாத முதல் தேதியில் தருவதை வழக்கமாக்க வேண்டும். நிதிஆண்டும் தமிழ் ஆண்டும் பங்குனியில்(மார்ச்) முடியும்.

நேரக் கணக்கைப் போலவே 60 தமிழ் ஆண்டுச் சுழற்சி என்பது வியாழன் சூரியனை 12 முறை சுற்றி வரும் காலமாகும். அதாவது வானமண்டலத்தின் 12 வீடுகளிலும் இடம் பெற்றிருக்கிற ஒன்பது கிரகங்களும் ஒருமுறை தாம் இருக்கின்ற அவ்வவ் வீடுகளிலேயே மீண்டும் இடம் பெறுகிற நிகழ்வு 60 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நிகழும். மற்ற கிரகங்களைப் பொருத்தவரை அவை தாமிருந்த பழைய இடத்துக்கு மீண்டும் வருவதென்பது, மிக விரைவாக நிகழக்கூடியதே என்றாலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது1. இந்த ஒரு வான்நிலை நிகழ்வை ஒட்டியே தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்  சூரியக் குடும்பத்தின் ஒரு சுழற்சி தொடக்கத்தையும் கணக்கில் கொண்டுள்ளது.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப...., எண்ணும் எழுத்தும்.... என்றெல்லாம் எண் பற்றிய முக்கியத்துவம் தெரிந்திருந்தும் தமிழ் எண்களை பழகாமல் விட்டுவிட்டோம்.


 1 2 3 4 5 6 7 8 9 0 என்ற எண்ணுக்கு முறையே, க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, 0 இதை எளிதாக நினைவில் கொள்ள, 
''க'டுகு, "உ'ளுந்து, "ங'னைச்சு, "ச'மைச்சு, "ரு'சிச்சு, "சா'ப்பிட்டேன், "எ'ன, "அ'வன், "கூ'றினான்; "ஓ' என்றாள்

அனைவருக்கும் தமிழ் ஜய ஆண்டு சித்திரை க நாள் வாழ்த்துகள்.

1.http://www.sishri.org/puthandufull.html).
*English என்பதை உச்சரிப்பில் இங்கிலீஷ் என்றே குறிப்பிடுவது சரியாகும். எவ்வாறு  ஆங்கிலம் என்பது சரியாகும்?

Tuesday, January 7, 2014

வருடத்தின் 182 மணி நேரம்

அரை மணி நேரம் TV யை நிறுத்துங்கள், உங்கள் வாழ்க்கையிலும் சமூகத்திலும் நல்ல மாற்றம் ஏற்படும். ஒரு நாளில் சுமார் மூன்று மணி நேரம் டிவியில் செலவிடுகிறீர்கள் என்றால் அதை இரண்டரை மணி நேரமாக குறையுங்கள். அதுவும் நீங்கள் அடிமைப்பட்டுக் கிடக்கும் நிகழ்ச்சியின் நேரத்தில் குறையுங்கள். நம் வீட்டில் இருக்கும் சாதனங்களிலேயே மிகவும் எச்சரிக்கையாக கையாளப்பட வேண்டிய சாதனம் TV தான். ஒரு நாளைக்கு, உங்கள் நேரம் அரை மணி நேரம், உங்கள் மொத்த குடும்ப நேரம் 2  மணி நேரம் (4 பேர் கொண்ட குடும்பம்) இப்படி கணக்கிட்டால் வருடத்தின் 182.5 மணி, குடும்பத்தின் நேரம் 730 மணி நேரம் பல பயனுள்ள காரியங்களுக்கு செலவிடப்படும். பல நேரங்களில் ஒய்வு எடுக்க நேரமின்றி இருந்திருப்பீர்கள். இந்த அரை மணி நேரத்தை அதற்கு கூட பயன் படுத்திக்கொள்ளலாம்.

மக்களை டிவி முன் அமரவைத்து டிவி பேசிக்கொண்டிருக்கிறது மக்கள் முடமாக அதன்முன் அனைத்து புலன்களையும் அடகு வைத்துவிடுகிறார்கள். கண்ணும் காதும் டிவியை கவனித்துக் கொண்டிருக்கிறது. கண் காதுக்கு ஒத்திசைவாக உங்கள் உடல் இயக்கம் இன்றி நிற்கிறது. அதைவிட முக்கியமாக உங்களை சிந்திக்க விடுவதில்லை. இந்த நேரம் உங்கள் மக்களுடன் நண்பர்களுடன் சுற்றத்தாருடன் செலவிடப் பட வேண்டிய நேரம். குறைந்த பட்சம் உங்களுக்காக செலவிடப்பட வேண்டிய நேரம் இது.

மொபைல் போனும், இன்டர்நெட்டும் இவ்வகையானதே என்றாலும் அனைத்து புலன்களையும் முடக்குவதில்லை. தெரிவு செய்து கொள்வதற்கு பல விஷயங்கள் உள்ளன. டிவி நிகழ்ச்சிகள் ஒவ்வொரு மக்கள் பிரிவினரையும் குறி வைத்துள்ளது. குழந்தைகள், மகளிர், இளைஞர்கள், ஏன் வயதானவர்களைக் கூட விடுவதில்லை பல பழைய திரைப்பட சேனல்கள் உள்ளன. சேனல்கள் பார்வையாளனிடம் பரபரப்பையும் உணர்ச்சியையும் தூண்டி தன் ரேட்டிங்கை அதிகமாக்கிக் கொள்வதிலேயே குறியாக உள்ளது. செய்திச் சேனல்களும் விதி விலக்கல்ல. கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக மக்களவைத் தேர்தல் பரபரப்பே பிராதானமான செய்தியாக வெளியிட்டு  உள்ளது. செய்தி சேனல்கள் என்று பார்த்தால் ஒரு நிகழ்வை ஊதிப் பெரிதாக்குவதும் இருட்டடிப்பு செய்வதிலும் சிறப்பாக செயல்படுகிறது, அரசியல்வாதிகளின்  கொள்கைகளும் கொள்ளைகளும் எரிச்சல் மூட்டுகின்றன.

தமிழ்மொழியை சிதைப்பதில் பெரும்பங்கு டிவி சேனல்களையே சாரும். பல ஆங்கில சேனல்கள் நம் மக்கள்தொகை அதிகமென்பதால் வணிக நோக்கத்திற்காக தமிழில் பேசிக் கொண்டிருக்கின்றன.

சமைக்கும் போதும் கவனத்தை டிவி சீரியலிலேயே வைத்துள்ளதால் அவசர உணவு தயாரிக்கலாம் ஆரோக்கிய உணவு அல்ல. இதனால் குடும்பத்தின் ஆரோக்கியம் பாதிக்கப் படுகிறது. உணவு சாப்பிடுவதும் டிவி முன்தான் என்றால் இன்னும் மோசம். உங்களின் வார விடுமுறை நாளை டிவியே புக் செய்து கொள்கிறது அதன் திரைப்பட நிகழ்ச்சிகளால். நீங்கள் விரும்பிய வேலையை செய்ய விடுவதில்லை.

நீங்கள் தினமும் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பது டிவி நிகழ்சிகளுக்குத்தான் என்பதை உங்கள் குழந்தைகள் கவனிதுக்கொண்டுதான் உள்ளனர் என்பதை அறிவீர்களா? மறைமுகமாக டிவி தான் முக்கியம் என்று சொல்லிக் கொடுக்கிறீர்கள். சினிமா தவிர வேறு எதுவும் கணிசமாக நிகழவில்லை டிவிக்களில். டிவியில் வெளியிடப்படும் சினிமாக்களுக்கு தணிக்கை இருந்தபோதிலும் டிவி நிகழ்ச்சிகளுக்கும், விளம்பரங்களுக்கும் தணிக்கை என்று எதுவுமே இல்லை.  உங்கள் செயல்கள் நல்லனவாக இருந்தாலும் டிவியே உங்கள் குழந்தைகளை அதிகமாக கவர்ந்து அவர்களின் சிந்தனையையும் செயலையும் பாதிக்கிறது. உங்கள் குழந்தைகள்  டிவியைத் தவிர்த்து கவனம் சிதறாமல் படிக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?
கற்பனை என்பது அறிவை விட சிறந்தது என்று கூறுகிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். குழந்தைகளிடம் கற்பனைத்திறனும் சிந்திக்கும் ஆற்றலும் குறைய டிவி தான் காரணம் என்பது மிகையல்ல.

சினிமா, செய்திகளுக்கு  அடுத்தபடியாக கிரிக்கெட் சேனல்கள் உள்ளன. கிரிக்கெட்டை வைத்து பெரிய பொருளாதாரமே உள்ளது. தொழிற்சாலை தொழிலாளிகள் போல தினமும் விளையாடிக்கொண்டே இருக்கிறார்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள். முக்கிய கிரிக்கெட்  நடக்கும் நாட்களில் பல பணிகள் முடங்குகின்றன என்று ஒரு சர்வே சொல்கிறது.

டிவியை நிறுத்தி வைத்து விட்டால் முதலில் அந்த நேரத்தில் என்ன செய்வது என்கிற திகைப்பு மேலிடலாம். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாலே டிவியால் பூட்டியிருந்த உங்கள் சிந்தனை வேலை செய்ய ஆரம்பிக்கும். சிறு வயதில் நீங்கள் நினைத்தவற்றை இப்போதும் கற்கலாம். எழுத்து, பேச்சு, ஓவியம், இசை, போன்றவை. பிறருக்கு கற்பிப்பது, வீட்டு வேலை போன்ற பல விஷயங்களை செய்யலாம். நாம் என் ஒரு வருடத்திற்கு 134 கிலோ அரிசியை உண்கிறோம்? வேறு தானியம் எதுவும் உண்ணக்கூடாதா? உங்களை நீங்களே கண்ணாடியில் பார்த்துக் கொள்ளலாம். டிவியால் உங்கள் கண்களின் பொலிவு இழந்தது விட்டிருப்பதை உணரலாம். உங்கள் பருமன் அதிகரித்திருந்தால், உடற்பயிற்சிக்கு நேரத்தை செலவிடலாம். உங்கள் பற்களின் ஆரோக்கியம் எப்படி உள்ளது என்றும் கண்ணாடியில் பார்க்கலாம்.

உங்கள் குழந்தைக்கு எத்தனை கதை சொன்னீர்கள்? உங்கள் குழந்தையிடம் எத்தனை கதை கேட்டீர்கள்? உங்கள் குழந்தையிடம் அவர்தம் பள்ளி நிகழ்வுகளை கேட்டறியலாம். அவர்தம் பழக்க வழக்கங்கள் பற்றியும் நண்பர்களைப் பற்றியும் அறிவது மிக முக்கியம் அல்லவா?

உங்கள் வீட்டின் சுற்றுபகுதியில் கொஞ்சம் நடந்து பாருங்கள். பல  நிகழ்வுகள் உங்களை சிந்திக்கத் தூண்டும். மாட்டு வண்டிகள் இப்போது இல்லையே? என்ன ஆனார்கள்? எத்தனையோ வட மாநில கட்டிடத் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து விட்டார்களே. அவர்கள் கல்வி என்ன ஆவது? நீங்கள் வாங்கும் காய்கறிகள் எங்கே விளைவிக்கப்பட்டது என்று அறிந்து கொள்ளலாம்.

உங்கள் வீட்டு முற்றத்தில் அல்லது மாடியில் சிட்டுக்குருவிக்கு தானியமும் தண்ணீரும் வையுங்கள். பறவைகள் உங்களை வாழ்த்தும். வீட்டிலேயே நீங்கள் உண்ணும் காய்கறி வளருங்கள். மாடியில் கூட வளர்க்கலாம்.

விவசாய நிலங்கள் வீட்டு மனைகளுக்காக விற்கப்பட்டு  உணவு உற்பத்தியின்றி நிலங்கள் வீணாக்கப்படுகிறது. அந்த விவசாயி என்னவானான் என்று யோசித்ததுண்டா மனைகளை முதலீடாக விளம்பரப்படுத்தும் டிவிக்களும் வாங்குபவர்களும்.  பல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்கள் (மீத்தேன் எடுப்பு, நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பு ) உங்களையும் பாதிக்கும் என்று எண்ணியதுண்டா?

எப்போது நீங்கள் வானத்தில் நட்சத்திரங்களை ரசித்தீர்கள்?

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். உங்கள் நேரத்தை மேலும் நான் வீணாக்க விரும்பவில்லை, வருடத்தின் இந்த 182  மணி நேரத்தை டிவியிடமிருந்து பிடுங்கி விட்டால் உங்கள் வாழ்க்கையை  சிறப்பானதாக மாற்றிக் கொள்ளலாம்.  வாழ்த்துக்கள். 

Saturday, December 31, 2011

காலண்டர் மாற்றும் திருவிழா



௦௦00.00.00.00௦௦ என்ன இது? புத்தாண்டு கொண்டாடும் நேரம். பூமி சூரியனை ஒரு ரவுண்டு வந்ததயா கொண்டாடுகிறோம்? ஒரு நீள்வட்டப் பாதையின் முடிவு எது? ஆரம்பம் எது? பூமி இந்த சுற்றிவரும் விளையாட்டை ஆரம்பித்த ஆண்டு தெரியுமா? சூரியன்தான் பூமிக்கு சுற்றுலாத் தலம். நிலவுக்கு பூமி. நாமும் பூமியுடன் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறோம் சூரியனை. நிலவு நம்மை சுற்றிக் கொண்டு இருக்கிறது. சூரியன், புதன், வெள்ளி கிரகங்களைத் தவிர மற்ற அனைத்து கிரகங்களும் நம்மையும் சேர்த்து சூரியனை சுற்றிக்கொண்டுள்ளன. நாம் ஏன் நவகிரகங்களையும் கோயிலில் சுற்ற வேண்டும்? 

ஹாப்பி நியூ இயர் கொண்டாடும் மக்களே! ஆங்கிலப் புத்தாண்டின் சிறப்பென்ன தெரியுமா?
ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, கடந்து பெரும்பாலான நாடுகளில் அதிகபட்ச மக்களால் கொண்டாடப்படும் விழா இதுதான். இதற்கு ஈடான ஒரு விழா (இந்த கோணத்தில்) வேறு இல்லை. ஆங்கில காலண்டர் கிருஸ்து பிறந்ததிலிருந்து ஆரம்பிக்கிறது. அவர் பிறந்த நாளாக கருத்தப்படும் டிசம்பர் 25 கி. மு. வா? கி. பி. யா? அவர் பிறந்த தேதியையே ஜனவரி 1 ஆக அமைத்திருக்கலாமே. 
             

சூரியக் குடும்பத்தை வைத்துதான் காலண்டர் முறையை கணக்கிட்டார்கள். ஆனால் ஏன் கோள்களின் வரிசைக்கிணங்க வாரநாள்களுக்கு பெயர் வைக்கவில்லை? சூரியக் குடும்பத்தின் படி வாரநாள்களுக்கு பெயர் வைத்திருந்தால்..........

ஞாயிறு                       Sunday
புதன்                           Wednesday
வெள்ளி                       Friday
திங்கள்                        Monday
செவ்வாய்                    Tuesday
வியாழன்                     Thursday
சனி                             Saturday        

இப்படித்தான் இருந்திருக்கும். நம் காலண்டர்.

டைப்ரைட்டரிலும், கீபோர்டிலும்
QWERTYUIOP
ASDFGHJKL
ZXCVBNM
போல கோள்களின் வரிசைகளையும் மாற்றி வைத்தான் கிறுக்கு மனிதன்.

புளூட்டோவை சிறிது காலத்திற்கு முன்  நம் (சூரிய) குடும்பத்திலிருந்து நீக்கி விட்டார்கள். அது என்ன இவர்களை நம்பியா சூரியனை சுற்றிக் கொண்டுள்ளது இத்தனை காலமாய்.

இந்தியாவிலேயே பல காலண்டர்கள் உள்ளன. தமிழ் காலண்டர், தெலுங்கு காலண்டர், ஹிந்து காலண்டர், முஸ்லிம் காலண்டர் இன்னும் பிற. அனைத்து புது வருடங்களும் தமிழனின் அணுகுமுறையில், வருடப் பிறப்பு என்றுதான் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு என்பது new year என்பதின் மொழிபெயர்ப்பு. நீர்வீழ்ச்சி – waterfalls என்பது போல. அருவி என்ற அருமையான சொல் இருந்த போதிலும். மொழி பெயர்ப்பைப் பற்றி என் இன்னொரு கருத்து. மின்விசிறி, மின்விளக்கு மற்றும் பல்வேறு பொருட்களுக்கு ‘மின்’ என்ற   முன்னொட்டு. இந்த சொற்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட காலத்தில், வீட்டில், விசிறி மட்டையும் இருந்தது, மின்விசிறி –fan ம் இருந்தது. இப்போது உங்கள் வீட்டில் விசிறி மட்டை உள்ளதா? அதனால் ‘மின்’ ஐ தூக்கிவிட்டு விசிறி என்றே பயன்படுத்தலாம். வீட்டில் பாதி நேரம் மின்சாரம் இல்லாததாலும் ‘மின்’ ஐ தூக்கி விடலாம். இது போல நாம் பல பாரம்பரியமான சொற்களைக் காக்க முடியும். மைக்ரோசாப்ட் இன்னும் save icon க்கு பிளாப்பி டிஸ்க் ஐ தான் பயன் படுத்துகிறது. அதைப் போல நாமும் நம் பாரம்பரிய சொற்களைக் காப்பாற்றுவோம்.


மீண்டும் புத்தாண்டிற்கு வருவோம். 2012 காலண்டரில் இரண்டே வரிதான். ஜனவரி, பிப்ரவரி. மார்ச் மாதம் கட்டாயம் கட்ட வேண்டும் வருமான வரி. 2012ன் இன்னொரு சிறப்பென்ன தெரியுமா? இவ்வருடம் வாரத்தின் ஆரம்ப நாளான ஞாயிறில் தொடங்குகிறது. திங்களில் முடிகிறது. சூரியனில் தொடங்கி, சந்திரனில் முடிகிறது பகல் இரவைப் போல.  2012 மிக வேகமாக ஓடிவிடும் என்று தோன்றுகிறது.

வாழ்த்துக்கள். இவ்வளவு நேரம் படித்ததற்கு.

Saturday, January 1, 2011

புத்தாண்டு - பூமியின் விழா

ஆண்டுக்கு பனிரெண்டு மாதம் எப்படி? பூமி சூரியனை ஒரு முறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம். பூமி தன்னைத் தானே சுற்றும் நேரம் ஒரு நாள். சந்திரன் ஒருமுறை பூமியை சுற்றி வர தேவைப்படும் நேரம் ஒரு மாதம். இந்த இயற்கையின் விதிகளைக் கண்டறிந்து காலண்டரை கண்டுபிடித்த அந்த அறிஞனை எண்ணி வியக்கிறேன். ஆக திசம்பர் 31 தான் ஆண்டின் முடிவு! ஜனவரி 1, புது வருட தொடக்கம்!! இதை கொண்டாடும் உலகமக்கள்!!!

இயேசு பிறந்த தினம் – கிருஸ்துமஸ், கிருஷ்ணர் பிறந்த தினம் – கிருஷ்ண ஜெயந்தி. அது போல பூமியின் பிறந்த தினம்தான் ஆங்கிலப் புத்தாண்டா? அல்லது தமிழ் புத்தாண்டா? அல்லது எந்த புத்தாண்டு தான் பூமியின் பிறந்த தினம்?

நேரம் 00:00:01தான் பூமி தோன்றிய நேரமா? பூமியும் சூரியனும் தோன்றாத போது நேரமே இல்லையா?

மகிழ்ந்த்திருக்கும் சந்தர்ப்பத்தை மக்களுக்குத் தரும் ஒவ்வொரு ஜனவரி 1 யும் நானும் வரவேற்கிறேன். அந்த ஒரு நாளோடு புத்தாண்டு முடிந்து விடுகிறதா? எப்போது ஒரு ஆண்டு பழையதாகிறது?

உலகத்தில் பழையது என்பது தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கும் இயற்கைதான். ஒரு சீரான சுழற்சியில் தான் இருக்கிறது. பூமியை விட மூத்த சூரியன் புதிது புதிதாகத் தானே எரிய முடியும்.

அனைத்து கோள்களுக்கும் ஜனவரி ஒன்று இருக்கிறதா? அக்கோள்களின் புத்தாண்டைக் கொண்டாட யார் இருக்கிறார்கள்?

வாழ்த்துச்செய்தி பரிமாறுதலில் மொபைல் நெட்வொர்க்கே ஒரு சில மணி நேரங்கள் திணறிவிடுகிறது. அந்தந்த time zoneல் உள்ள மக்கள் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ளும் போது நெட்வொர்க் தனது அதிகபட்ச திறனை மீறி தொடர்பு கொள்ள முடியாமல் போகிறது. இந்த சூழ்நீலையில் பாதிக்கப் படுபவர்கள் அவசர சிகிச்சைக்காக/உதவிக்காக தொடர்பு கொள்வோர்.

பூமி எவ்வளவோ பாதிப்புகளுக்குப் பிறகும் தன்னைத் தானே சீர்படுத்திக் கொள்ளும் திறன் கொண்டதுதான். சமீபத்தில் கூட நாசா, பூமியின் ஓசோன் ஓட்டை அடைந்து வருவதாகத் தெரிவித்து இருந்தது. ஹெய்டி பூகம்பத்தில் பூமி சிறிது சாய்ந்து நாளின் நேரம் குறைந்துள்ளது.

புத்தாண்டு என்பது யாருடைய விழா? பூமியின் விழா.
யார் விளம்பரப் படுத்தி யார் வியாபாரம் செய்கிறார்கள்?
   
பூமியின் விழாவில் பூமியை பாதுகாக்கும், செம்மைப்படுத்தும், மாசுகளைக் குறைக்கும் செயல்களைத் தானே செய்ய வேண்டும். அதை விடுத்து அனைத்து நாட்டினரும் ஒரே நேரத்தில் தாக்கினால், பாவம் இந்த பூமி.

பூமி மனிதனுக்கு மட்டுமே சொந்தமானதா? மற்ற உயிரினங்களுக்கெல்லாம் இங்கு இடமில்லையா?

பூமியை நம்பிதான் மனிதர்கள் இருக்கிறோம். மனிதனை நம்பி பூமி இயங்குவதில்லை.

புத்தாண்டை பூமியின் விழாவாக அமைதியுடன் கொண்டாடுவோம். வாழ்த்துக்கள்.