கரை சேர்க்குமா கட்டாய படிப்பு ..... இரண்டாம் பாகம்

விருப்பமில்லாத துறையை தன் வாழ்நாளை சுமூகமாக ஓட்ட பொருளாதாரத்தை தேட தேர்ந்தெடுப்பதால் பல பாதகமான விளைவுகள் தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் ஏற்படுகிறது என்பதை இப்பதிவின் முதல் பாகத்தில் பார்த்தோம். இப்போது இந்த நிலை ஏன் ஏற்பட்டது, இதற்கான தீர்வுகள் என்ன என்றும் பார்ப்போம்.

பணம் உள்ளவர்கள் வசதியாகப் பிரச்சினை இன்றி வாழ்வதாகத் தெரிவதால் அதுவே நோக்கமாக பலருக்கு இருக்கிறது. அடுத்த வேளை உணவுக்கே வழி இல்லாத போது பலர் எந்த வழியில் பணம் நிறைய கிடைக்குமோ அதைத் தேர்ந்தெடுக்கின்றனர். 25-30 வயது ஆனபின்னர் தான் தாம் செய்த தவறு தெரிகிறது. அதன் பின்னர் திருமணம், குழந்தை என்றானபின், தனி நபர் விருப்பம் என்பது இரண்டாம் இடத்திற்குச் சென்று விடுகிறது. இது போன்று விருப்பமில்லாத துறையை தேர்ந்தெடுப்பது எதனால் நேர்கிறது என்றால் பொருளாதாரத்தை ஈட்டுவதற்கான பரந்துபட்ட பல்வேறு துறைகள் வேலைகள் தொழில்கள் இருப்பது இளவயதினருக்கு தெரியாமல் இருப்பதுதான். பெற்றோர்களும்  ஆசிரியர்களும் அதற்கும் மேலாக கல்விக்கொள்கையும் பள்ளி மாணவர்களுக்கு பலவகைப்பட்ட வேலைவாய்ப்பு துறைகளையும் தொழில்களையும் அறிமுகப்படுத்துவதை முக்கியமான பொருளாக கருதாததும் இந்த நிலைக்கு காரணமாகும். நம் கல்வித்திட்டம் அனைத்து மாணவர்களையும் ஒரு சில வேலைகளுக்காகவே தயார் செய்கிறது. பல துறைகளைப் பற்றி அறிமுகப்படுத்ததால் ஒரு ஒவ்வொரு மாணவனுக்கும் பொருளாதாரத்தை ஈட்ட குறுகிய பாதையே உள்ளது. அதிலும் சாதி ஏற்றத் தாழ்வுகளைப் போல உயர்ந்த வேலை/படிப்பு தரக்குறைவான வேலை/படிப்பு என்ற சமூக மதிப்பீடுகளும் உள்ளன. ஊடகங்களால் ஏற்படுத்தப்படும் ஒரு வித பிம்பம் ஒரு சில வேலைகளையே உயர்ந்தவையாக முன்னிறுத்துகிறது. அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் இந்தக் காரணத்தால் தான் என்ஜினியர், டாக்டர், கலெக்டர் மட்டும் தான் ஆகிறார்கள். வேறு எதுவும் ஆவதில்லை. என்ஜினியரிங்கில் 40க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. அதுகூட எந்த குறிப்பிட்ட துறையில் என்ஜினியர் ஆவது என்பது அவர்களுக்கே தெரியவில்லை. இது இல்லனா அது என்ற மனநிலையில் தான் உள்ளனர் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண் பெற்றவர்கள்.  

குழந்தைகள் பள்ளிக்கல்வி நிறைவடையும் முன்பே இவ்வுலகத்தின்/ நாட்டின்/ பிராந்தியத்தின் பொருளாதாரம் எப்படி நடக்கிறது. எந்தெந்த தொழில்கள் அரசாங்கத்தால், தனியார் நிறுவனங்களால், தனி நபர்களால் நடைபெறுகிறது என்றும் எந்தெந்த தொழில்கள் அவர் சார்ந்த ஊரின்/ மாவட்டத்தின்/ மாநிலத்தின் பொருளாதார நிலைகளின் ஆதாரமாக உள்ளது என்பதையும் பள்ளி மாணவர்களுக்கு விவாதங்களின் மூலமாக கற்றுத் தரவேண்டும். உதாரணமாக விவசாயத் துறையின் பொருளாதாரம் நேரடி வேலைவாய்ப்புகள் மறைமுக வேலை வாய்ப்புகள் குறித்து விவாதிக்கலாம். இதே போல ஒவ்வொரு (சுகாதாரம், ரயில்வே, செய்தித் துறை, ஏற்றுமதி இறக்குமதி, பாதுகாப்பு, கல்வி, வரிவிதிப்பு, நுகர்பொருள், சேவைகள் ....) துறைகளைப்  பற்றி விவாதிக்கலாம். ஒரு தொழில் பாதிக்கப்படும்போது ஏற்படும் தாக்கங்கள் பற்றியும்  அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் விவாதிக்கலாம். இந்த விவாதத்திற்கு வாரம் ஒரு வகுப்பை ஒதுக்கலாம். விளையாட்டு வகுப்பை கால அட்டவணையில் மட்டுமே பார்க்க முடிகின்ற நிலைமை விவாத வகுப்பிற்கு வந்து விடாமல் செயல்படுத்த வேண்டும்.

நம் பாரம்பரிய கல்வியில் இது போன்று பல்வேறு தொழில் துறைகள் குறித்தும் வேலை வாய்ப்புகள் குறித்தும் அறிவிக்கப்படும் பழக்கங்கள் இல்லை. நம் நாட்டில் புகுத்தப்பட்ட பிரிட்டிஷ் கல்வியிலும் பல்வேறு துறை தொழில்கள், வேலைவாய்ப்புகள் மாணவர்கள் கல்விமுறை வாயிலாக தெரிந்துகொள்ள அனுமதிக்கவில்லை. அமெரிக்க, ஐரோப்பிய  பள்ளிகளில் இரண்டு விதமான நடவடிக்கைகள் உண்டு. (1) career day (2) take your child to work-day. இவ்விரண்டும் பள்ளிகளில் நடக்கும். career day- அன்று பெற்றோர், தந்தையோ தாயோ தன்னுடைய மகனின் வகுப்பிற்கு வந்து தான் செய்யும் பணி  குறித்துக் கூறுவார். ஆசிரியர்கள், தீ அணைப்புத் துறையினர், விஞ்ஞானி, பொறியாளர் எனப் பலர் வந்து தாம் செய்யும் பணி குறித்து விளக்குவர். சில சமயம் பள்ளியே சிலரை அழைத்து வருவதுண்டு. இரண்டாவது நடவடிக்கையின் போது மாணவன் தனது தந்தை/தாய் செய்யும் பணி இடத்திற்கு தன் பெற்றோரால் அழைத்துச் செல்லப்பட்டு  அங்கு கவனித்த வேலைகளைக் குறித்து அடுத்த நாள் ஒரு கட்டுரை எழுதி வகுப்பில் படித்துக் காட்ட  வேண்டும். 

இந்த இரண்டு முறைகளையும், விவாத வகுப்புகளையும் பள்ளிகளில் கடைப்பிடிக்க அரசாங்கம் ஆவன செய்யலாம்.

இதெல்லாம் எதற்குக் கூறுகிறேன் என்றால் – அங்கு  உள்ளவர்களுக்கு பலப் பல துறைகளைக் குறித்து மிகச் சிறிய வயதிலேயே தெரிவிக்கப் படுகிறது. அதிலிருந்து அவர்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நமது ஊரில் சிறுவயதினருக்கு, நம்மால் முடிந்தவரை பல வேறு துறைகளை அறிமுகம் செய்ய வேண்டும்.


இந்தப் பதிவையும் கொஞ்சம் பாருங்களேன்....

Comments

Popular posts from this blog

In search of farmer...........

எங்கே விவசாயி?