Pages

Saturday, June 22, 2013

மழை பொழியுமா? பொய்க்குமா?

நீரின்றி அமையாது உலகு. வளமை இன்றி அமையாது பொருண்மை; பசுமை இன்றி அமையாது குளுமை.குளிர்ச்சி வேண்டின் மழை வேண்டும்; மழை வேண்டின் மேகம் குளிர வேண்டும்; மேகம் குளிர மண்ணில் மரம், செடி, கொடி வேண்டும். வெட்டப்பட்டாலோ அல்லது இயற்கை சீற்றத்தால் அழிந்து பட்டாலோ அந்த இடத்தில் புதிய மரக்கன்றை நட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அந்த இடம் வெறுமை ஆவதோடு வெம்மை அதிகமாகும். அனைத்து இடங்களிலும் இந்நிலை நீடிக்கும் போது வெப்பம் அதிகமாகிறது, குளுமை குறைகிறது. இந்நிலையில் மழை பொழியுமா? பொய்க்குமா?  என்னசெய்யலாம்?

எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு கோடை வெப்பம் மக்களை அதிகமாக வாட்டியது அனைவரும் அறிந்த ஒன்று. வசதி படைத்தவர் குளிர்வாசத்தலங்களுக்கு சென்றனர். வறுமையில் உழன்றோர் கோடை வெப்பம் தாங்க முடியாமல் உயிர்நீத்த செய்தியை நாளிதழ்களில் கண்டிருக்கலாம். அனுதாப “இச்” கொட்டினால், போன உயிர் வருமா? வெப்பம்தான் குறையுமா? இதற்கெல்லாம் என்னகாரணம்? மரம், செடி, கொடிகளை வெட்டியது, ஆற்றுப்படுகைளில் மணலை சுரண்டியது, எவ்வளவு ஆழத்திலிருந்து நிலத்தடி நீரை உறிஞ்ச முடியுமோ அதை செய்வது. காடுகள் வளர்ப்புக்கு பதில் அழிப்பு. பஞ்ச பூதங்களின் சூழல் பாதிப்பிற்கான பற்பலகாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.   சாலை ஓரங்களில் உள்ள நல்ல விளை நிலங்களை மனைகளாக்கியது. இருபுறமும் வயல்கள் இருக்கும் சாலையில் உச்சி வேளை சென்றாலும் குளிர்ந்த காற்று வீசும். இந்த நேரத்தில் திரு.  நெ. து. சுந்தரவடிவேலு எழுதிய இலங்கை பயணக்கட்டுரை நினைவுக்கு வருகிறது. இரயிலில் பயணிக்கும் போது இரு புறமும் கண்ட பசுமைக்காட்சி, பச்சை பட்டாடை போர்த்திக் கொண்டுள்ள நிலமகள், மலைமகள் எனும் வருணனை இன்னும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளது. இலங்கை ஏன் பசுமையாக உள்ளது? இங்கு ஊட்டி,கொடைக்கானல்,குன்னூர், ஏர்காடு இவையெல்லாம் ஏன் பசுமையாகவும் குளுமையாகவும் உள்ளது? காரணம்,இயற்கை எழில் கொஞ்சும் பசுமைத்தாவரங்களன்றோ? அங்கே அவை வளர்க்கப்படுகின்றன.  இங்கோ அவை வெட்டப்படுகின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் பெங்களுரூ சென்றேன். வீட்டிற்கு செல்லும் படிகள்,அதை ஒட்டினாற் போல வளர்ந்த மரம். அடுத்து பெரிய அளவில் ஆடை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் ஒரு அலுவலகம் சென்றேன். அலுவலகத்தின் நடுவில் ஒரு தென்னை மரம் ஓங்கி உயர்ந்து இரண்டு அடுக்குகளுக்கு மேலே  சென்றுள்ளது.அதன் வளர்ச்சிக்கு தடை இல்லாமல் கட்டிடம் அமைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் முக நூலில் ஒரு பெரிய உயர்ந்த மரத்தின் கிளைகளின் வளைவுகளுக்கு ஏற்றார்போல உள்ளும் புறமும் கட்டிடம் அமைக்கப்பட்டிருந்தது கண்டு வியந்தேன். பலர் கட்டிடம் கட்டும் முன் தடையாக உள்ள மரத்தை வெட்டிய பின்னரே  கட்டிடம் கட்டுவர். நான் படிக்கும் போது பள்ளியில் நட்ட புங்கன் மரம் இன்னும் நிழல் தந்து கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடனும், நான் பணியாற்றிய பள்ளியில் புதிய கட்டிடங்கள் கட்டும் போது பல மரங்கள் வெட்டியதை வருத்தத்துடனும் கூறிக்கொள்கிறேன். திருப்பூர், பெருமாநல்லூர், கணக்கம்பாளையம் சாலையில், கிராம மக்கள் அனைவரும் வழிபட்டு வந்த 300 ஆண்டுகள் பழமையான வன்னி மரம் மழையால் வேரோடு சாய்ந்தது. மனம் உடைந்த மக்கள் ஒன்றுகூடி ஒரு இடத்தை தேர்வு செய்து பெரிய இயந்திரங்களின் உதவி, மக்களின் விடா முயற்சி மூலம் பள்ளம் தோண்டி நட்டு உயிர்ப்பித்துள்ளது அனைவர்க்கும் மன நிறைவைத்தருகிறது. வன்னி என்பது ஆன்மீகத்தில் அளப்பரிய மகத்துவமுடையது. ஆலயம் என்றால் ஸ்தல விருட்சம் இருக்கும். பெரும்பாலும்  ஆலயங்கள் இயற்கையான சூழலுடன் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் மன அமைதி, உடல் ஆரோக்கியம், குளுமை அனைத்தும் கிடைக்கிறது. திருமுருகாற்றுப்படையில் முருகன் அமைந்த தலங்களின் இயற்கை வளங்களை அறியலாம். மேலும் தமிழ் சிறு, பெரு இலக்கியங்கள், காப்பியங்கள், இதிகாசங்கள், புராணங்களில் இயற்கையோடு இயற்கையாய் வாழ்ந்த மக்களை அறியலாம்.வன்னி மரம் போல், அடையாறு ஆல மரமும் சாய்ந்ததை மீண்டும் நிமிர்த்தி உயிர்ப்பிக்கச்செய்தது குறிப்பிடத்தக்கது.

தன்வசதிக்காக மரங்களை வெட்டுதல் கூடாது. ஒரு சமயம் முன்னாள் குடியரசுத் தலைவர், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். அந்த இடத்தில் விமானம் இறங்க வசதி இல்லை. விழாப் பொறுப்பில் இருந்த அதிகாரி  விமானம் இறங்குவதற்காக அங்கு இருந்த மரங்களை வெட்டி சமதளம் அமைத்தார். கலாம் அவர்கள் வந்தார். ஏற்கனவே அங்கு வந்த நினைவில் அதிர்ச்சியுடன் கேட்டார், இங்கு இருந்த மரங்கள் எங்கே? எனகேட்க, விமானம் இறங்குவதற்காக வெட்டப்பட்டன என்றார்.வளர்ந்த பச்சை மரங்களை வெட்டியது தவறு. வெட்டிய ஒரு மரத்திற்கு பத்தாக நட்டு வளர்க்க வேண்டுமென அதிகாரிக்கு உத்தரவிட்டார். சாலை ஓரத்தில் வீடு கட்ட வேண்டியது, வீட்டின் எதிரில் உள்ள வளர்ந்த மரத்தை இரவு நேரத்தில் தீ வைத்து அழிக்க வேண்டியது. சாலுத மரத திம்மக்கா என்றால் கர்நாடகாவுக்கே தெரியும். குழந்தை பாக்கியம் இல்லாத அவர் சொன்னது “வயித்துல சுமந்துவளக்கறது மட்டும்தான் உசுரா..? ஆண்டவன் படைப்புல ஆடு, மாடு, மரம், செடின்னு எல்லாமே உயிருதான்ங்கிற உண்மையை, அப்போ என்மனசு தவிச்ச தவிப்பு மூலமா உணர்ந்தேன். குழி பறிச்சு, கன்று நட்டு, தண்ணீர்விட்டு அந்த செடியையே புள்ளையா வளர்ப்போம். ஊர்ல எல்லாரோட புள்ளைகளும் அவுங்கவங்க அப்பன் ஆத்தாவைத்தான் பார்த்துக்குவாங்க. ஆனா என் புள்ளைங்க வளர்ந்து, இந்த ஆத்தாவுக்கு மட்டுமில்ல ஊருக்கே நிழல் கிடைக்கும்’னு என் மனசுக்கு தெளிவு கிடைச்சது. இப்படி சொன்ன அவர் காடு,மேடு அலஞ்சி திரிஞ்சி ஆல மரக் கன்றுகளைக் கொண்டு வந்து நட்டு வளர்த்தார். குடிநீர் பஞ்சத்திலும் நீண்ட தூரம் சென்று நீர் ஊற்றி வளர்த்தார் கணவர் இறந்த பின்னும் இப்பணியை தொடர்ந்து செய்தார். இவ்வாறு நட்டு, சாலையின் இரு மருங்கிலும் வரிசையாக வளர்ந்து நிழல் தந்து கொண்டிருக்கும் மரங்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலே. தூரம் 20 கிலோமீட்டர். அரசின் வீடும், குடியரசுத்தலைவர் முதல் பலரது விருதுகளைப் பெற்றுள்ளார். இவரைப்போல் ஆயிரம் வேண்டாம். ஆளுக்கு ஒன்றிரண்டு நட்டால் போதாதா? நட வேண்டாம், வெட்டாமல் இருந்தால் போதும் என்கிறீர்களா?

    நெடுஞ்சாலைகளை அகலப்படுத்துவதற்காக 100 ஆண்டுகளுக்குமேல் வயதுடைய முதிர்ந்த, வளர்ந்த பெரிய மரங்களை வெட்டாமல் சாலை ஓரத்தில் நகர்த்தக்கூடாதா? கட்டிடங்களை உயர்த்துதல், நகர்த்துதல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. அதுபோல மரங்களைநகர்த்தி  நடக்கூடாதா? (வன்னி மரம், அடையாறு ஆல மரம் போல்)சென்னை முதல் பெங்களுரூ வரையிலான சாலைகள் அகலப்படுத்துதலில் மரங்கள் வெட்டப்பட்டதால் நிழலின்றி வெப்பக்காற்று வீசுகிறது. சாலைப்பணி எப்போது முடிந்து மரங்கள் எப்போது நடுவது…? நிழலும் குளிர்ந்த காற்றும் பெறுவது எப்போது…? பெரிய  தலைவர்களின் பிறந்த நாட்களில், சுற்றுச்சூழல் நாள், நீர் நாள்,வன நாள்,தேசிய விழா நாட்களில் மற்றும் இயற்கை ஆர்வலர்களால்  லட்சக்கணக்கில் மரங்கள் நடப்பட்டாலும் அவையெல்லாம் போதா. நிலத்தடி நீர் குறைந்தபோது மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க கடுமையான சட்டம் கொண்டு வந்தது போல, அனைவரின் வீட்டிலும் குறைந்த பட்ச மரங்கள் நடுவது எனும் சட்டம் கொண்டு வரவேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை உறுதியளிப்பு சட்டத்தின் நூறு நாள்வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி புரிவோர் மழைக்காலங்களில் மரக்கன்றுகள் நடுவது, கோடை காலங்களில் அல்லது நன்கு வளரும்வரை நீர் ஊற்றி பாது காப்பு செய்ய நடைமுறைப்படுத்த வேண்டும். மலைகளில், தரிசு நிலங்களில், சாலை ஓரங்களில், பொது இடங்களில், தீ பாதிக்கப்பட்ட காடுகளில், மரக்கன்றுகள் நடுதல்வேண்டும். இன்னும் ஒரு எளிய முறை மூலமும் மரங்களை வளர்க்கலாம். களிமண், எரு, பழைய செய்தித்தாள் காகிதத்தை தண்ணீரில் ஊறவைத்து அனைத்தையும் சேர்த்து பிசைந்து, ஒரு விதையைஉள்ளே வைத்து உருண்டையாக்கி அல்லது தட்டையாக்கி வெய்யிலில் காய வைத்துக்கொள்ள வேண்டும்.பின்பு தட்டையானவற்றை மலைப்பிரதேசங்களிலும் உருண்டையானவைகளை தரைப்பகுதிகளிலும் மழை காலத்திற்கு முன்பு மரம் வளர வேண்டிய பல்வேறு இடங்களில் போட்டு விட வேண்டியதுதான்.பின்பு அந்த விதையின் வளர்ச்சியை இயற்கை பார்த்துக்கொள்ளும். களிமண், பறவைகள் மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும்.காகிதம் ஈரத்தை உறிஞ்சி விதை வளர உறுதுணை செய்யும், எரு விதை வளர தேவையான சத்துக்களைத்தரும். ஜப்பானிய இயற்கை வேளாண் அறிஞர் மசானோபு ஃபுகோகா இந்த விதை உருண்டைகளை விமானம் மூலம் தூவி ஆப்ரிக்காவின் பாலைவனங்களில் காடுகள் வளரப்பயன்படுத்தி வெற்றி கண்டார். நாம் உண்ணும் பழங்களின், சமைக்கும் காய்களின் விதைகளை எடுத்து வைத்து நிறைய விதைகள் சேர்ந்தபின் இந்த விதை மண்ணுருண்டைகள் செய்து நமது அருகாமையில் மரங்கள் வளர்க்கலாம். குழந்தைகளுக்கு இந்த முறையை விளையாட்டைப்போல் சொல்லிக்கொடுக்கலாம். 


  ஏன் இவற்றைச்செய்ய வேண்டும்? ஓசோன் ஓட்டைக்குப்பின்தான் சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வந்தது. உலக வெப்ப மயமாதலுக்குப்பின்தான் வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு வந்தது.வருமுன் காப்போம் என்பதை ஏன் மறந்தோம்? ஏன் இத்தனை வினாக்கள்? இவை வினாக்கள் அல்ல. விடை காண வேண்டிய விடிவுகாண வேண்டிய வழிகள். ஏன் மரக்கன்றுகள் நட வேண்டும்? மரங்கள் உயிர்கள் வாழ பிராண வாயு, நிழல்,காற்று,காய்,கனி,மணம்,மருந்து இன்னும்  பிற தருவதுடன் நீர்க்கான மழை தர உதவுகிறது. நிலத்தடி நீரைக்காக்கிறது; நிலச்சரிவைத்தடுக்கிறது; ஒலி மாசு,தூசு மாசு,ஓசோன் ஓட்டை தடுக்கிறது; கடற்கரை ஓரம் மரங்கள் இருந்ததால், சுனாமியின் பாதிப்புகள்கூட தவிர்க்கப்பட்டன. இவ்வாறு அனைத்து மாசுகளையும் தடுத்து, சுற்றுச் சூழலையும் காக்க, எல்லாம் தரும் கற்பகத்தரு போன்ற மரங்களை நடுவது ஒன்றே மிக மிகச் சிறந்த வழியாகும். மரத்தைப்பற்றி பார்த்தோம். மழையைப்பார்ப்போம். வள்ளுவன் வான் சிறப்பில் சொன்னது. மழை அமிழ்தம் போன்றது. குடிக்க,உணவாக, உணவை சமைக்க பயன்படுகிறது. இது பொய்த்தால் பசிப்பிணி உண்டாகும்;கடல் நீர் மட்டம் குறையும்; தானம், தவம், பூசனை இராது; எனவே நீரின்றி அமையாது உலகு. நீர் வேண்டின் மழை வேண்டும்; மழை வேண்டின் மரங்கள் நட வேண்டும்; மண்குளிர,  மழைபொழிய இயன்றன அனைத்தும் செய்வோம். இயற்கையைஅழியாமல் வளர்த்து, அதனோடு இயைந்து வாழ்வோம்.   

நா. சிவநேசன்
ஆசிரியர்  
அவலூர்பேட்டை

2 comments:

  1. தகவல் அனுப்புகிறேன்... நன்றி...

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete