Pages

Monday, July 9, 2012

உறைந்த இரத்தம்............ பிரிந்த உயிர்..............

சமீபத்தில் என் மனதை மிகவும் வருத்தமடையச் செய்த சம்பவம், என் நண்பரின் அகால மரணம். அதன் காரணம் இரத்த உறைவு (blood clot). இரத்த உறைவு மரணத்திற்குக் காரணமாகுமா? இதுவரை எனக்கும் தெரியாது. மருத்துவர்கள் இரத்த உறைவின் விளைவுகளை எடுத்துரைக்காதது மரணத்திற்கு இட்டுச்சென்றது.

நண்பர்களே, நம் உடல்தான் நம் பிரதான சொத்து. "போகும் போது என்ன கொண்டு போகப்போகிறோம்" என்று சொல்லுவார்கள். ஆனால் போகும்வரை நமது உடல்தான் நம்முடன் இருக்கும்.உங்கள் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தாதீர்கள். என்னதான் கையெழுத்து மட்டுமே போடும் வேலையாயிருந்தாலும் உங்கள் கை அவசியம், கண் பார்வை முக்கியம். வெளியுருப்புகளை விட உள்ளுறுப்புகள் மிக மிக பாதுகாக்க வேண்டியவை. ஆசைகள் அதிகமிருக்கும் அதற்கெல்லாம் ஈடுகொடுக்க உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் வைக்க வேண்டும்.

நண்பர் Dr. ராஜாராம் பாட்டீல் (32), வேளாண் வேதிப்பொருட்களில் முனைவர். இயற்கை விவசாய சான்றளிக்கும் நிறுவனத்தில் கள ஆய்வாளர். கள ஆய்வுகளுக்குச் செல்ல அடிக்கடி பயணிப்பது வழக்கம். அவுரங்கபாத்தில் என் உடன் பணிபுரிந்தார். நாங்கள் இருவரும் ஒரே அறை நண்பர்கள். பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றிருக்கிறோம். நல்ல சிந்தனையாளர், ஆரோக்கியமானவர், நோய் எதுவும் இல்லை. கடந்த மே மாதத்தில் ஒரு நாள், பேருந்தின் உள்ளேயே தடுமாறி விழுந்ததில் கால முட்டி எலும்பில் சிறு முறிவு (minor fracture), உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி scan செய்ததில், இரத்த உறைவு ஏற்பட்டிருக்கிறதென்றும் உறந்த இரத்தத்தை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளவேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டு அதற்கான தேதி முடிவு செய்யப்பட்டது.
 
ஆரோக்கியமான மனிதருக்கு இரத்தம் உறைதல் மிக மிக  தேவையான ஒன்று. ஏதேனும், சிராய்ப்போ அல்லது வெட்டுப்பட்டலோ, வெட்டுப்பட்ட இடத்தில் இரத்தம் அதிகம் வெளியேறாமல் தடுக்கும், உடலின் ஒரு தற்காப்புச் செயல்பாடு. உடலுக்கு வெளியே இரத்தம் உறையும் செயல்பாடு எவ்வளவு மகத்தானதோ அதே அளவு ஆபத்தானது உடலுக்கு உள்ளே நடக்கும் இரத்த உறைவு. உள்காயங்களில் உடலின் உள்ளே இரத்த உறைவு நடக்கும் அபாயம் அதிகம். வீக்கம், தோலின் நிறம் மாறுதல் போன்ற வெளிக்குறிப்புகளும் பல நேரங்களில் இருக்காது. ஆனால் வலி இருக்கும். உறைந்த இரத்தம் அதே இடத்தில் இருக்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், உறைந்த இரத்தம் ஓடும் இரத்ததில் கலந்து ஓட ஆரம்பித்து இதயத்துக்கோ, நுரைஈரலுக்கோ சென்றால்...........இரத்தக் குழாயில், மூச்சுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தி திடீர் மாரடைப்பிற்குக் காரணமாகும். உயிரிழப்பை ஏற்படுத்தும்.

நண்பர் அறுவை சிகிச்சைக்கு முன்பு ஓய்வுக்கால்த்தில் காலை மடக்கக்கூடாது, நடக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு ஓய்விலிருந்தார்.  ஆனால் சிறு இரத்த உறைவு மரணம் வரை கொண்டு செல்லும் என்று தெரியாது. வலி குறைய ஆரம்பித்து அறுவை சிகிச்சைக்கு இரண்டு நாள் இருந்தது. வீட்டின் உள்ளே மட்டுமே நடந்தார். ஞாயிறு அன்று மாலை நெஞ்சு வலிக்க ஆரம்பித்தது, உடனடியாக கிராமத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது ஒரு  மருத்துவமனையில் மருத்துவர் இல்லை. இன்னொரு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்குள் அடுத்தடுத்த மாரடைப்பு (multiple attack) ஏற்பட்டது. மருத்துவர் பரிசோதித்து நண்பர் இறந்து விட்டதாக அறிவித்தார். மூன்று நிமிடத்திற்கு முன் வந்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றார். உடலின் உள்ளே இரத்தம் உறைந்து மரணத்தை ஏற்படுத்தும் இந்த நிலைக்கு deep vein thrombosis, pulmonary embolism என்றும் சொன்னார்கள். எந்தப் பெயராக இருந்தால் என்ன? இது மீட்க முடியாத இழப்பல்லவா?

மிகச்சிறிய இந்த இரத்த உறைவு உயிரையே எடுக்கும் என்ற அறியாமையும், புரியவைக்காத மருத்துவர்களையும் எண்ணி வருந்துகிறேன். இதுபோன்று நம் நெருங்கியவர்களுக்கு ஏற்படாமல் அறிவுரை கூறி தகுந்த நேரத்தில் சிகிச்சை மேற்கொண்டால், 100 சதவீதம் மரணம் ஏற்படாமல் தடுத்துவிடலாம். சிகிச்சை முறைகளும் எளிதானதுதான். தடுக்க முடிந்த உயிரிழப்பு இன்னுமொரு முறையும் நிகழக்கூடாது.
நண்பரின் ஆத்மா அமைதியடையட்டும்.


12 comments:

  1. வருந்துகின்றேன்.:(

    அன்னாரின் ஆத்மசாந்திக்கு பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி

      Delete
  2. மிக்க நன்றி வைதீஸ்வரன்
    உங்கள் பதிவினைப் படிக்கும் வரையில்
    இரத்த உறைவில் இத்தனை பெரிய ஆபத்து இருக்கும் எனத் தெரியாது
    பலமுறை சரியாகைப் போகும் என ஆட்டையாக இருந்துள்ளேன்
    இந்த அரிய தகவலை பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    நண்பரின் மரணம் மனதை அதிகம் பாதித்துப் போகிறது
    அவரது ஆன்மா சாந்தியடையவேண்டிக் கொள்கிறேன்
    அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு. ரமணி

      Delete
  3. avarudaiya athma saanthiyadaiya iraivanai venduvom
    surendran

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி

      Delete
  4. நண்பரின் மரணம் மனதை அதிகம் பாதித்துப் போகிறது
    அவரது ஆன்மா சாந்தியடையவேண்டிக் கொள்கிறேன்
    அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் இறங்கலுக்கும் மிக்க நன்றி

      Delete
  5. மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் இறங்கலுக்கும் மிக்க நன்றி

      Delete
  6. இறங்கல் என்று தவறாக கருத்திட்டுள்ளேன். இரங்கல் என்பதே சரி.

    ReplyDelete
  7. தோழர் ராஜாராம் பாட்டீல்-ன் மறைவு மிகவும் ஏற்றுக் கொள்ள முடியாத இழப்பு. நண்பரின் உடல் இழப்பு நம்மையெல்லாம் ஆராதுயரத்தால் அமிழ்த்துகிறது.
    இதனால் நீங்களும் நண்பரின் குடும்பத்தாரும் உள்ளபடி ஆராதுயரத்தில் அமிழ்ந்திருந்தாலும் இயற்கை உண்மை நமக்கு பல சமயங்களில் கசக்க வைக்கிறது. தப்பிக்க வாய்ப்பில்லாத போது மனம் தடுமாற வைக்கிறது. இச்சமயத்தில் நம் மன அமைதிக்காக பிரார்த்தனை செய்கிறேன். அவர் ஆன்மாவுக்குள் சாந்தி புகும் வரை நாம் அனைவரும் பெரிய சக்தியிடம் முறையிடுவோம்.
    தோழர் ராஜாராம் பாட்டீல் அவர் தம் வாழ்ந்த காலத்தில் சமுதாய சிந்தனையோடு வாழ்ந்திருக்கிறார். இந்த சமுதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற துணிபு என்றும் அவரிடம் இருந்திருக்கிறது. அதற்கு சாட்சியாக தோழர் வைதீஸ்வரன் வெளியிட்டுருந்த “எங்கே விவசாயி?” என்ற தலைப்பில் இங்கு பதிந்திரிந்த தமிழ் மற்றும் ஆங்கில வரிகளுக்கு மராத்தி மொழியார் புரிந்து அறிய சமுதாய மற்றும் மொழி புரட்சியும் செய்ய துணிந்தவர். துணிந்தவர் பெரிய சக்தியின் துணை கொண்டு முடிப்பார்-என்ற வார்த்தைக்கு ஏற்ப அவர் நம் விருப்பப்படியே விட்ட காரியத்தை வேறு உடல் கொண்டு முடிக்க வேண்டும் என்பது என் துணிபு. அவர் என்றும் நம் இதயத்தில் நம்மோடு உள்ளார்.

    ReplyDelete