Pages

Sunday, June 27, 2010

பறவை

-->மேகம் சூழ்ந்த மாலைப் பொழுதில் V வடிவத்தில் கூட்டமாய், விசிலடித்து தனிமையாய், மின்சாரக் கம்பியில் வரிசையாய், வயலோரங்களில், ஏரிக்கரை மரங்களில் சிறகடித்து பறந்த பல்வேறு வகையான பறவைகளை பார்த்து ரசித்து விட்டு மீண்டும் அந்த நினைவுகளில் மூழ்க இதோ இப்போது எழுத ஆரம்பித்து விட்டேன் பறவைகளுக்காக.

ஒரு குழந்தைக்கு மட்டுமல்ல பறவை ஆச்சரியமான உயிரினம். பறப்பதற்கு ஆசைப்படாத மனிதனில்லை. நம் கதைகளில் குதிரை, பெண் தேவதைகள், சூப்பர்மேன், ஏமாந்தால் எருமை கூடப் பறக்கும். பறவையைப் பார்க்கும் ஒவ்வொரு குழந்தையும் இறக்கை கட்டிக் கொண்டு வானத்தில் பறக்கலாம் என்று கற்பனை செய்யும்.

நாம் பார்த்து பெயர் தெரியாத பறவைகள் உள்ளதா? யோசித்து பாருங்கள்...
வால் நீளமாக, அலகு கூர்மையாக, வளைந்து, திக்கித் திக்கி கத்திக் கொண்டு, உடலிலே வண்ணம் வேறாக,.... இப்படி எத்தனையோ.
சரி, நமக்கு தெரிந்த பறவைகளின் பெயர்களைப் பட்டியலிடுவோம். காகம், குருவி, வாத்து, கொக்கு, நாரை, மீன் கொத்தி, மரங்கொத்தி, மைனா, கழுகு, குயில், மயி
ல், தேன் சிட்டு, கிளி, லவ் பேர்ட்ஸ், உள்ளான், காடை, கௌதாரி, ஆந்தை, புறா, பருந்து, பெங்குயின், சேவல், கோழி, வான்கோழி, நீர்கொழி, நெருப்புக்கோழி, நாட்டுக்கோழி, பிராய்லர் கோழி.

இதுவரை வகைப்படுத்தப்பட்ட பறவை இனங்கள்
9000 திற்கும் மேல். இன்னும் அறியப்படாத பறவை இனங்களும் இருக்கலாம். பறவைகளுக்கு பெறும்பாலும் dayshift தான். ஆந்தை போன்ற சில பறவைகளைத் தவிர. ஆகவே பறவைகளைக் கண்காணிப்பது எளிது. உலகம் முழுக்க பறவை ஆர்வலர்கள் பறவைகளைக் கண்காணித்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பறவையினம் இல்லாத இடமே உலகில் இல்லை எனலாம். துருவப் பிரதேசங்களிலும் வெப்ப பிரதேசங்களிலும் மற்றும் அனைத்து இடங்களிலும் பறவைகள் வாழ்ந்து வருகின்றன. பறவைகள் உணவு பெரும்பாலும் அசைவமே. பூச்சிகள், புழுக்கள், எலி போன்ற சிறு பிராணிகள்,
இறந்து போன உயிரினங்கள், மீன்கள், கடல் உயிரினங்கள், பாம்புகள். அதனதன் வாழுமிடத்திற்கேற்ப மாறுபடுகிறது. சைவ மெனுவில் பழங்கள், கொட்டைகள், காய்கள், தானியங்கள் எல்லாம் உள்ளன.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் பறவைகள் மூலம் காடுகளையே உருவாக்கலாம். பறவைகள் பழங்களை உண்டு அதன் எச்சத்தில் கொட்டைகளை வெளியேற்றிவிடும். நிறைய பழ மரங்களை வளர்த்து பறவைகள் உதவியோடு. காடுகள் வளர்ப்பதிலும், விவசாயத்திலும் பறவைகளின் உதவி குறிப்பிடத்தகுந்தது. பயிர்களை பூச்சித் தாக்குதலில் இருந்து காப்பதற்கு பறவைகளைப் பயன்படுத்துவது இயற்கை விவசாய முறை. பயிருக்கு கெடுதல் ஏற்படுத்தும் பூச்சிகள் பறவைகளுக்கு உணவாகிவிடும்.

பறப்பதற்கு ஏற்றவாறு பறவைகளின் உடல் எடை மிக லேசானது. அதன் இறக்கை எலும்புகளில் காற்று பைகள் இருக்கிறது. மேலும் பறவைகளால் நம்மைப் போல் அளவுக்கு அதிகமாக சாப்பிட முடியாது. அப்படியே சாப்பிட்டால் பறக்க முடியாது. ஆகவே கொஞ்சம் கொஞ்சமாக நிறைய தடவை சாப்பிடுவது அவசியமாகிறது.

மனிதர்களின் செயல்பாடுகளாலும், ஆக்கிரமிப்புகளாலும் பாதிக்கப்படும் உயிரினங்களில் பறவைகளும் அடங்கும். அழிந்து போன பறவையினங்கள் எத்தனையோ. மனித செயல்பாடுகளுக்கும், நகர வாழ்க்கைக்கும் பழக்கிக் கொண்ட பறவைகளும் இருக்கத்தான் செய்கின்றன. காடுகளின் ஆக்கிரமிப்புகளால் வாழ்விடம் இழந்து அழிந்து போன பறவையினங்கள் வேட்டையாடி அழிக்கப்பட்ட பறவைகளை விட அதிகம். நகரங்களின் குப்பைகளில் இரைதேடும் பறவைகளின் ஆயுள் குறைவதும், இனப்பெருக்கம் குறைவதும் ஆய்வுகள் சொல்லும் செய்தி, கண்கூடு. சுமார் பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த பல பறவைகள் இப்போது பார்க்க முடியவில்லை. உதாரணம் கருடன் என்று சொல்லப்படும் பறவை. இதற்கு காரணம் நாம் உபயோகப் படுத்தி சரியான முறையில் அப்புறப்படுத்தப் படாத ரசாயனம் மிகுந்த மருத்துவக் கழிவுகள், மாமிச கழிவுகள்.

பொதுவாகவே பறவைகள் பகல்நேரத்தில் செயல்படுபவை. மாலை சூரியன் மறைந்ததும் கூட்டுக்குத் திரும்பும் வாழ்க்கை முறை. நகரங்களில் உள்ள அதிக ஒளியால் அலைக்கழிக்கப்பட்டு பறவைகளின் இயல்பு வாழ்க்கைமுறை மாற்றம் அதன் இனப்பெருக்கத்திலும் பாதிப்பு ஏற்படுத்தி விட்டது.

குளிர் காலங்களில் வெப்ப நாடுகளுக்கு வரும் பறவைகள் பல ஆயிரம் கிலோமீட்டர்களை பறந்து கடக்க வேண்டும். கடல் பரப்பின் மேல் பறக்கும் பொது இளைப்பாற இடமும் இல்லை.

இன்று நீங்கள் எத்தனை வகை பறவைகளைப் பார்த்தீர்கள்? தட்டு, கூண்டு, தொலைக்காட்சிக்கு வெளியே.

No comments:

Post a Comment