வட்டப்பாத்தி
விவசாயமுறை பயிற்சி முகாம்
திருவண்ணாமலை
மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தில் திருவேங்கடம் அவர்கள் நிலத்தில் நம்மாழ்வாரின்
"வட்டப்பாத்தி”
விவசாயமுறை பயிற்சி முகாம் 15.06.2014 திங்கட்கிழமை காலை 9.00 மணி
முதல் மலை 5.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை,
விழுப்புரம், சென்னை, புதுவை மற்றும்
சுற்றுப்புற கிராம மக்கள், இயற்கை விவசாய ஆர்வலர்கள்
திரளாகக் கலந்துகொண்டனர். பயிற்சி இடம் தேக்கு மரத்
தோப்பு. அதைச் சுற்றி நாற்புறமும் கரும்பு வயல், குளிர்சாதன
அரங்கு போன்ற இயற்கைச் சூழல். இயற்கை அன்னையை வணங்கி பயிற்சி துவங்கியது.
முதலில் நிலத்தை வளப்படுத்துதல், காலத்திற்கேற்ற பயிர் வகைகள், நடும் முறைகள், நிலத்தில் முதலில் உரிமையாளர் நடுதல், அதன் பின் மற்றவர் நடுதல்பற்றி கூறப்பட்டது. மூலிகை, சிறுதானியம், செடி, கொடி, மரம், பூ, காய்கறி, கீரை, இவைகள் நடுவதற்கான மாதம், கிழமை, நேரம் கூறப்பட்டதுடன் பனிக்காலத்தில்
நடக்கூடாது என்பதற்கான காரணம் கூறப்பட்டது. இச்செய்திகளை மரம் பற்றிய நூலில்
இருந்து ஒருவர் வாசிக்க, திருவண்ணாமலை மாவட்ட மரம்
வளர்ப்போர் சங்கத்தைச் சேர்ந்த திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் எளிய, அரிய விளக்கங்கள் அளித்தார்.
முகாமில்
உரையாற்றியவர்கள் நம்மாழ்வாரை நினைவு கூறத்தவறவில்லை. தலையாம்பள்ளம் உழவர் மன்றம்
அவரால் துவக்கப்பட்டது என்ற பெருமைக்குரியது தலையாம்பள்ளம் உழவர் மன்றத் தலைவர்
திரு. பன்னீர் அவர்கள் தலைமையில் மன்றச்செயலர் திரு. சம்பத் அவர்கள்
நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். அயராத உழைப்பால் அபெக்ஸ் சுரேஷ்குமார் அவர்கள்
பயிற்சி முகாமை ஒருங்கிணைத்ததோடு மட்டுமின்றி மரக்கன்றுகள், காய்கறி, கீரை, சிறுதானியம், சீரகச்சம்பா,
குதிரைவாலி, நெல் விதைகள் அனைவருக்கும்
வழங்குவதற்காக கொண்டுவந்து வைத்திருந்தார். மேலும் அவர் மண்புழு உரம் வாங்கி வந்து
போடத்தேவையில்லை. சாக்கு பையை சதுர துண்டுகளாக வெட்டி, சாணம்,
கோமியம் வெல்லம் கலந்த கரைசலில் நனைத்து நிலத்தில் ஆங்காங்கே போட்டு
தினமும் நீர் தெளிக்க மண்புழுக்கள் தானே அங்குவந்து உரத்தயாரிப்பில் ஈடுபடும்
என்றார். அத்தியந்தல் அரசு விதைப் பண்ணையில் பணிபுரியும் முனைவர்
யோகலட்சுமி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
காலை 10.30 மணி அளவில் அனைவருக்கும் சிறுதானிய உணவு, ராகிகூழ், ஊறுகாய், வெங்காயத்துடன்
போதிய அளவு செவிக்கு உணவு இருக்கும் போதே வயிற்றுக்கும் வழங்கப்பட்டது.
மரம்
வளர்ப்போர் சங்க செயலர் திரு. அமரேசன் அவர்கள் மண்புழு உரம், இயற்கை
விவசாயம் பற்றி விரிவாகப்பேசினார். நல்லவன்பாளையம் திரு சின்ராஜ் அவர்கள் தன்
உரையில் மீன்கசடு 10கிலோ வெல்லம் இத்துடன் நீர் ஊற்றி கலந்து மீன் அமிலம் தயாரித்தல்.
இதில் 10 மில்லியுடன் 1லிட்டர் நீர் சேர்த்து பயிருக்கு தெளிக்க பயிர் நன்கு
வளரும். இலைச்சருகு மூடாக்கினால், 1.மண் ஈரம் காக்கப்படுதல்
2.களை இல்லை 3.உரம் கிடைக்கிறது. சம்பங்கி, மல்லி நடவில்
தண்ணீர் போகும் காலில் பனை ஓலை வைத்தால் ஈரம்காக்கும். வெங்காய பூண்டு சருகு
தென்னைக்கு மூடாக்குபோட பெரிய காய்கள் காய்க்குமென தன் அனுபவத்தைக் கூறினார்.
மேலும் மண்புழு உரம் தயாரிக்க பிளாஸ்டிக் தொட்டி வேளாண் அலுவலரை அணுகிப் பெறலாம்
என்ற தகவலையும், புளிய மரங்கள் குறைந்து வருவதால் அவற்றை
வளர்த்தல், 4 மூட்டை பனங்கொட்டைகளை சாலை ஓரம் போட்டது,
பனங்கொட்டை சேகரித்து அனுப்புதல், பனை 25
ஆண்டுக்குப்பின் காய்க்கத்தொடங்கி 200, 300ஆண்டுகள்
காய்க்கும்,இப்போது நுங்கின் விலை அப்போது விலை கூறி
லாபக்கணக்கு பற்றியும், செங்கல்சூளையால் பனை அழிவு பற்றியும்
கூறினார்.
திரு. நெல் ஜெயராமன், திருத்துறைப்பூண்டி
நெல் திருவிழா 250 வகை நெல் பற்றி பேசப்பட்டது. அவலூர்பேட்டை திரு. சிவநேசன்
அவர்கள், தன் தோட்டத்தில் இருந்து பாரம்பரிய கீரை விதைகளை,
ஒரு பெண் விவசாயிக்கு கொடுத்தது, நன்கு வளர
விவசாயி யூரியா போடலாமா? என கேட்கும் போது ஒரு பகுதி யூரியா
போடு. மறு பகுதி அமிர்தக்கரைசல் ஊற்றச்சொன்னது, அமிர்தக்
கரைசல் ஊற்றிய கீரை நல்ல நிறத்துடனும் நல்ல சுவையுடன் இருந்ததால், வாங்கியவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டது பற்றி தன் அனுபவத்தைக் கூறினார்.
கீரை விளைவித்த பெண் விவசாயி திருமதி ருக்குமணி பயிற்சிக்கு வந்திருந்தார். இனி
நான் இயற்கை விவசாயம் தான் செய்யப்போகிறேன் என்று கூறினார்.
கலசபாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் திரு.பச்சையப்பன் அவர்கள்,வரகு, சாமை போன்ற சிறு தானியங்கள் பயிரிடுதல்,
மானாவாரி நிலங்களைப் பயன்படுத்துதல், சீரகச்சம்பா,
பொன்னி பயிரிட வேண்டுமென வலியுறுத்திக் கூறினார். செங்கம் திரு.
இளங்கோவன் அவர்கள் 10 ஏக்கர் நிலத்தில் இயற்கை உரம் மட்டுமே போட்டு பயிர்
செய்வதாகவும் தென்னை மரக்கழிவுகளே அதற்கு உரமாகப் பயன்படுத்துவதாகத் தன்
அனுபவத்தைக் கூறினார். கலசபாக்கம் திரு.ராஜேந்திரன் அவர்கள் விவசாயிகள் ஒருவருக்கு
ஒருவர் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டும். டீக்கடையில் அரசியல் பேசாமல்
விவசாயம் பற்றி பேசவேண்டும். அரசு கொள்கை, உற்பத்தி
பெருக்கம் இன்மை, விற்பனைவிலை உயர்வு, விவசாயியின்
வாங்கும் திறன் உயர்தல் பற்றி ஆவேசமாகப் பேசினார். பாசுமதியைவிடச் சிறந்தது சீரக
சம்பா. மூட்டை ரூ. 3000 என்றால் ஏற்றுமதிமூலம் ரூ. 5000 கோடி கிடைக்கும்.
இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றியது பொன்னி நெல் ரூ 1 கோடிக்கு ஏற்றுமதியானது.
உற்பத்தியைவிட 30% லாபம் வேண்டும். டீலக்ஸ் நெல் வேண்டாம். தாய்லாந்தில் ரூ. 2000
கொடுத்து நெல் கொள்முதல் செய்கின்றனர் என உரையாற்றினார்.
திரு. ராஜேந்திரன் அவர்கள், பாமாயில் இறக்குமதியைத்
தடை செய்ய தீர்மானம், கடலை எண்ணெயை சந்தைப்படுத்துதல்,
ஆமணக்கு பயிரிடுதல், பூக்கள், பூண்டு, வெங்காயம், அரிசி விலை
ஏற்றம் கூடாது. இது அரசின் கொள்கை. பர்மா உளுந்து, துவரை,
மொச்சை அரசு வாங்கத்தயாரா? எனவும் விவசாயிகள்
கஷ்டத்தை குறைத்தல். குறைந்த செலவில் அதிக லாபம் பெறுதல் பற்றியும் விளக்கிக்
கூறினார். திரு. சுப்பிரமணியன் அவர்கள், கிராமம் முன்னேறுவதை
அரசு விரும்பவில்லை, நெல் விலை ஏற்றமுடியாது என்கிறது.
வேளாண்மை பற்றிய புதிய செய்திகள் அறிந்து இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்தி
விவசாயம் செய்தல், செயற்கை உரம் போடாமல் பயிர் செய்தல்,
அரசின் கலப்பின ஒட்டுவகை (HYBRID) பசுமைப்
புரட்சி திட்டம் வந்துதான் நான் வீழ்ச்சி அடைந்தேன் என தன் ஆதங்கத்தை
வெளிப்படுத்தினார். பச்சை மிளகாய் 1ஏக்கரில் 1ஆண்டுக்கு ரூ5 லட்சம் பெறலாம்.
நெல்லாக விற்காமல் அரிசியாக விற்க வேண்டும். விலையை நாமே நிர்ணயிக்க வேண்டும்
எனும் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
நெல் கிருஷ்ணமூர்த்தி எனும் பட்டமும் பாராட்டும் பெற்ற திருவாளர் அவர்கள்,
கெட்டுப்போன நிலத்தை மாற்றினார். 250 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம்
செய்துவருகிறார். தேவைக்கு பார்வையிடலாம். திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள்
ஆன்மீகத்தை வளர்த்தார். நம்மாழ்வார் வியசாயத்தை வளர்த்தார். ஆன்மீகமும் விவசாயமும்
ஒன்று என்று தன் பேச்சை துவக்கி, குழந்தை முதல் மாத்திரை,
அனைவரின் உடலிலும் இது இறுதிவரை. செயற்கை உரத்தால் விளைந்த
விஷக்கீரையை உண்டதால் மருத்துவருக்கு வருமானம். வாழைத்தண்டு உண்டால் ஏதும்
சரியாகவில்லை. காரணம் செயற்கை உரத்தால் அது விஷமானது. உரம் போட்டது போடாதது பார்த்தாலே தெரியும். இயற்கை வேளாண்மையில் இனிக்கும் செயற்கையில்
கசக்கும். இயற்கை வேளாண்மையால் நீர் பாய்ச்சாவிட்டாலும் வாழை காடு மாதிரி
வளர்ந்திருக்கிறது. தழை உரம்,எரு இடாததால் நிலம் கெட்டது.
மண் வளப்படுத்த அமிர்த கரைசல் இட்டால் போதும். நிலம் நலம் பெறும். மீன் அமிலம்
அடிக்கும் பச்சையத்திற்கு பூச்சி வராது. யூரியா அடிக்கும் பச்சையத்திற்கு பூச்சி
வரும். நிலத்தை வளப்படுத்தாமல், பஞ்சகவியம், மீன் அமிலம், அமிர்த கரைசல் மட்டும் இட்டால் பலன் இல்லை. பாரம்பரிய நெல்,
மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, குள்ளங்கார்
நட்டேன். விதை விற்பனை செய்ய கோட்டை கட்டுதல், கலவை சாதங்கள்
செய்தல் நிகழ்ச்சி நடத்தி அனைவரையும் வரவழைத்தேன் என்று கூறினார். வறுத்த பொரி
அரிசி முகாமில் வழங்கப்பட்டது.
நெல்லாக விற்காமல் அரிசியாக விற்றால் லாபம் அதிகம். 75 கிலோ நெல்லில் உரித்தல் மூலம் 55 கிலோ அரிசி கிடைக்கிறது. 1கிலோ ரூ 70. நெல்லைவிட வைக்கோல் அதிகம். மாடுகள்
நன்றாக உண்கிறது. நெல்வயலில் உள்ள களைகளைப் பிடுங்க வேண்டாம். 18 வகையான மூலிகைகள் நெல்வயலில் உள்ளன. தங்கபஸ்பம் இருக்கும். வல்லாரை,
கோரைக்கிழங்கு போன்றன. கோரைக்கிழங்கின் 1 கிராம் தூள் உண்ண
புத்திகூர்மை பெறும், முகம் பொலிவு பெறும். பயன்படுத்தி பலன்
பெறுக. செயற்கை உரம்போட்ட வயலின் வைக்கோல் நஞ்சு. உண்ணும் பசுவின் பாலும் நஞ்சு.
குடிக்கும் குழந்தை முதல் அனைவருக்கும் நஞ்சு பரவுகிறது. பற்பசையில் நிகோடின்
இருக்கிறது. இதனால் அதற்கு அடிமையாகிறார்கள்.
கோல்கேட்டால் பல் மருத்துவ மனைகள் பெருகி உள்ளன. நான் குச்சியால்தான் பல்துலக்குகிறேன்.
வேம்பு பல் துலங்கும், ஆல் ஈறு இறுகும், வேல் பல் உறுதி, நாயுருவி பல் கூச்சம் போக்கும்.
பாரம்பரிய அரிசியை வாங்க மக்கள் என்னை நாடி வருகின்றனர். ஒருநாள் ஆங்கில
மருத்துவர் வயலை சுற்றிப்பார்க்க வந்தார். இது என்ன வாழை? காடு
போல் உள்ளது. அது காடு இல்லை. மருந்தகம். என் நோய்க்கு இதில் உள்ள மூலிகைகள்தான்
மருந்து. நான் இதுநாள்வரை மருத்துவமனைக்கு சென்றதில்லை. மருத்துவரை தங்களுக்கு
எத்தனை குழந்தைகள் எனக்கேட்ட போது 3ஆண்டுகளாகிறது. இன்னும் ஏதும் இல்லை என்றதும்
வயாக்ராவிற்கு இணையான பூனைக்காளி விதைகள் 200 கொடுத்து நாள் 1க்கு 1விதைமட்டும்
உண்ணுமாறு சொல்லி. தன் நீண்ட நெடிய அனுபவங்களைக் கூறி விளக்கினார். சளியால்.
தொண்டை சரியில்லாத நான் எப்படி பேசப்போகிறேன் என்று இருந்தேன். முகாமில் வழங்கிய
வெறும் அவல் உண்டவுடன் தொண்டை சரியான அனுபவத்தையும் கூறினார்.
வட்டப்பாத்தி
அமைப்பது எப்படி?
வானகப் பயிற்சியாளர் புதுச்சேரி திரு. செங்கீரன் அவர்கள் காலை முதலே அளவு
நாடாவுடன் மண்வெட்டி, கடப்பாரை சகிதம் சிலருடன் வட்டப்பாத்தி
அமைப்பதிலேயே இருந்தார். பேச்சு முடிந்து, பசி நேரம்
என்பதால் வட்டத்தட்டில் உருண்டை வயிற்றுக்கு உணவாக, தக்காளி
சாதமும், தயிர் சாதமும் வழங்கப்பட்டன. உண்ட மயக்கம்
தொண்டனுக்கும் உண்டு என்பது பழமொழி. எந்த மயக்கமும் இன்றி ஆர்வம் காரணமாக
தொடர்ந்து வட்டப்பாத்தி நேரடி செயல் விளக்கம் நடை பெற்றது. நிலத்தின் மையத்தில்
ஒரு புள்ளியில் வலிமையான குச்சி நடப்பட்டது. அனைவரும் வட்டமாக நிற்க கைதட்டலுடன்
செயல்முறை விளக்கத்துடன் துவங்கியது. குச்சியில் கயிற்றைக் கட்டி 2அடி அளவில் ஒரு
வலிமையான கூரான குச்சி கட்டி கயிறு தளராமல் குச்சியால் வட்டம் வரையப்பட்டது.
பின்னர் மையத்திலிருந்து 6 அடி அளவில் ஒரு வட்டம் வரையப்பட்டது. முதல் வட்டத்திலிருந்து
மண்ணை அடுத்த வட்டத்தில் போட்டு மேடாக்கப்பட்ட்து. 2 அடி வட்டம் நடை பாதை. 4 அடி
வட்டம் பயிர் நடும் பாதை. நடை பாதையில் நடுதல் கூடாது.
நடும்பாதையில் நடக்கக்கூடாது. இது நம்மாழ்வாரின் சுலோகம். அடுத்து மையத்திலிருந்து
8 அடி அளவில் ஒரு வட்டம் வரையப்பட்டது. அடுத்து
மையத்திலிருந்து 12 அடி அளவில் ஒரு வட்டம் வரையப்பட்டது. அடுத்து 12 அடி, 14, 18 என்ற அளவுகளில் வட்டங்கள் வரையப்பட்டன. 2 அடி வட்டம் பள்ளமாகவும் .4
அடி வட்டம் மேடாக விளிம்பு ஓரங்கள் சாய்வாக
இருக்கும்படியும் அமைக்கப்பட்டன (2—4—2)
எனும் அளவில், நடை பாதை - நடும் பாதை - நடை பாதை என மாறி
மாறி வரும் வகையில்) பயிற்சிக்கு வந்தவர்கள் பாத்தி அமைக்கும் பணியில் ஈடுபட்டு
பயிற்சி பெற்றனர். சமமான நீர் பாய நடும் பாதையில் 2 அடி அகலத்தில் வழி
மேட்டிலிருந்து பள்ளம் நோக்கி நீர் செல்லும்
வகையில் அமைக்கப்பட்டது. நடும் பாதையில் இலைச்சருகு மூடாக்கு போட்டு, நீர் தெளித்து, அதன் மேல் எரு போடப்பட்டது.
வட்டப்பாத்தி முறையை அறிமுகப்படுத்தியவர் ஆஸ்திரேலியப் பேராசிரியர் பில் மொல்லிசன்
(Bill
Mollison) ஆவார். இதன் பயன்: பல் பயிர் சாகுபடி; வேர்
அழுகல் வராது; நல்ல காற்றோட்டம்; ஒரேமாதிரியான
சூரிய வெளிச்சம், நீர் சிக்கனம், ஏர்
உழவு தேவையில்லை, பலபயிர் சாகுபடி. 20 ஆண்டுகள் தொடர்ந்து வைத்திருக்கலாம். 2 ஆண்டுகள் கழித்து மண்ணை பிளந்து, எரு இட்டு, மண் மேட்டை உயர்த்தலாம்.
கிழங்கு வகைகளை வட்டவிளிம்பின் ஓரங்களில் நடுதல். ஒரேவகை பக்கத்தில்
பக்கத்தில் நடக்கூடாது. வெண்டை, கத்தரி, பீன்ஸ், தக்காளி, மிளகாய்,
கீரை செடி அவரை, “இஞ்சி” கண்டிப்பாக நட வேண்டும். மூலிகைச் செடிகள் நடல். இவைகளைத் தேவையான
இடைவெளியில் நடுதல், பப்பாளி, முத்துக்
கொட்டை நட பூச்சி அண்டாது. செண்டு மல்லி, சாமந்தி நட
பூச்சிகளைக் கவரும். பயிர்களில் அண்டாது. பூச்சி மருந்து தேவையில்லை. சிறு தானியம்,
கரும்பு, பச்சைப்பயிறு நட, நைட்ரஜனை கிரகித்துக் கொடுக்கும். சணப்பை, துளசி,
தக்கைப்பூண்டு, பூச்சி கட்டுப்படுத்த முருங்கை,
வாழை நடுதல். நிலத்தைச் சுற்றிலும் வாய்க்கால் வெட்டி, பக்கத்து நிலத்தின் செயற்கை உரம் மழை நீரால் அடித்து வராமலும், நம் இயற்கை உரம் அடித்துச் செல்லாமலும் பாதுகாத்தல் பற்றி விரிவாகக் கூறி
விளக்கியதோடு, சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.
திரு பச்சமுத்து அவர்கள், ரசாயன உரத்தால் மண்ணின்
உயிர் தன்மை கெட்டது, டிராக்டர் கொண்டு உழுது, மண் கெட்டியானது, மண் புழு அழிந்தது. மண்மலடாகியது
எனக் கூறி, டிராக்டரால் உழாமல், மாடு
கொண்டு உழுதல் அல்லது பவர்டில்லரால் உழுதல், நிலத்தில்,
கிடை மடக்குதல். இதனால் மண்வளம் காத்தலின் அவசியத்தை
வலியுறுத்தினார். அத்தியந்தல் அரசு விதைப்பண்ணையில் பணியாற்றும், விதை நேர்த்தியில் முனைவர் பட்டம் பெற்ற யோகலட்சுமி அவர்கள் 2013 அக்டோபர்
முதல் விதைப்பண்ணை செயல்படுவது, சிறுதானியம் பயன்பாட்டு
மையமாக, ஜவ்வாதுமலை, சேலம், தர்மபுரி, இவைகளுக்கு மையமான பகுதியாக
திருவண்ணாமலையில் தொடங்கப்பட்டது, இங்கு பாரம்பரிய விதைகள்
தவிர புதிய விதைகள் கண்டுபிடித்தல் பற்றி ஆய்வு நடைபெறுவது தொடர்பாகவும் கூறி
விளக்கியதோடு, விதைநேர்த்தி, 1 எக்டருக்கு
4 டன் மகசூல் கிடைக்கும் ராகி ரகங்கள், வேளாண்
பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட 65 நாட்களில் அறுவடைக்கு வரும் ரகங்கள், சாமை கிலோ ரூ 80, 100 என்ற விலையில் விற்கப்படுவது, திருவண்ணாமலை
மாவட்டத்தில் வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கும் அரசின் நோக்கம் பற்றி கூறியதோடு
சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.
அடுத்து பஞ்சகவியம் தயாரித்தல் செயல் விளக்கத்தை திரு. செங்கீரன் அவர்கள்
அளித்தார். இம்முறையை அறிமுகப்படுத்தியவர் டாக்டர் கொடுமுடி திரு. நடராசன் அவர்கள்
ஆவார். ‘பஞ்ச’ என்பது ஐந்து. பசுவின்
பால், தயிர், நெய், கோமியம், சாணம், இவை முறையே 5,4,3,2,1 என்ற விகிதத்தில் கலந்து கொடுக்க மனிதன் நோயின்றி நலம் பெறுவான். உறவின்
மறைவால் 30 நாட்கள் சரியாக உண்ணாமல், உறங்காமல் உடல் நலன்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீத்தார் இறுதி வழிபாட்டில் வழங்க, உண்டு
நலன் பெற்றது அந்தக்காலம். இப்போதும் நடை முறையில் இருந்தாலும் போதுமான அளவு
உண்பதில்லை. “பாழாய்ப் போனது பசு வாயில்” என்பது பழமொழி. “மனிதன் பயன்படுத்தாமல் போனது பயிர்
வயலில்” என்பது புது மொழி. பஞ்சகவியம் 5 பொருட்களோடு,
மேலும் பல பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இயற்கை
பொருட்களால் தயாரிக்கப்படுவது. இதனால் பயிர்கள் அதிக வளர்ச்சி, பூக்கும் பருவம் நீடித்தல், குறைந்த செலவில் அதிக
லாபம், நீர் சேமிப்பு சூழல்மாசு தடுப்பு, போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.
பஞ்சகவியம்
தயாரித்தல்
நாட்டுப்பசுவின் 5 கிலோ சாணியை 1/4. கிலோ நெய்யுடன் முதல்நாள் பிசைந்து
வைத்து, அதை ஒரு பிளாஸ்டிக் கேனில் போட்டு ( பானை
பயன்படுத்துவது சிறப்பு ) அதனுடன் 3 லிட்டர் நாட்டுப்பசுவின் கோமியம், 2 லிட்டர் பால், 2 லிட்டர் தயிர், 1/2 கிலோ நாட்டு சர்க்கரை, 1 லிட்டர் கரும்பு சாறு,
1 லிட்டர் இளநீர், 1 லிட்டர் தேன், 1//2 லிட்டர் திராட்சை ரசம் ஊற்றினார். ஒவ்வொரு பொருளாகப் போடப்போட அதை
கையால் நன்கு கலக்கிக்கொண்டே இருந்தார். இதனுடன் போட்ட
அனைத்து பொருளுக்கும் சமமாக சுமார் 16 லிட்டர் நீர் ஊற்றிக் கலந்து பஞ்சகவியம்
தயாரித்தல் செயல் விளக்கத்தை நிறைவு செய்தார். இதை காலையில் தயார் செய்தல்,
நிழலில் வைத்தல், தினமும் சூரிய உதயத்திற்கு
முன்னும், சூரிய அஸ்தமனத்திற்கு பின்னும் கலக்குதல், 21 நாள் கழித்து இதை நீருடன் கலந்து பயிருக்கு ஊற்றுதல் அல்லது பாய்ச்சும்
நீரில் சிறுக கலந்து செல்லுமாறு செய்தல். இதனுடன் கனிந்த வாழைப்பழம் 12, 1 கிலோ உளுந்து மாவு, 2 லிட்டர் வடித்த
கஞ்சியும் சேர்க்கலாம் என ஒருவர் கூறினார்.
மேலும் சில செய்திகள்.. தலையாம்பள்ளம் கிராமத்தில் கரும்பு வயலில் சோகை
கொளுத்துவது இல்லை. தென்னை ஓலையை நீரில் நனைத்தால் வேதி அமிலம் உண்டாகிறது.
எல்லாவற்றையும் வட்டமாக அமைத்தலின் நன்மை. மண்ணை மாற்றும் சருகுகள், கரையான், மண் புழு, பட்டாம்
பூச்சி. நமக்கு வேண்டிய காய்கறிகளை நாமே விளைவித்தல். கொடிவகைகளை ஓரங்களில் நடுதல். கோமியத்தில் உப்பு அதிகமாக இருப்பதால் அளவாகப்பயன் படுத்துதல். சுனாமியின் போது
மற்ற பயிர்கள் சாய, இயற்கை வேளாண்மை மூலம் மரக்காணத்தில்.
பயிர் செய்திருந்த மாப்பிள்ளை சம்பா நிமிர்ந்து நின்றது. பஞ்சகவியம் கலக்கும்
போது உழவர் மன்ற செயலர் நகைச்சுவையில் கலக்கினார்.
அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. முகாம் சொற்சுவை,
பொருட்சுவையுடன் பல்சுவைகளுடன் பயனுள்ளதாக இருந்தது.