Pages

Tuesday, May 28, 2013

கரை சேர்க்குமா கட்டாய படிப்பு..... முதல் பாகம்

பள்ளிக்கல்வி முடித்து மேற்படிப்பில் தேர்ந்தெடுக்கும் துறை சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது? அடிப்படையில் மேற்படிப்பு என்பதே அடுத்து தொழில், வேலை செய்யும் துறையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், பயிற்சி பெறுவதற்கும்தான். அதாவது குறிப்பிட்ட துறையில் வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளுக்கான பணத்தை சம்பாதிப்பதற்காகத்தான். மாணவர்கள் தன் சுயவிருப்பத்துடன் ஒரு துறையை படிக்கத் தேர்ந்தெடுத்து அப்படிப்பின் தொடர்புடைய துறையில் பணியாற்றும்போது முழு ஈடுபாடு இருக்கும். பணம் சம்பாதிப்பதும் அதனுடன் சேர்ந்து நடக்கும். இதே பிடிக்காத துறையில் படித்து பணியாற்றுபவனு(ளு)க்கு பணம் சம்பாதிப்பது ஒன்றே முக்கிய நோக்கம். பணி இரண்டாம்பட்சம் தான். (கட்டாயத்தின் பேரில் படித்த மாணவர் படிப்பிலும் நாட்டமின்றி தெளிவான புரிதலுமின்றி படித்து முடித்து வேலை கிடைப்பதும் கடினம்).


இங்கே தொழில் ஈடுபாடில்லாததால் பணம் சம்பாதிப்பது ஒன்றே அத்தியாவசியமாகிறது. ஆகவே விருப்பமில்லாத துறையில் வேலை செய்பவர்களால் தரமான பொருளோ, சேவையோ தரமுடியாது. இதுபோன்று விருப்பமில்லாத துறையில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை எந்த நாட்டில் அதிகமாகிறதோ அந்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் தரம் எப்படியிருக்கும்? பொருளாதாரம் பாதிக்காதா?

பணம் சம்பாதிக்கும் நோக்கம் முதன்மையாகும் போது தொழில் அறங்கள் (Professional ethics) ஒழிக்கப்படும். தொழிலில் புரிதல் குறைவாக உள்ளதால் உற்பத்தியை எட்ட குறுக்கு வழிகள் கையிலெடுக்கப்படும். உற்பத்தி செய்யப்படும் தரக்குறைவான பொருட்களுக்கான அரசாங்க தரக்கட்டுப்பாட்டுத் துறைகளை சரிக்கட்ட லஞ்சம் ஊழல் கையூட்டுகளால் ஈடுகட்டப்படும். இதுபோன்ற சீரழிவுக்கு பலவேறு காரணங்கள் இருந்தாலும் இக்காரணம் முதன்மையானதும் மறைமுகமானதாகவும் கருதுகிறேன். இந்த தரக்குறைவான பொருட்கள் யார் தலையில் விடிகிறது? அப்பாவி பொதுமக்கள் தலையில்.

This 2 parts of articles published in dinamalar newspaper as one dated 2.6.2013

உங்களுக்கு விருப்பமில்லாத செயலை உங்களால் எவ்வளவு நேரம் செய்ய முடியும்? அச்செயலை நேர்த்தியாக செய்ய முடியுமா? இங்கே நான் குறிப்பிட விரும்புவது, விருப்பமில்லாத துறையில் படித்து விருப்பமில்லாத துறையில் வேலை செய்து வாழ்வது என்பது புதைமணலில் சிக்குவது போன்றது. அதன்பின் மீண்டு வருவது மிகக்கடினம். இது அந்த தனிமனிதனோடு  மட்டும் முடிந்து போவது இல்லை.  சமுதாயத்தையும் பாதிக்கும். மன உளைச்சலில் ஆரம்பித்து குடும்ப உறவுகளில் சமூக உறவுகளில் சிக்கல் என்று நீண்டு கொண்டே போகும். மீனைக் கொண்டுவந்து ஓட்டப்பந்தயத்தில்  ஜெயிக்கச் சொன்னால் எப்படி?விருப்பம் என்பது இயல்பிலிருந்து வருகிறது. இயல்பிலிருந்து  மாறும்போது சமூகம் பாதிக்கப்படுகிறது.

ஒரு சின்ன உதாரணம். ஆட்டோ டிரைவர் தன் தொழிலை விரும்பி ஏற்றுக்கொண்டிருந்தால் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு எவ்வளவு நன்மை. பணம் சம்பாதிப்பது ஒன்றே நோக்கமாகக் கொண்டிருந்தால் எவ்வளவு சங்கடங்கள். இதே போல பணம் சம்பாதிப்பதே முக்கிய நோக்கமாக கொண்ட அரசு ஊழியர்கள்/அதிகாரிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவலர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், அரசியல்வாதிகளால் எவ்வளவு சிக்கல்கள் இந்த சமுதாயத்திற்கு.

விருப்பப்பட்ட துறையில்/தொழிலில் ஈடுபட்டவர்களால் எத்தனை நல்ல பங்களிப்புகள் என வரலாறு முழுவதும் எண்ணிப்பார்க்கலாம். விருப்பமில்லாமல் ஒரு துறையில் ஈடுபட்டவர்களால் வரலாற்றில் இடம்பெறுவது அரிது அதுவும்  விபத்துகளாகவே இருக்கும். இதற்கான தீர்வுகள் என்ன என்பதை இப்பதிவின் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.

இந்தப் பதிவையும் கொஞ்சம் பாருங்களேன்....
கல்லூரியில் சேருவதற்கு முன் - ஒரு சிந்தனை

No comments:

Post a Comment