Pages

Thursday, July 12, 2012

புது மழை

மழை வருது மழை வருது
நெல்லு வாருங்கோ
முக்கா படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்கோ
ஏரோட்டுற மாமனுக்கு
எண்ணி வையுங்கோ
சும்மா திரியுற மாமனுக்கு
சூடு வையுங்கோ

என்று பாடிக்கொண்டு தெருவெங்கும் முழுதாக நனையும் வரை அனைவர் வீட்டு நெல்லையும் வாரி முறுக்கு சுட சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து பூசை வாங்குவதற்குக் காரணம் இந்த மழை தான். இது யார் சொல்லிக் கொடுத்தார்களோ தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடல் தான் அனைவர் வாயிலும் காதிலும். ஓட்டு விளிம்புகளில் சொட்டும் நீரை கைகளில் சேகரிப்பது திண்ணையில் இருந்துகொண்டு. இதெல்லாம் ஒரு விளையாட்டு. ஒரு வேடிக்கை. மழை நாளின் வாடிக்கை. மழைக்கு ஒதுங்கும் திண்ணைகளில் ஈரமும், குளிரும், அவ்வப்போது அடிக்கும் காற்றும் அங்கே உருவாகும் கதைகளும் அப்பப்பா இப்போது நினைத்தாலும் ஈரமாக இருக்கிறது. அந்தக் கால மழை.
Inline image 2
 மழை வரும்போது அண்ணாந்து பார்த்திருக்கிறீர்களா? துளித் துளியாகத் தோன்றாமல் கற்றை போன்று மிக வேகமாக வரும். ஒரு கற்றை மேல் மட்டும் கவனம் கொள்ளாமல் எத்தனை கற்றைகளைப் பார்க்க முடியுமோ அத்தனையையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது, "டேய்! மழையில நனையாத... வீட்டுக்கு உள்ள வா..." அம்மாவின்  பாச மழை.
Inline image 1
"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை", இது ஒளவையாரின் மூதுரை. இயற்கை அன்னைக்குத் தான் எத்தனை பிள்ளைகள். தாய் என்றால் குழந்தைக்குப் பால் தரவேண்டும் அல்லவா? மழை தாய்ப்பாலுக்கு நிகர்.  நல்லாருக்கு மட்டுமல்ல அனைவருக்காகவும் பெய்யும் மழை. தாய்ப்பால் மட்டுமல்ல இரத்தம், விந்து, உமிழ்நீர், வியர்வை அனைத்தும் மழையின் வேறு வடிவங்கள். மழை கெட்டால், இவை அனைத்தும் கெடும்.

மழைத்துளிகளின் எண்ணிக்கை எத்தனை இருக்கும்? இவ்வுலகில் உள்ள பேக்டீரியா, வைரஸ் முதல் யானை, திமிங்கிலம் உள்ளடக்கிய அனைத்து உயிர்களின் எண்ணிக்கையின் மடங்கில் இருக்குமோ!

இயற்கை எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறது. நாம் நீர் நிலைகளில் என்னென்னவோ அசுத்தம் செய்தாலும், ஆவியாகி நீரை மட்டும் எடுத்து மீண்டும் குளிர்ந்து தூய்மையான நீரை மட்டும் அமிர்தமாக (elixir of life) அளிக்கிறது. ஏதோ ஒரு சில தவிர்க்க முடியாத சூழ்நிலைக் கூட்டுகளால், அமில மழை பெய்தது. அவையெல்லாம் தாயின் மிரட்டலைப் போல. தாயைப் பழித்தாலும் தண்ணியைப் பழிக்காதே. காசை தண்ணீர் மாதிரி செலவு செய்யாதே என்று சொல்ல்வார்கள். காசை எப்படி வேண்டுமானால் செலவு செய்யலாம். காசு இன்னிக்கி போவும், நாளைக்கு வரும். ஆனால் தண்ணீர் அப்படியல்ல. சிக்கனம் தேவை. மாசு படுத்தக் கூடாது.

நல்லார் ஒருவர் இருந்தால் அவருக்காகப் பெய்யும் மழை என்று பேசிக்கொண்டிருந்தோம். நல்லார் இல்லாமல் கூட பெய்யும் மழை. ஆனால் சூடோமொனாஸ் சிரிங்கே (Pseudomonas Syringae) என்ற நுண்ணுயிர் பேக்டீரியா  இல்லாமல் பெய்யாது மழை. சமீபத்திய கண்டுபிடிப்பு. இந்த நல்லவரை ஆலங்கட்டிகளின் நடுவிலிருந்து கண்டெடுத்திருக்கிரார்கள். காற்றுடன் மேகம் வரை சென்று, நீராவியை மிக வேகமாக ஒன்று கூட்டி உறைய வைக்கும் (நீர் உறையும் வெப்ப நிலையை விட அதிகமான வெப்ப நிலையிலேயே). இதே போல இந்த சிரிங்கே, தாவரங்களின் பகுதிகளை உறைய வைத்து தாவர செல்களைக் கொல்லும் நல்லவர். முன்பு எழுதிய மழை பதிவில், இமயமலை பள்ளத்தாக்கில் நடந்த மனிதக்கூட்டத்தின் மர்ம சாவுக்கும் இந்த நல்லவர் தான் காரணம்.

மண்ணிலும் இருந்து, விண்ணுக்கும் சென்று, மீண்டும் மண்ணை நோக்கி வரும் மழையுடன் பயணிக்கும் சூடோமொனாஸ் சிரிங்கேவாக மாற ஆசை.

5 comments:

  1. "மண்ணிலும் இருந்து, விண்ணுக்கும் சென்று, மீண்டும் மண்ணை நோக்கி வரும் மழையுடன் பயணிக்கும் சூடோமொனாஸ் சிரிங்கேவாக மாற ஆசை"

    ஆசை தோசை அப்பளம் வடை...

    ReplyDelete
    Replies
    1. innoru aasai...

      oh it rains! oh it rains!
      sweep in the grains
      fry the murukku in 3 cups of rice
      eat murukku with the uncle who works in farm
      beat the uncle who wander here and there!
      sing like மழை வருது மழை வருது

      Delete
    2. innoru aasai...

      oh it rains! oh it rains!
      sweep in the grains
      fry the murukku in 3 cups of rice
      eat murukku with the uncle who works in farm
      beat the uncle who wander here and there!
      sing like மழை வருது மழை வருது

      Delete
  2. என் சோம்பேறி தனத்திற்கு ஒரு சூடு போட்டு நான் இதை படிக்க விழைந்தேன்.
    நீங்கள் இங்கு வெளியிட்டிருக்கும் விடயத்தை படித்தேன்.....
    மழைத்துளி நம் மீது படும் போதெல்லாம் அதனை அனுபவிக்காமல் எத்தனையோ முறை என்னையே கடுப்பேற்றிக் கொண்ட நாட்கள் தான் நினைவுக்கு வருகிறது.
    சென்றுபோன மழை நாட்களிலெல்லாம் அனுபவிக்க வேண்டியதை அறிவில்லாமல் விட்டு விட்டதை நினைத்து பார்க்கிறேன். வருந்துகிறேன்.
    இதனை நான் படிக்கும் போதுஎன்னை சரி செய்து கொள்ள ஒரு வாய்ப்பாக என்னை நான் உட்படுத்திக்கொண்டேன்.
    “மழை தாய்ப்பாலுக்கு நிகர். நல்லாருக்கு மட்டுமல்ல அனைவருக்காகவும் பெய்யும் மழை. தாய்ப்பால் மட்டுமல்ல இரத்தம், விந்து, உமிழ்நீர், வியர்வை அனைத்தும் மழையின் வேறு வடிவங்கள். மழை கெட்டால், இவை அனைத்தும் கெடும்”.--- என்பவை என்னுள் ஆழமாக பதிந்து விட்டது. மேலும் “சூடோமொனாஸ் சிரிங்கே” – என்ற புது வார்த்தையும் அவர்களின் கூட்டு முயற்சிகளும் என்னை கரைய வைக்கிறது.இன்னும் என்னுள் கொஞ்சம் உள்ளே சென்றால் இவனுக்குள் நான் இருக்கிறேன் என்ற மெய்யுனற்வு மேலிடுகிறது. உங்கள் இம்முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete