இயற்கை சீற்றங்களால் பேரழிவு, இமயமலைச் சுனாமி என்று
வர்ணிக்கப்பட்ட உத்தராகாண்ட் மாநிலத்தின் கட்டுப்படுத்த இயலாத வெள்ளம் பல்வேறு
சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தை 5-10 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச்
சென்றுள்ளது. மீண்டு(ம்) பழைய நிலைக்கு
கொண்டு வருவது மிகவும் சவாலான வேலை என்று மத்திய மாநில அரசுகள் குறிப்பிடுகின்றன. இங்கு
மீட்புப் பணியில் ஈடுபட்டு லட்சக்கணக்கான மக்களை உயிருடன் மீட்ட ராணுவத்தின்
நடவடிக்கைகள் பாராட்டுதலுக்குரியது. சராசரியை விட நாலரை மடங்கு அதிக
மழைப்பொழிவுதான் இந்தப் பேரழிவிற்கு காரணமா? இதற்கு காரணம் என்ன?
உத்தராஞ்சல் என அழைக்கப்பட்ட குமாவூன் மற்றும் கார்வால் மண்டலங்கள் கங்கை
மற்றும் யமுனை ஆகிய ஜீவநதிகளின் பிறப்பிடமான இமயமலையுடன் இணைந்த பகுதிகள். இந்தப்
பருவமழை அதிகமாக இருக்கும் என்பது முன்பே கணிக்கப்பட்ட ஒன்றுதான். கணிக்கப்பட்ட
மழை வெள்ள எச்சரிக்கையை யாத்ரீகர்களுக்கு பொது ஊடகங்கள் மூலம் அறிவிக்காததால்
உயிர்சேதம் தவிர்க்கமுடியவில்லை. பருவமழை ஒவ்வொரு வருடமும் சூதாட்டம் போல
ஏறக்குறையதான் இருக்கும். 65 சதவிகிதத்தை வனப்பகுதியாகக் கொண்ட உத்தராகண்ட் மாநிலத்தின்
அரண்களான மரங்களை காலங்காலமாக வணிகக்காரணங்களுக்காக அழிக்கப்பட்டு வருவது
இயற்கைக்கு எதிரான போக்கும் தலையாய காரணமாகும்.
இயற்கைக்கு எதிரான போக்கு என்பது – இமயமலையின் உயரத்திற்கு
ஏற்ப அங்கிருக்கும் மரங்கள், தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் மாறுபடும். மலையின்
பரப்பின் விழும் மழைநீர் அனைத்தும் வழிந்து ஓடிவிடாது, மலையிலும் நீர் ஓட வழிகள்
இருக்கிறது, அது மலையில் இருந்து விழும் இடம் அருவி எனப்படும். மழைநீரை மலையின்
பரப்பு தக்கவைத்துக்கொள்ளும் பாங்கிலேயே இயற்கையான மர வகைகள் இமயமலைக்காடுகளில்
இருந்து வந்துள்ளது. 3000-5000 அடி உயரத்தில் வளரும் குறிப்பிட்ட மரம் பன்ச் ஒக்
மரம்(Quercus Ircana). இதன் தனித்தன்மை இலைகளின் அடிப்பகுதியில் ரோமம்
போன்றிருக்கும். உதிரும் இலைகள் மலைப்பரப்பில் படர்ந்து நீரை அதிகமாக உறிஞ்சி
வைத்துக்கொள்ளும் தன்மை உடையது, மேலும் இந்த இலைப்பரப்பு பிற தாவரங்களின்
வளர்ச்சிக்கும் சாதகமானதாகும். மிருதுவான
இந்த மரம் வணிகரீதியான மதிப்பு குறைவானது. இம்மரத்தின் இலைகள் கால்நடைத் தீவனமாக
பயன்படுத்தப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் சில் பைன் மரம் (Pinus Roxburghii)
வளரும். இம்மரம் ஊசி/முள் போன்ற இலைகளுடன் டர்பன்டைன் எண்ணெய் எடுக்க பயன்படும்
வணிக மதிப்புடைய மரம். இதன் முட்களால் பிற தாவரங்கள் இந்த மரம் அருகே வளரும் வாய்ப்பு குறைவு. இம்மரம் அடிவாரத்தில்
இருந்தவரை பிரச்சனை இல்லை. மலை முழுவதும் பைன் மரங்கள் வளர்க்க ஆரம்பிக்கப்பட்டது
வணிக மதிப்பில்லாத பன்ச் மரங்கள் அழிவிற்கு காரணமானது. இதனால் மழை நீரை மலையில்
உறிஞ்சி வைக்கும் தன்மை மாறிவிட்டது, பிற தாவரங்களின் வளர்ச்சியும் முள் இலைகளால்
பாதிக்கப்பட்டது. அதிக பரப்பில் தாவரங்கள் இல்லாமல் போனது மரங்களின், தாவரங்களின்
வேர்கள் மண்ணை கெட்டியாக பிடித்திருக்கும் நிலை மாறியதால் மண்/மலை சரிவிற்கு
சாதகமான நிலை ஏற்பட்டது. மலைகளின் பரப்பில் இருக்கும் மண்ணை மரங்கள்தான் மழைநீர் மலைப்பரப்பில் ஈர்க்கப்படாமல் ஓடி
ஆற்றுடன் வெள்ளமாக மாறி மலையின் பிற தாவரங்களையும் அழித்துக்கொண்டு கீழே
பள்ளத்தாக்கில் பெருக்கெடுத்து ஓடும் வழியில் அணைகளாலும் கட்டுப்படுத்த
முடியாத அசம்பாவிதமான நிகழ்வில்தான்
சிக்கி இருக்கிறோம். சீனாவையும், நேபாளத்தையும் எல்லையாகக் கொண்டிருக்கும்
பதட்டமான பகுதியான மாநிலம் உத்தராகண்ட். அந்த நாடுகளாலும் ஏற்படாத சேதம், நம்
இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளால் நம்மை அதிகமான சேதத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த போக்கு இன்று நேற்றல்ல ஒரு நூற்றாண்டாகவே நடந்து
கொண்டு வந்திருக்கிறது. ஆங்கிலேய அரசு 80000 கி.மீ. ரயில்வே பாதைக்காக வெட்டி
அழித்த காடுகளில் இந்தக் காடும் விதிவிலக்கில்லை. மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய
காடுகளின் அழிப்பை எதிர்த்து மக்கள் போராட்டங்களும் காலங்காலமாக இந்தப்பகுதியில்
நடந்து வந்துள்ளது, மிக முக்கியமான போராட்டமான 1974ன் சிப்கோ இயக்கம் மலைகிராம
பெண்களால் மரங்களை வெட்டக்கூடாது என்று மரங்களை கட்டிபிடித்துக்கொண்ட இயக்கம்
கார்வால் குமாவூன் பகுதியில் ஏற்பட்டதுதான். அதைத் தொடர்ந்து இந்தியாவின் அனைத்து
பகுதிகளிலும் வன அழிப்புக்கெதிரான பேரியக்கமாக மாறியது. காடுகள் தங்கள்
வாழ்வாதாரமாக இருந்தவரை காடுகளை மக்கள் பாதுகாத்தார்கள். இந்திய வனச்சட்டங்கள்
மூலம் மக்களின் வனத்தின் மீதான உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்வாதாரம் மறுக்கப்பட்டது
மேலும் இக்காடுகளின் அழிவிற்கு காரணமானது. வனங்களில் அந்த நில மக்களை அனுமதிக்காத
அரசுகள் வணிக நோக்கங்களுடன் சுற்றுலாப் பயணிகளுக்கான தங்கும் விடுதிகள் கட்ட
அனுமதித்தது, இயற்கை சீர்கெட ஒரு காரணியாக
அமைந்தது. இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் மலைப்பகுதிகளில், ஆற்றுப்பகுதிகளிலும் ஆன்மீகத்தலங்கள்
இருக்கிறது, சில குறிப்பிட்ட மரங்கள் ஆன்மீகக் காரணங்களுக்காக வளர்க்கப்படுகிறது.
இயற்கையுடன் வழிபாடுகளும் சேர்ந்தே இருக்கும் பாரம்பரிய வழிமுறைகள்தான் இது. ஆனால்
கடந்த இருபது ஆண்டுகளாக ஆன்மீகத்தலங்கள் அதிகமான சொகுசு வசதிகள் வழங்கும்
சுற்றுலாத் தலங்களாக மாறி வருகிறது.மலை மீது உள்ள கோயிலுக்கு கோயில் வாசல் வரை
சாலைகள், சாலைகள் அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட்டு புதிய மரக்கன்றுகள் நடப்படாத
நிலை, மிக அதிக எண்ணிக்கையில் தங்கும் விடுதிகள், பிற கட்டிடங்கள். அங்கு வரும்
மக்களால் ஏற்படும் சுகாதார பிரச்சனைகள். காடுகளை ஊடுருவிய விவசாயமும் இன்னொரு
காரணம், உத்தராகண்ட் வெள்ளச் செய்திகளுடன் மூணாறில் அதிகமான இயற்கை வனங்களை
அழித்து செய்த (தேயிலை, ரப்பர்) விவசாயத்தால் மலைச்சரிவும் உயிர்ச்சேதமும்
ஏற்பட்டுள்ள செய்தியும் எச்சரிக்கை அளிக்கிறது.
இந்த
இயற்கைச் பேரழிவுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், இயற்கையை அழித்தால்
நம் மண்ணிலும் பாதிப்புகள் ஏற்படும் என்பதுதான். மேற்குத்தொடர்ச்சி மலைகளில்
உருவாகும் ஆறுகளாலும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகும் ஆறுகளாலும் நமக்கு
வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு குறைவென்றாலும், இம்மலைகளில் ஏற்படும் பாதிப்பு நம்
பருவ மழைகளிலும், நீர் ஆதாரங்களிலும் எதிரொலிக்கும். பருவக்காற்றைத் தடுத்து
மழைப்பொழிவை ஏற்படுத்துவதிலும் தட்ப வெப்ப நிலை மாற்றங்களிலும் இம்மலைகளின் பங்கு
மிக முக்கியமானது. மிக முக்கியமாக எந்தக் காரணத்திற்காகவும் (கிரானைட், ஆன்மிகம்,
சுற்றுலா, விவசாயம்) இந்த மலைகளின் இயல்பைக் குலைக்க அனுமதிக்கக் கூடாது. சதுப்பு
நில மாங்குரோவ் காடுகளின் அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் 2004 சுனாமியின்
பாதிப்பு குறைவாக இருந்தது
நினைவிருக்கலாம். அந்த மரங்கள் தான் சுனாமியைத் தாங்கி அரணாக விளங்கியது.
இதுவரை அழித்துவிட்ட காடுகளை மீட்பது கடினம்தான் என்றாலும் நம்மால் இயன்ற அளவு நம்
சுற்றுப்பகுதிகளில் மரங்களை வளர்த்து இயற்கையைப் பேணுதல் தான் தீர்வாக அமையும். நெடுஞ்சாலைகளை
அகலப்படுத்துவதற்காக 100 ஆண்டுகளுக்குமேல் வயதுடைய முதிர்ந்த,
வளர்ந்த பெரிய மரங்களை வெட்டாமல் சாலை ஓரத்தில் தொழில்நுட்ப
இயந்திரங்களுடன் வேரடி மண்ணோடு நகர்த்தி நடும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் கட்டிடங்களை உயர்த்துதல், நகர்த்துதல்
தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. அதுபோல மரங்களை நகர்த்தி நடலாம்.
(திருப்பூர், பெருமாநல்லூர், கணக்கம்பாளையம் சாலையில், கிராம மக்கள் வழிபட்டு வந்த
300 ஆண்டுகள் பழமையான வன்னி மரம் மழையால் வேரோடு சாய்ந்தது. மனம் உடைந்த மக்கள் ஒன்றுகூடி ஒரு இடத்தை தேர்வு செய்து பெரிய இயந்திரங்களின்
உதவி, மக்களின் விடா முயற்சி மூலம் பள்ளம் தோண்டி நட்டு உயிர்ப்பித்துள்ளது
ஒரு உதாரணம்.) சாலைகள் அகலப்படுத்துதலில் மரங்கள் வெட்டப்பட்டதால்
நிழலின்றி வெப்பக்காற்று வீசுகிறது. சாலைப்பணி எப்போது முடிந்து
மரங்கள் எப்போது நடுவது…? நிழலும் குளிர்ந்த காற்றும் பெறுவது
எப்போது…? பெரிய
தலைவர்களின் பிறந்த நாட்களில், சுற்றுச்சூழல்
நாள், நீர் நாள்,வன நாள்,தேசிய விழா நாட்களில் மற்றும் இயற்கை ஆர்வலர்களால் லட்சக்கணக்கில் மரங்கள் நடப்பட்டாலும்
அவையெல்லாம் போதா. நிலத்தடி நீர் குறைந்தபோது மழை நீர் சேமிப்பு
தொட்டிகள் அமைக்க கடுமையான சட்டம் கொண்டு வந்தது போல, அனைவரின்
வீட்டிலும் குறைந்த பட்ச மரங்கள் நடுவது எனும் சட்டம் கொண்டு வரவேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை உறுதியளிப்பு சட்டத்தின் நூறு நாள்வேலைவாய்ப்பு
திட்டத்தில் பணி புரிவோர் மழைக்காலங்களில் மரக்கன்றுகள் நடுவது, கோடை காலங்களில் அல்லது நன்கு வளரும்வரை நீர் ஊற்றி பாதுகாப்பு செய்ய நடைமுறைப்படுத்த
வேண்டும். மலைகளில், தரிசு நிலங்களில்,
சாலை ஓரங்களில், பொது இடங்களில், தீ பாதிக்கப்பட்ட காடுகளில், மரக்கன்றுகள் நடுதல்வேண்டும்.
இன்னும் ஒரு எளிய முறை மூலமும் மரங்களை வளர்க்கலாம். களிமண், எரு, பழைய செய்தித்தாள்
காகிதத்தை தண்ணீரில் ஊறவைத்து அனைத்தையும் சேர்த்து பிசைந்து, ஒரு விதையை உள்ளே வைத்து உருண்டையாக்கி அல்லது தட்டையாக்கி வெய்யிலில் காய
வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு தட்டையானவற்றை மலைப்பிரதேசங்களிலும்
உருண்டையானவைகளை தரைப்பகுதிகளிலும் மழை காலத்திற்கு முன்பு மரம் வளர வேண்டிய பல்வேறு
இடங்களில் போட்டு விட வேண்டியதுதான்.பின்பு அந்த விதையின் வளர்ச்சியை
இயற்கை பார்த்துக்கொள்ளும். களிமண், பறவைகள்
மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும். காகிதம் ஈரத்தை உறிஞ்சி
விதை வளர உறுதுணை செய்யும், எரு விதை வளர தேவையான சத்துக்களைத்தரும். ஜப்பானிய இயற்கை வேளாண் அறிஞர் மசானோபு ஃபுகோகா இந்த விதை உருண்டைகளை விமானம்
மூலம் தூவி ஆப்ரிக்காவின் பாலைவனங்களில் காடுகள் வளரப்பயன்படுத்தி வெற்றி கண்டார். நாம் உண்ணும் பழங்களின், சமைக்கும் காய்களின் விதைகளை
எடுத்து வைத்து நிறைய விதைகள் சேர்ந்தபின் இந்த விதை மண்ணுருண்டைகள் செய்து நமது அருகாமையில்
மரங்கள் வளர்க்கலாம். குழந்தைகளுக்கு இந்த முறையை விளையாட்டைப்போல்
சொல்லிக்கொடுக்கலாம். இயற்கையை இயல்பு அழியாமல் வளர்த்து,
அதனோடு இயைந்து வாழ்வோம்.
இயற்கைய்யோடு இயைந்த வாழ்வே பாதுகாப்பானது ..!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
ReplyDelete