Pages

Showing posts with label spit. Show all posts
Showing posts with label spit. Show all posts

Wednesday, June 30, 2010

மழை

இதுவரையில் நான் மழை பெய்யும் இடத்தில் நின்றிருக்கிறேன், மழை பெய்யாத இடத்தில் நின்றிருக்கிறேன். மழை பெய்யும் இடமும் மழை பெய்யாத இடமும் சந்திப்பது எங்கே? அங்கே நான் நிற்க வேண்டும் இரு கையை விரித்து ஒரு கையில் மட்டும் மழை தொட வேண்டும்.

பாலைவனத்தில் மழை சூடாகப் பெய்யுமோ? மழைத் துளி மண் சேரும் முன் ஆவியாகி விடுமோ? அப்படியே ஒரு வேளை மழை வந்து நனைந்தாலும் உடைகள் சீக்கிரம் காய்ந்துவிடும். மழை வேண்டி தவளைகளுக்கெல்லாம் திருமணம் செய்து வைக்கிறார்கள். உண்மையில் மழை வந்து குட்டையில் தண்ணீர் தேங்கும் வரை தவளைகளிடமிருந்து திருமணத்திற்கான குரலே கேட்பதில்லை. நல்ல வேளை உப்பு, கடல்நீருடன் சேர்ந்து ஆவியாவதில்லை. அப்படி ஆவியாகியிருந்தால் குடிநீர் கரிக்கும், காந்தியின் உப்பு சத்தியாகிரகம் தோல்வியடைந்திருக்கும்.

எல்லா வருடங்களிலும் பருவத்திலேயே இருக்கிறது மழை. இதை விட்டால் காடுகளுக்கு நீர் ஊற்ற யார் இருக்கிறார்கள். யாரால் முடியும்.
மேகத்தில் இருந்து விழும் மழைத் துளி முதலில் பூமியின் எந்த இடத்தைத் தொடும்? உயரமான மலை உச்சியிலா? பள்ளத்தாக்கிலா?


இமயமலையில் ரூப்கண்ட் அருகில் ஒரு பள்ளத்தாக்கில் ஏராளமான (300) மனித எலும்புகளும் மண்டை ஓடுகளும் 1942 ல் பார்வையில் பட்டது. இவைகளை ஆய்வுக்குட்படுத்திப் பார்த்ததில், இவை அனைத்தும் நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஒரு சமுகத்தை சேர்ந்தவை என்ற துப்பு கிடைத்தது. ஏன் அனைவரும் ஒட்டு மொத்தமாக இறந்தார்கள் என்ற கேள்விக்கு விடை காண முற்பட்டார்கள். போராக இருக்குமோ? ஆனால் கிடைத்த எலும்புகளில் தாக்குதல்களின் தடயமே இல்லை. விஷமா? நோய் தாக்குதலா? அதற்கு ஏன் பள்ளத்தாக்கிற்கு வந்து சாக வேண்டும். ஏதாவது மூட நம்பிக்கையால் பலி கொடுக்கப் பட்டவர்களா? ஒட்டு மொத்த தற்கொலை முயற்சியா? இன்னும் எத்தனையோ வகைகளில் சிந்தித்துப் பார்த்தனர். விடை காண இன்னும் ஒரு தகவல் இருந்தது. மண்டை ஓடுகளிலும், தோள்பட்டை எலும்புகளிலும் விரிசல்களும் பலமான அடி விழுந்த அடையாளம் இருந்ததது. யார் தாக்கினார்கள்? 2004 ல் ஆலங்கட்டி மழை தான் காரணமாக இருந்திருக்கும் என்று முடிவுக்கு வந்தார்கள். ஆலங்கட்டிகள் சுமார் கிரிக்கட் பந்தின் அளவுடையதாக இருந்திருக்குமென்றும் பாதுகாப்பாக ஒதுங்குவதற்கு இடம் இல்லாததுமே இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

மழை நாள் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது வந்தது வானவில். எங்கோ ஒரு மின்னல் கீற்றும் வானம் முழுக்க மழையும் பெய்து கொண்டிருந்தது. எங்கோ ஒரு மழைத் துளியும் வானம் முழுக்க மின்னலும் வருவதாக எண்ணிக் கொண்டிருந்தேன். அதைப் போன்ற ஒரு வாய்ப்பில்லை. நலம்.