Pages

Showing posts with label settle. Show all posts
Showing posts with label settle. Show all posts

Wednesday, February 27, 2013

செட்டில் ஆவது ஏன்? எப்படி?



என்ன சார்/மேடம் செட்டில் ஆகிட்டீங்களா? என்றோ, போ போ நல்லபடியா செட்டில் ஆகிற வழியப் பாரு என்றோ கேட்கப்பட்டிருப்பீர்கள். 
இதில் செட்டில் என்பதற்கு முன்னேறுதல் என்பதாக பொருள் கொள்ளப்படுகிறது. உண்மையில் அந்தச் சொல்லின் பொருள் என்ன?
கீழ்நோக்கி, இயக்கம் நிற்கும் வரை பயணித்து அடியில் தங்குதல் தேங்குதல்.
ஒரு பொருள் அதன் எடைக்கேற்ப செட்டில் ஆகும் நேரம் கூடலாம் குறையலாம்.
செட்டில்(settle) என்பதற்கு அகராதியைப் பார்த்தேன். குடியேறுதல், அடியில் தங்குதல், முடிவு, தீர்த்து வைத்தல் .... என்பதாக இருந்தது.

           
  
என்ன சார் பிரிசிபிடேட்(precipitate) ஆகிட்டீங்களா? என்று ஏன் யாரும் கேட்பதில்லை. புதிதாக வீட்டில் குடியேறியவரைக் கேட்கலாம், புது வீட்டுல செட்டில் ஆகிட்டீங்க... பிரமாதம்! என்று. சொத்து பிரித்துக்கொள்ளும் சகோதரர்களிடம் கேட்கலாம், அண்ணன் தம்பியோட செட்டில்மென்ட் பண்ணியாச்சா? என்று. ஒரு வகுப்பில் ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும் மாணவனிடம், என்ன தம்பி எட்டாவதிலேயே செட்டில் ஆகிட்ட போலிருக்கு என்று கேட்கலாம். விருந்திலே, சாம்பாரை நல்லா கலக்கி ஊத்து முருங்கக்காய் அடியிலே செட்டிலாகியிருக்கும் என்றும் பேசலாம். பாண்டிச்சேரியை பிரென்ச் செட்டில்மென்ட் என்று சொல்லலாம்.

ஒரு பெரிய பாறாங்கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்தால் தான் நன்றாக செட்டில் ஆக முடியும். செட்டில் என்பதற்கு நிலை கொள்ளுதல் என்ற ஒரு அர்த்தமும் உள்ளது என்றாலும் ஒருவர் தன் நிலையை உயர்த்திக் கொள்ளாமல் அதே நிலையில் இருக்க வேண்டும் என்பதுதான் செட்டில். நண்பர்களே முன்னேற்றம் குறித்து யாரையாவது விசாரிக்கும்போது செட்டில் என்ற சொல்லை பயன்படுத்துதல் சரியில்லை என்று தோன்றுகிறது.

யாராவது உங்களை செட்டில் ஆகிட்டீங்களா? என்று கேட்டால், செட்டில் என்றால் என்ன? என்று கேளுங்கள். அதற்குப் பிறகு அவர்களுக்கு பதில் சொல்லுங்கள்.அர்த்தம் புரியாமல் இதுபோன்ற ஆங்கில வார்த்தைகளைக் கலந்து பேச வேண்டிய நிர்பந்தம் என்ன இருக்கிறது? வழக்கத்தில் இருக்கும் செட்டில் என்ற சொல்லின் தவறான பயன்பாட்டைப் பற்றிக் கூறிவிட்டேன். இன்னும் இதுபோன்று எத்தனை சொற்கள் உலவிக் கொண்டிருக்கின்றனவோ? அவற்றைக் கண்டுபிடித்து செட்டில் (தீர்த்து வைத்தல்) செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்...