Pages

Tuesday, July 2, 2013

பழி வாங்குமா இயற்கை?

   இயற்கை சீற்றங்களால் பேரழிவு, இமயமலைச் சுனாமி என்று வர்ணிக்கப்பட்ட உத்தராகாண்ட் மாநிலத்தின் கட்டுப்படுத்த இயலாத வெள்ளம் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தை 5-10 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுள்ளது. மீண்டு(ம்) பழைய நிலைக்கு கொண்டு வருவது மிகவும் சவாலான வேலை என்று மத்திய மாநில அரசுகள் குறிப்பிடுகின்றன. இங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டு லட்சக்கணக்கான மக்களை உயிருடன் மீட்ட ராணுவத்தின் நடவடிக்கைகள் பாராட்டுதலுக்குரியது. சராசரியை விட நாலரை மடங்கு அதிக மழைப்பொழிவுதான் இந்தப் பேரழிவிற்கு காரணமா? இதற்கு காரணம் என்ன?
 
    உத்தராஞ்சல் என அழைக்கப்பட்ட  குமாவூன் மற்றும் கார்வால் மண்டலங்கள் கங்கை மற்றும் யமுனை ஆகிய ஜீவநதிகளின் பிறப்பிடமான இமயமலையுடன் இணைந்த பகுதிகள். இந்தப் பருவமழை அதிகமாக இருக்கும் என்பது முன்பே கணிக்கப்பட்ட ஒன்றுதான். கணிக்கப்பட்ட மழை வெள்ள எச்சரிக்கையை யாத்ரீகர்களுக்கு பொது ஊடகங்கள் மூலம் அறிவிக்காததால் உயிர்சேதம் தவிர்க்கமுடியவில்லை. பருவமழை ஒவ்வொரு வருடமும் சூதாட்டம் போல ஏறக்குறையதான் இருக்கும். 65 சதவிகிதத்தை வனப்பகுதியாகக் கொண்ட உத்தராகண்ட் மாநிலத்தின் அரண்களான மரங்களை காலங்காலமாக வணிகக்காரணங்களுக்காக அழிக்கப்பட்டு வருவது இயற்கைக்கு எதிரான போக்கும் தலையாய காரணமாகும்.  

       இயற்கைக்கு எதிரான போக்கு என்பது – இமயமலையின் உயரத்திற்கு ஏற்ப அங்கிருக்கும் மரங்கள், தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் மாறுபடும். மலையின் பரப்பின் விழும் மழைநீர் அனைத்தும் வழிந்து ஓடிவிடாது, மலையிலும் நீர் ஓட வழிகள் இருக்கிறது, அது மலையில் இருந்து விழும் இடம் அருவி எனப்படும். மழைநீரை மலையின் பரப்பு தக்கவைத்துக்கொள்ளும் பாங்கிலேயே இயற்கையான மர வகைகள் இமயமலைக்காடுகளில் இருந்து வந்துள்ளது. 3000-5000 அடி உயரத்தில் வளரும் குறிப்பிட்ட மரம் பன்ச் ஒக் மரம்(Quercus Ircana). இதன் தனித்தன்மை இலைகளின் அடிப்பகுதியில் ரோமம் போன்றிருக்கும். உதிரும் இலைகள் மலைப்பரப்பில் படர்ந்து நீரை அதிகமாக உறிஞ்சி வைத்துக்கொள்ளும் தன்மை உடையது, மேலும் இந்த இலைப்பரப்பு பிற தாவரங்களின் வளர்ச்சிக்கும்  சாதகமானதாகும். மிருதுவான இந்த மரம் வணிகரீதியான மதிப்பு குறைவானது. இம்மரத்தின் இலைகள் கால்நடைத் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் சில் பைன் மரம் (Pinus Roxburghii) வளரும். இம்மரம் ஊசி/முள் போன்ற இலைகளுடன் டர்பன்டைன் எண்ணெய் எடுக்க பயன்படும் வணிக மதிப்புடைய மரம். இதன் முட்களால் பிற தாவரங்கள் இந்த மரம் அருகே  வளரும் வாய்ப்பு குறைவு. இம்மரம் அடிவாரத்தில் இருந்தவரை பிரச்சனை இல்லை. மலை முழுவதும் பைன் மரங்கள் வளர்க்க ஆரம்பிக்கப்பட்டது வணிக மதிப்பில்லாத பன்ச் மரங்கள் அழிவிற்கு காரணமானது. இதனால் மழை நீரை மலையில் உறிஞ்சி வைக்கும் தன்மை மாறிவிட்டது, பிற தாவரங்களின் வளர்ச்சியும் முள் இலைகளால் பாதிக்கப்பட்டது. அதிக பரப்பில் தாவரங்கள் இல்லாமல் போனது மரங்களின், தாவரங்களின் வேர்கள் மண்ணை கெட்டியாக பிடித்திருக்கும் நிலை மாறியதால் மண்/மலை சரிவிற்கு சாதகமான நிலை ஏற்பட்டது. மலைகளின் பரப்பில் இருக்கும் மண்ணை மரங்கள்தான்  மழைநீர் மலைப்பரப்பில் ஈர்க்கப்படாமல் ஓடி ஆற்றுடன் வெள்ளமாக மாறி மலையின் பிற தாவரங்களையும் அழித்துக்கொண்டு கீழே பள்ளத்தாக்கில் பெருக்கெடுத்து ஓடும் வழியில் அணைகளாலும் கட்டுப்படுத்த முடியாத  அசம்பாவிதமான நிகழ்வில்தான் சிக்கி இருக்கிறோம். சீனாவையும், நேபாளத்தையும் எல்லையாகக் கொண்டிருக்கும் பதட்டமான பகுதியான மாநிலம் உத்தராகண்ட். அந்த நாடுகளாலும் ஏற்படாத சேதம், நம் இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளால் நம்மை அதிகமான சேதத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 


         இந்த போக்கு இன்று நேற்றல்ல ஒரு நூற்றாண்டாகவே நடந்து கொண்டு வந்திருக்கிறது. ஆங்கிலேய அரசு 80000 கி.மீ. ரயில்வே பாதைக்காக வெட்டி அழித்த காடுகளில் இந்தக் காடும் விதிவிலக்கில்லை. மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய காடுகளின் அழிப்பை எதிர்த்து மக்கள் போராட்டங்களும் காலங்காலமாக இந்தப்பகுதியில் நடந்து வந்துள்ளது, மிக முக்கியமான போராட்டமான 1974ன் சிப்கோ இயக்கம் மலைகிராம பெண்களால் மரங்களை வெட்டக்கூடாது என்று மரங்களை கட்டிபிடித்துக்கொண்ட இயக்கம் கார்வால் குமாவூன் பகுதியில் ஏற்பட்டதுதான். அதைத் தொடர்ந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வன அழிப்புக்கெதிரான பேரியக்கமாக மாறியது. காடுகள் தங்கள் வாழ்வாதாரமாக இருந்தவரை காடுகளை மக்கள் பாதுகாத்தார்கள். இந்திய வனச்சட்டங்கள் மூலம் மக்களின் வனத்தின் மீதான உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்வாதாரம் மறுக்கப்பட்டது மேலும் இக்காடுகளின் அழிவிற்கு காரணமானது. வனங்களில் அந்த நில மக்களை அனுமதிக்காத அரசுகள் வணிக நோக்கங்களுடன் சுற்றுலாப் பயணிகளுக்கான தங்கும் விடுதிகள் கட்ட அனுமதித்தது, இயற்கை சீர்கெட  ஒரு காரணியாக அமைந்தது. இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் மலைப்பகுதிகளில், ஆற்றுப்பகுதிகளிலும் ஆன்மீகத்தலங்கள் இருக்கிறது, சில குறிப்பிட்ட மரங்கள் ஆன்மீகக் காரணங்களுக்காக வளர்க்கப்படுகிறது. இயற்கையுடன் வழிபாடுகளும் சேர்ந்தே இருக்கும் பாரம்பரிய வழிமுறைகள்தான் இது. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளாக ஆன்மீகத்தலங்கள் அதிகமான சொகுசு வசதிகள் வழங்கும் சுற்றுலாத் தலங்களாக மாறி வருகிறது.மலை மீது உள்ள கோயிலுக்கு கோயில் வாசல் வரை சாலைகள், சாலைகள் அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட்டு புதிய மரக்கன்றுகள் நடப்படாத நிலை, மிக அதிக எண்ணிக்கையில் தங்கும் விடுதிகள், பிற கட்டிடங்கள். அங்கு வரும் மக்களால் ஏற்படும் சுகாதார பிரச்சனைகள். காடுகளை ஊடுருவிய விவசாயமும் இன்னொரு காரணம், உத்தராகண்ட் வெள்ளச் செய்திகளுடன் மூணாறில் அதிகமான இயற்கை வனங்களை அழித்து செய்த (தேயிலை, ரப்பர்) விவசாயத்தால் மலைச்சரிவும் உயிர்ச்சேதமும் ஏற்பட்டுள்ள செய்தியும் எச்சரிக்கை அளிக்கிறது.


இந்த இயற்கைச் பேரழிவுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், இயற்கையை அழித்தால் நம் மண்ணிலும் பாதிப்புகள் ஏற்படும் என்பதுதான். மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உருவாகும் ஆறுகளாலும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகும் ஆறுகளாலும் நமக்கு வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு குறைவென்றாலும், இம்மலைகளில் ஏற்படும் பாதிப்பு நம் பருவ மழைகளிலும், நீர் ஆதாரங்களிலும் எதிரொலிக்கும். பருவக்காற்றைத் தடுத்து மழைப்பொழிவை ஏற்படுத்துவதிலும் தட்ப வெப்ப நிலை மாற்றங்களிலும் இம்மலைகளின் பங்கு மிக முக்கியமானது. மிக முக்கியமாக எந்தக் காரணத்திற்காகவும் (கிரானைட், ஆன்மிகம், சுற்றுலா, விவசாயம்) இந்த மலைகளின் இயல்பைக் குலைக்க அனுமதிக்கக் கூடாது. சதுப்பு நில மாங்குரோவ் காடுகளின் அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் 2004 சுனாமியின் பாதிப்பு குறைவாக இருந்தது  நினைவிருக்கலாம். அந்த மரங்கள் தான் சுனாமியைத் தாங்கி அரணாக விளங்கியது. இதுவரை அழித்துவிட்ட காடுகளை மீட்பது கடினம்தான் என்றாலும் நம்மால் இயன்ற அளவு நம் சுற்றுப்பகுதிகளில் மரங்களை வளர்த்து இயற்கையைப் பேணுதல் தான் தீர்வாக அமையும். நெடுஞ்சாலைகளை அகலப்படுத்துவதற்காக 100 ஆண்டுகளுக்குமேல் வயதுடைய முதிர்ந்த, வளர்ந்த பெரிய மரங்களை வெட்டாமல் சாலை ஓரத்தில் தொழில்நுட்ப இயந்திரங்களுடன் வேரடி மண்ணோடு நகர்த்தி நடும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்  கட்டிடங்களை உயர்த்துதல், நகர்த்துதல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. அதுபோல மரங்களை நகர்த்தி நடலாம். (திருப்பூர், பெருமாநல்லூர், கணக்கம்பாளையம் சாலையில், கிராம மக்கள் வழிபட்டு வந்த 300 ஆண்டுகள் பழமையான வன்னி மரம் மழையால் வேரோடு சாய்ந்தது. மனம் உடைந்த மக்கள் ஒன்றுகூடி ஒரு இடத்தை தேர்வு செய்து பெரிய இயந்திரங்களின் உதவி, மக்களின் விடா முயற்சி மூலம் பள்ளம் தோண்டி நட்டு உயிர்ப்பித்துள்ளது ஒரு உதாரணம்.) சாலைகள் அகலப்படுத்துதலில் மரங்கள் வெட்டப்பட்டதால் நிழலின்றி வெப்பக்காற்று வீசுகிறது. சாலைப்பணி எப்போது முடிந்து மரங்கள் எப்போது நடுவது…? நிழலும் குளிர்ந்த காற்றும் பெறுவது எப்போது…? பெரிய  தலைவர்களின் பிறந்த நாட்களில், சுற்றுச்சூழல் நாள், நீர் நாள்,வன நாள்,தேசிய விழா நாட்களில் மற்றும் இயற்கை ஆர்வலர்களால்  லட்சக்கணக்கில் மரங்கள் நடப்பட்டாலும் அவையெல்லாம் போதா. நிலத்தடி நீர் குறைந்தபோது மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க கடுமையான சட்டம் கொண்டு வந்தது போல, அனைவரின் வீட்டிலும் குறைந்த பட்ச மரங்கள் நடுவது எனும் சட்டம் கொண்டு வரவேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை உறுதியளிப்பு சட்டத்தின் நூறு நாள்வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி புரிவோர் மழைக்காலங்களில் மரக்கன்றுகள் நடுவது, கோடை காலங்களில் அல்லது நன்கு வளரும்வரை நீர் ஊற்றி பாதுகாப்பு செய்ய நடைமுறைப்படுத்த வேண்டும். மலைகளில், தரிசு நிலங்களில், சாலை ஓரங்களில், பொது இடங்களில், தீ பாதிக்கப்பட்ட காடுகளில், மரக்கன்றுகள் நடுதல்வேண்டும். இன்னும் ஒரு எளிய முறை மூலமும் மரங்களை வளர்க்கலாம். களிமண், எரு, பழைய செய்தித்தாள் காகிதத்தை தண்ணீரில் ஊறவைத்து அனைத்தையும் சேர்த்து பிசைந்து, ஒரு விதையை உள்ளே வைத்து உருண்டையாக்கி அல்லது தட்டையாக்கி வெய்யிலில் காய வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு தட்டையானவற்றை மலைப்பிரதேசங்களிலும் உருண்டையானவைகளை தரைப்பகுதிகளிலும் மழை காலத்திற்கு முன்பு மரம் வளர வேண்டிய பல்வேறு இடங்களில் போட்டு விட வேண்டியதுதான்.பின்பு அந்த விதையின் வளர்ச்சியை இயற்கை பார்த்துக்கொள்ளும். களிமண், பறவைகள் மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும். காகிதம் ஈரத்தை உறிஞ்சி விதை வளர உறுதுணை செய்யும், எரு விதை வளர தேவையான சத்துக்களைத்தரும். ஜப்பானிய இயற்கை வேளாண் அறிஞர் மசானோபு ஃபுகோகா இந்த விதை உருண்டைகளை விமானம் மூலம் தூவி ஆப்ரிக்காவின் பாலைவனங்களில் காடுகள் வளரப்பயன்படுத்தி வெற்றி கண்டார். நாம் உண்ணும் பழங்களின், சமைக்கும் காய்களின் விதைகளை எடுத்து வைத்து நிறைய விதைகள் சேர்ந்தபின் இந்த விதை மண்ணுருண்டைகள் செய்து நமது அருகாமையில் மரங்கள் வளர்க்கலாம். குழந்தைகளுக்கு இந்த முறையை விளையாட்டைப்போல் சொல்லிக்கொடுக்கலாம். இயற்கையை இயல்பு அழியாமல் வளர்த்து, அதனோடு இயைந்து வாழ்வோம்.   

Saturday, June 22, 2013

மழை பொழியுமா? பொய்க்குமா?

நீரின்றி அமையாது உலகு. வளமை இன்றி அமையாது பொருண்மை; பசுமை இன்றி அமையாது குளுமை.குளிர்ச்சி வேண்டின் மழை வேண்டும்; மழை வேண்டின் மேகம் குளிர வேண்டும்; மேகம் குளிர மண்ணில் மரம், செடி, கொடி வேண்டும். வெட்டப்பட்டாலோ அல்லது இயற்கை சீற்றத்தால் அழிந்து பட்டாலோ அந்த இடத்தில் புதிய மரக்கன்றை நட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அந்த இடம் வெறுமை ஆவதோடு வெம்மை அதிகமாகும். அனைத்து இடங்களிலும் இந்நிலை நீடிக்கும் போது வெப்பம் அதிகமாகிறது, குளுமை குறைகிறது. இந்நிலையில் மழை பொழியுமா? பொய்க்குமா?  என்னசெய்யலாம்?

எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு கோடை வெப்பம் மக்களை அதிகமாக வாட்டியது அனைவரும் அறிந்த ஒன்று. வசதி படைத்தவர் குளிர்வாசத்தலங்களுக்கு சென்றனர். வறுமையில் உழன்றோர் கோடை வெப்பம் தாங்க முடியாமல் உயிர்நீத்த செய்தியை நாளிதழ்களில் கண்டிருக்கலாம். அனுதாப “இச்” கொட்டினால், போன உயிர் வருமா? வெப்பம்தான் குறையுமா? இதற்கெல்லாம் என்னகாரணம்? மரம், செடி, கொடிகளை வெட்டியது, ஆற்றுப்படுகைளில் மணலை சுரண்டியது, எவ்வளவு ஆழத்திலிருந்து நிலத்தடி நீரை உறிஞ்ச முடியுமோ அதை செய்வது. காடுகள் வளர்ப்புக்கு பதில் அழிப்பு. பஞ்ச பூதங்களின் சூழல் பாதிப்பிற்கான பற்பலகாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.   சாலை ஓரங்களில் உள்ள நல்ல விளை நிலங்களை மனைகளாக்கியது. இருபுறமும் வயல்கள் இருக்கும் சாலையில் உச்சி வேளை சென்றாலும் குளிர்ந்த காற்று வீசும். இந்த நேரத்தில் திரு.  நெ. து. சுந்தரவடிவேலு எழுதிய இலங்கை பயணக்கட்டுரை நினைவுக்கு வருகிறது. இரயிலில் பயணிக்கும் போது இரு புறமும் கண்ட பசுமைக்காட்சி, பச்சை பட்டாடை போர்த்திக் கொண்டுள்ள நிலமகள், மலைமகள் எனும் வருணனை இன்னும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளது. இலங்கை ஏன் பசுமையாக உள்ளது? இங்கு ஊட்டி,கொடைக்கானல்,குன்னூர், ஏர்காடு இவையெல்லாம் ஏன் பசுமையாகவும் குளுமையாகவும் உள்ளது? காரணம்,இயற்கை எழில் கொஞ்சும் பசுமைத்தாவரங்களன்றோ? அங்கே அவை வளர்க்கப்படுகின்றன.  இங்கோ அவை வெட்டப்படுகின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் பெங்களுரூ சென்றேன். வீட்டிற்கு செல்லும் படிகள்,அதை ஒட்டினாற் போல வளர்ந்த மரம். அடுத்து பெரிய அளவில் ஆடை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் ஒரு அலுவலகம் சென்றேன். அலுவலகத்தின் நடுவில் ஒரு தென்னை மரம் ஓங்கி உயர்ந்து இரண்டு அடுக்குகளுக்கு மேலே  சென்றுள்ளது.அதன் வளர்ச்சிக்கு தடை இல்லாமல் கட்டிடம் அமைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் முக நூலில் ஒரு பெரிய உயர்ந்த மரத்தின் கிளைகளின் வளைவுகளுக்கு ஏற்றார்போல உள்ளும் புறமும் கட்டிடம் அமைக்கப்பட்டிருந்தது கண்டு வியந்தேன். பலர் கட்டிடம் கட்டும் முன் தடையாக உள்ள மரத்தை வெட்டிய பின்னரே  கட்டிடம் கட்டுவர். நான் படிக்கும் போது பள்ளியில் நட்ட புங்கன் மரம் இன்னும் நிழல் தந்து கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடனும், நான் பணியாற்றிய பள்ளியில் புதிய கட்டிடங்கள் கட்டும் போது பல மரங்கள் வெட்டியதை வருத்தத்துடனும் கூறிக்கொள்கிறேன். திருப்பூர், பெருமாநல்லூர், கணக்கம்பாளையம் சாலையில், கிராம மக்கள் அனைவரும் வழிபட்டு வந்த 300 ஆண்டுகள் பழமையான வன்னி மரம் மழையால் வேரோடு சாய்ந்தது. மனம் உடைந்த மக்கள் ஒன்றுகூடி ஒரு இடத்தை தேர்வு செய்து பெரிய இயந்திரங்களின் உதவி, மக்களின் விடா முயற்சி மூலம் பள்ளம் தோண்டி நட்டு உயிர்ப்பித்துள்ளது அனைவர்க்கும் மன நிறைவைத்தருகிறது. வன்னி என்பது ஆன்மீகத்தில் அளப்பரிய மகத்துவமுடையது. ஆலயம் என்றால் ஸ்தல விருட்சம் இருக்கும். பெரும்பாலும்  ஆலயங்கள் இயற்கையான சூழலுடன் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் மன அமைதி, உடல் ஆரோக்கியம், குளுமை அனைத்தும் கிடைக்கிறது. திருமுருகாற்றுப்படையில் முருகன் அமைந்த தலங்களின் இயற்கை வளங்களை அறியலாம். மேலும் தமிழ் சிறு, பெரு இலக்கியங்கள், காப்பியங்கள், இதிகாசங்கள், புராணங்களில் இயற்கையோடு இயற்கையாய் வாழ்ந்த மக்களை அறியலாம்.வன்னி மரம் போல், அடையாறு ஆல மரமும் சாய்ந்ததை மீண்டும் நிமிர்த்தி உயிர்ப்பிக்கச்செய்தது குறிப்பிடத்தக்கது.

தன்வசதிக்காக மரங்களை வெட்டுதல் கூடாது. ஒரு சமயம் முன்னாள் குடியரசுத் தலைவர், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். அந்த இடத்தில் விமானம் இறங்க வசதி இல்லை. விழாப் பொறுப்பில் இருந்த அதிகாரி  விமானம் இறங்குவதற்காக அங்கு இருந்த மரங்களை வெட்டி சமதளம் அமைத்தார். கலாம் அவர்கள் வந்தார். ஏற்கனவே அங்கு வந்த நினைவில் அதிர்ச்சியுடன் கேட்டார், இங்கு இருந்த மரங்கள் எங்கே? எனகேட்க, விமானம் இறங்குவதற்காக வெட்டப்பட்டன என்றார்.வளர்ந்த பச்சை மரங்களை வெட்டியது தவறு. வெட்டிய ஒரு மரத்திற்கு பத்தாக நட்டு வளர்க்க வேண்டுமென அதிகாரிக்கு உத்தரவிட்டார். சாலை ஓரத்தில் வீடு கட்ட வேண்டியது, வீட்டின் எதிரில் உள்ள வளர்ந்த மரத்தை இரவு நேரத்தில் தீ வைத்து அழிக்க வேண்டியது. சாலுத மரத திம்மக்கா என்றால் கர்நாடகாவுக்கே தெரியும். குழந்தை பாக்கியம் இல்லாத அவர் சொன்னது “வயித்துல சுமந்துவளக்கறது மட்டும்தான் உசுரா..? ஆண்டவன் படைப்புல ஆடு, மாடு, மரம், செடின்னு எல்லாமே உயிருதான்ங்கிற உண்மையை, அப்போ என்மனசு தவிச்ச தவிப்பு மூலமா உணர்ந்தேன். குழி பறிச்சு, கன்று நட்டு, தண்ணீர்விட்டு அந்த செடியையே புள்ளையா வளர்ப்போம். ஊர்ல எல்லாரோட புள்ளைகளும் அவுங்கவங்க அப்பன் ஆத்தாவைத்தான் பார்த்துக்குவாங்க. ஆனா என் புள்ளைங்க வளர்ந்து, இந்த ஆத்தாவுக்கு மட்டுமில்ல ஊருக்கே நிழல் கிடைக்கும்’னு என் மனசுக்கு தெளிவு கிடைச்சது. இப்படி சொன்ன அவர் காடு,மேடு அலஞ்சி திரிஞ்சி ஆல மரக் கன்றுகளைக் கொண்டு வந்து நட்டு வளர்த்தார். குடிநீர் பஞ்சத்திலும் நீண்ட தூரம் சென்று நீர் ஊற்றி வளர்த்தார் கணவர் இறந்த பின்னும் இப்பணியை தொடர்ந்து செய்தார். இவ்வாறு நட்டு, சாலையின் இரு மருங்கிலும் வரிசையாக வளர்ந்து நிழல் தந்து கொண்டிருக்கும் மரங்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலே. தூரம் 20 கிலோமீட்டர். அரசின் வீடும், குடியரசுத்தலைவர் முதல் பலரது விருதுகளைப் பெற்றுள்ளார். இவரைப்போல் ஆயிரம் வேண்டாம். ஆளுக்கு ஒன்றிரண்டு நட்டால் போதாதா? நட வேண்டாம், வெட்டாமல் இருந்தால் போதும் என்கிறீர்களா?

    நெடுஞ்சாலைகளை அகலப்படுத்துவதற்காக 100 ஆண்டுகளுக்குமேல் வயதுடைய முதிர்ந்த, வளர்ந்த பெரிய மரங்களை வெட்டாமல் சாலை ஓரத்தில் நகர்த்தக்கூடாதா? கட்டிடங்களை உயர்த்துதல், நகர்த்துதல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. அதுபோல மரங்களைநகர்த்தி  நடக்கூடாதா? (வன்னி மரம், அடையாறு ஆல மரம் போல்)சென்னை முதல் பெங்களுரூ வரையிலான சாலைகள் அகலப்படுத்துதலில் மரங்கள் வெட்டப்பட்டதால் நிழலின்றி வெப்பக்காற்று வீசுகிறது. சாலைப்பணி எப்போது முடிந்து மரங்கள் எப்போது நடுவது…? நிழலும் குளிர்ந்த காற்றும் பெறுவது எப்போது…? பெரிய  தலைவர்களின் பிறந்த நாட்களில், சுற்றுச்சூழல் நாள், நீர் நாள்,வன நாள்,தேசிய விழா நாட்களில் மற்றும் இயற்கை ஆர்வலர்களால்  லட்சக்கணக்கில் மரங்கள் நடப்பட்டாலும் அவையெல்லாம் போதா. நிலத்தடி நீர் குறைந்தபோது மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க கடுமையான சட்டம் கொண்டு வந்தது போல, அனைவரின் வீட்டிலும் குறைந்த பட்ச மரங்கள் நடுவது எனும் சட்டம் கொண்டு வரவேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை உறுதியளிப்பு சட்டத்தின் நூறு நாள்வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி புரிவோர் மழைக்காலங்களில் மரக்கன்றுகள் நடுவது, கோடை காலங்களில் அல்லது நன்கு வளரும்வரை நீர் ஊற்றி பாது காப்பு செய்ய நடைமுறைப்படுத்த வேண்டும். மலைகளில், தரிசு நிலங்களில், சாலை ஓரங்களில், பொது இடங்களில், தீ பாதிக்கப்பட்ட காடுகளில், மரக்கன்றுகள் நடுதல்வேண்டும். இன்னும் ஒரு எளிய முறை மூலமும் மரங்களை வளர்க்கலாம். களிமண், எரு, பழைய செய்தித்தாள் காகிதத்தை தண்ணீரில் ஊறவைத்து அனைத்தையும் சேர்த்து பிசைந்து, ஒரு விதையைஉள்ளே வைத்து உருண்டையாக்கி அல்லது தட்டையாக்கி வெய்யிலில் காய வைத்துக்கொள்ள வேண்டும்.பின்பு தட்டையானவற்றை மலைப்பிரதேசங்களிலும் உருண்டையானவைகளை தரைப்பகுதிகளிலும் மழை காலத்திற்கு முன்பு மரம் வளர வேண்டிய பல்வேறு இடங்களில் போட்டு விட வேண்டியதுதான்.பின்பு அந்த விதையின் வளர்ச்சியை இயற்கை பார்த்துக்கொள்ளும். களிமண், பறவைகள் மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும்.காகிதம் ஈரத்தை உறிஞ்சி விதை வளர உறுதுணை செய்யும், எரு விதை வளர தேவையான சத்துக்களைத்தரும். ஜப்பானிய இயற்கை வேளாண் அறிஞர் மசானோபு ஃபுகோகா இந்த விதை உருண்டைகளை விமானம் மூலம் தூவி ஆப்ரிக்காவின் பாலைவனங்களில் காடுகள் வளரப்பயன்படுத்தி வெற்றி கண்டார். நாம் உண்ணும் பழங்களின், சமைக்கும் காய்களின் விதைகளை எடுத்து வைத்து நிறைய விதைகள் சேர்ந்தபின் இந்த விதை மண்ணுருண்டைகள் செய்து நமது அருகாமையில் மரங்கள் வளர்க்கலாம். குழந்தைகளுக்கு இந்த முறையை விளையாட்டைப்போல் சொல்லிக்கொடுக்கலாம். 


  ஏன் இவற்றைச்செய்ய வேண்டும்? ஓசோன் ஓட்டைக்குப்பின்தான் சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வந்தது. உலக வெப்ப மயமாதலுக்குப்பின்தான் வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு வந்தது.வருமுன் காப்போம் என்பதை ஏன் மறந்தோம்? ஏன் இத்தனை வினாக்கள்? இவை வினாக்கள் அல்ல. விடை காண வேண்டிய விடிவுகாண வேண்டிய வழிகள். ஏன் மரக்கன்றுகள் நட வேண்டும்? மரங்கள் உயிர்கள் வாழ பிராண வாயு, நிழல்,காற்று,காய்,கனி,மணம்,மருந்து இன்னும்  பிற தருவதுடன் நீர்க்கான மழை தர உதவுகிறது. நிலத்தடி நீரைக்காக்கிறது; நிலச்சரிவைத்தடுக்கிறது; ஒலி மாசு,தூசு மாசு,ஓசோன் ஓட்டை தடுக்கிறது; கடற்கரை ஓரம் மரங்கள் இருந்ததால், சுனாமியின் பாதிப்புகள்கூட தவிர்க்கப்பட்டன. இவ்வாறு அனைத்து மாசுகளையும் தடுத்து, சுற்றுச் சூழலையும் காக்க, எல்லாம் தரும் கற்பகத்தரு போன்ற மரங்களை நடுவது ஒன்றே மிக மிகச் சிறந்த வழியாகும். மரத்தைப்பற்றி பார்த்தோம். மழையைப்பார்ப்போம். வள்ளுவன் வான் சிறப்பில் சொன்னது. மழை அமிழ்தம் போன்றது. குடிக்க,உணவாக, உணவை சமைக்க பயன்படுகிறது. இது பொய்த்தால் பசிப்பிணி உண்டாகும்;கடல் நீர் மட்டம் குறையும்; தானம், தவம், பூசனை இராது; எனவே நீரின்றி அமையாது உலகு. நீர் வேண்டின் மழை வேண்டும்; மழை வேண்டின் மரங்கள் நட வேண்டும்; மண்குளிர,  மழைபொழிய இயன்றன அனைத்தும் செய்வோம். இயற்கையைஅழியாமல் வளர்த்து, அதனோடு இயைந்து வாழ்வோம்.   

நா. சிவநேசன்
ஆசிரியர்  
அவலூர்பேட்டை

Tuesday, May 28, 2013

கரை சேர்க்குமா கட்டாய படிப்பு..... முதல் பாகம்

பள்ளிக்கல்வி முடித்து மேற்படிப்பில் தேர்ந்தெடுக்கும் துறை சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது? அடிப்படையில் மேற்படிப்பு என்பதே அடுத்து தொழில், வேலை செய்யும் துறையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், பயிற்சி பெறுவதற்கும்தான். அதாவது குறிப்பிட்ட துறையில் வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளுக்கான பணத்தை சம்பாதிப்பதற்காகத்தான். மாணவர்கள் தன் சுயவிருப்பத்துடன் ஒரு துறையை படிக்கத் தேர்ந்தெடுத்து அப்படிப்பின் தொடர்புடைய துறையில் பணியாற்றும்போது முழு ஈடுபாடு இருக்கும். பணம் சம்பாதிப்பதும் அதனுடன் சேர்ந்து நடக்கும். இதே பிடிக்காத துறையில் படித்து பணியாற்றுபவனு(ளு)க்கு பணம் சம்பாதிப்பது ஒன்றே முக்கிய நோக்கம். பணி இரண்டாம்பட்சம் தான். (கட்டாயத்தின் பேரில் படித்த மாணவர் படிப்பிலும் நாட்டமின்றி தெளிவான புரிதலுமின்றி படித்து முடித்து வேலை கிடைப்பதும் கடினம்).


இங்கே தொழில் ஈடுபாடில்லாததால் பணம் சம்பாதிப்பது ஒன்றே அத்தியாவசியமாகிறது. ஆகவே விருப்பமில்லாத துறையில் வேலை செய்பவர்களால் தரமான பொருளோ, சேவையோ தரமுடியாது. இதுபோன்று விருப்பமில்லாத துறையில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை எந்த நாட்டில் அதிகமாகிறதோ அந்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் தரம் எப்படியிருக்கும்? பொருளாதாரம் பாதிக்காதா?

பணம் சம்பாதிக்கும் நோக்கம் முதன்மையாகும் போது தொழில் அறங்கள் (Professional ethics) ஒழிக்கப்படும். தொழிலில் புரிதல் குறைவாக உள்ளதால் உற்பத்தியை எட்ட குறுக்கு வழிகள் கையிலெடுக்கப்படும். உற்பத்தி செய்யப்படும் தரக்குறைவான பொருட்களுக்கான அரசாங்க தரக்கட்டுப்பாட்டுத் துறைகளை சரிக்கட்ட லஞ்சம் ஊழல் கையூட்டுகளால் ஈடுகட்டப்படும். இதுபோன்ற சீரழிவுக்கு பலவேறு காரணங்கள் இருந்தாலும் இக்காரணம் முதன்மையானதும் மறைமுகமானதாகவும் கருதுகிறேன். இந்த தரக்குறைவான பொருட்கள் யார் தலையில் விடிகிறது? அப்பாவி பொதுமக்கள் தலையில்.

This 2 parts of articles published in dinamalar newspaper as one dated 2.6.2013

உங்களுக்கு விருப்பமில்லாத செயலை உங்களால் எவ்வளவு நேரம் செய்ய முடியும்? அச்செயலை நேர்த்தியாக செய்ய முடியுமா? இங்கே நான் குறிப்பிட விரும்புவது, விருப்பமில்லாத துறையில் படித்து விருப்பமில்லாத துறையில் வேலை செய்து வாழ்வது என்பது புதைமணலில் சிக்குவது போன்றது. அதன்பின் மீண்டு வருவது மிகக்கடினம். இது அந்த தனிமனிதனோடு  மட்டும் முடிந்து போவது இல்லை.  சமுதாயத்தையும் பாதிக்கும். மன உளைச்சலில் ஆரம்பித்து குடும்ப உறவுகளில் சமூக உறவுகளில் சிக்கல் என்று நீண்டு கொண்டே போகும். மீனைக் கொண்டுவந்து ஓட்டப்பந்தயத்தில்  ஜெயிக்கச் சொன்னால் எப்படி?விருப்பம் என்பது இயல்பிலிருந்து வருகிறது. இயல்பிலிருந்து  மாறும்போது சமூகம் பாதிக்கப்படுகிறது.

ஒரு சின்ன உதாரணம். ஆட்டோ டிரைவர் தன் தொழிலை விரும்பி ஏற்றுக்கொண்டிருந்தால் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு எவ்வளவு நன்மை. பணம் சம்பாதிப்பது ஒன்றே நோக்கமாகக் கொண்டிருந்தால் எவ்வளவு சங்கடங்கள். இதே போல பணம் சம்பாதிப்பதே முக்கிய நோக்கமாக கொண்ட அரசு ஊழியர்கள்/அதிகாரிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவலர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், அரசியல்வாதிகளால் எவ்வளவு சிக்கல்கள் இந்த சமுதாயத்திற்கு.

விருப்பப்பட்ட துறையில்/தொழிலில் ஈடுபட்டவர்களால் எத்தனை நல்ல பங்களிப்புகள் என வரலாறு முழுவதும் எண்ணிப்பார்க்கலாம். விருப்பமில்லாமல் ஒரு துறையில் ஈடுபட்டவர்களால் வரலாற்றில் இடம்பெறுவது அரிது அதுவும்  விபத்துகளாகவே இருக்கும். இதற்கான தீர்வுகள் என்ன என்பதை இப்பதிவின் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.

இந்தப் பதிவையும் கொஞ்சம் பாருங்களேன்....
கல்லூரியில் சேருவதற்கு முன் - ஒரு சிந்தனை

கரை சேர்க்குமா கட்டாய படிப்பு ..... இரண்டாம் பாகம்

விருப்பமில்லாத துறையை தன் வாழ்நாளை சுமூகமாக ஓட்ட பொருளாதாரத்தை தேட தேர்ந்தெடுப்பதால் பல பாதகமான விளைவுகள் தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் ஏற்படுகிறது என்பதை இப்பதிவின் முதல் பாகத்தில் பார்த்தோம். இப்போது இந்த நிலை ஏன் ஏற்பட்டது, இதற்கான தீர்வுகள் என்ன என்றும் பார்ப்போம்.

பணம் உள்ளவர்கள் வசதியாகப் பிரச்சினை இன்றி வாழ்வதாகத் தெரிவதால் அதுவே நோக்கமாக பலருக்கு இருக்கிறது. அடுத்த வேளை உணவுக்கே வழி இல்லாத போது பலர் எந்த வழியில் பணம் நிறைய கிடைக்குமோ அதைத் தேர்ந்தெடுக்கின்றனர். 25-30 வயது ஆனபின்னர் தான் தாம் செய்த தவறு தெரிகிறது. அதன் பின்னர் திருமணம், குழந்தை என்றானபின், தனி நபர் விருப்பம் என்பது இரண்டாம் இடத்திற்குச் சென்று விடுகிறது. இது போன்று விருப்பமில்லாத துறையை தேர்ந்தெடுப்பது எதனால் நேர்கிறது என்றால் பொருளாதாரத்தை ஈட்டுவதற்கான பரந்துபட்ட பல்வேறு துறைகள் வேலைகள் தொழில்கள் இருப்பது இளவயதினருக்கு தெரியாமல் இருப்பதுதான். பெற்றோர்களும்  ஆசிரியர்களும் அதற்கும் மேலாக கல்விக்கொள்கையும் பள்ளி மாணவர்களுக்கு பலவகைப்பட்ட வேலைவாய்ப்பு துறைகளையும் தொழில்களையும் அறிமுகப்படுத்துவதை முக்கியமான பொருளாக கருதாததும் இந்த நிலைக்கு காரணமாகும். நம் கல்வித்திட்டம் அனைத்து மாணவர்களையும் ஒரு சில வேலைகளுக்காகவே தயார் செய்கிறது. பல துறைகளைப் பற்றி அறிமுகப்படுத்ததால் ஒரு ஒவ்வொரு மாணவனுக்கும் பொருளாதாரத்தை ஈட்ட குறுகிய பாதையே உள்ளது. அதிலும் சாதி ஏற்றத் தாழ்வுகளைப் போல உயர்ந்த வேலை/படிப்பு தரக்குறைவான வேலை/படிப்பு என்ற சமூக மதிப்பீடுகளும் உள்ளன. ஊடகங்களால் ஏற்படுத்தப்படும் ஒரு வித பிம்பம் ஒரு சில வேலைகளையே உயர்ந்தவையாக முன்னிறுத்துகிறது. அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் இந்தக் காரணத்தால் தான் என்ஜினியர், டாக்டர், கலெக்டர் மட்டும் தான் ஆகிறார்கள். வேறு எதுவும் ஆவதில்லை. என்ஜினியரிங்கில் 40க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. அதுகூட எந்த குறிப்பிட்ட துறையில் என்ஜினியர் ஆவது என்பது அவர்களுக்கே தெரியவில்லை. இது இல்லனா அது என்ற மனநிலையில் தான் உள்ளனர் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண் பெற்றவர்கள்.  

குழந்தைகள் பள்ளிக்கல்வி நிறைவடையும் முன்பே இவ்வுலகத்தின்/ நாட்டின்/ பிராந்தியத்தின் பொருளாதாரம் எப்படி நடக்கிறது. எந்தெந்த தொழில்கள் அரசாங்கத்தால், தனியார் நிறுவனங்களால், தனி நபர்களால் நடைபெறுகிறது என்றும் எந்தெந்த தொழில்கள் அவர் சார்ந்த ஊரின்/ மாவட்டத்தின்/ மாநிலத்தின் பொருளாதார நிலைகளின் ஆதாரமாக உள்ளது என்பதையும் பள்ளி மாணவர்களுக்கு விவாதங்களின் மூலமாக கற்றுத் தரவேண்டும். உதாரணமாக விவசாயத் துறையின் பொருளாதாரம் நேரடி வேலைவாய்ப்புகள் மறைமுக வேலை வாய்ப்புகள் குறித்து விவாதிக்கலாம். இதே போல ஒவ்வொரு (சுகாதாரம், ரயில்வே, செய்தித் துறை, ஏற்றுமதி இறக்குமதி, பாதுகாப்பு, கல்வி, வரிவிதிப்பு, நுகர்பொருள், சேவைகள் ....) துறைகளைப்  பற்றி விவாதிக்கலாம். ஒரு தொழில் பாதிக்கப்படும்போது ஏற்படும் தாக்கங்கள் பற்றியும்  அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் விவாதிக்கலாம். இந்த விவாதத்திற்கு வாரம் ஒரு வகுப்பை ஒதுக்கலாம். விளையாட்டு வகுப்பை கால அட்டவணையில் மட்டுமே பார்க்க முடிகின்ற நிலைமை விவாத வகுப்பிற்கு வந்து விடாமல் செயல்படுத்த வேண்டும்.

நம் பாரம்பரிய கல்வியில் இது போன்று பல்வேறு தொழில் துறைகள் குறித்தும் வேலை வாய்ப்புகள் குறித்தும் அறிவிக்கப்படும் பழக்கங்கள் இல்லை. நம் நாட்டில் புகுத்தப்பட்ட பிரிட்டிஷ் கல்வியிலும் பல்வேறு துறை தொழில்கள், வேலைவாய்ப்புகள் மாணவர்கள் கல்விமுறை வாயிலாக தெரிந்துகொள்ள அனுமதிக்கவில்லை. அமெரிக்க, ஐரோப்பிய  பள்ளிகளில் இரண்டு விதமான நடவடிக்கைகள் உண்டு. (1) career day (2) take your child to work-day. இவ்விரண்டும் பள்ளிகளில் நடக்கும். career day- அன்று பெற்றோர், தந்தையோ தாயோ தன்னுடைய மகனின் வகுப்பிற்கு வந்து தான் செய்யும் பணி  குறித்துக் கூறுவார். ஆசிரியர்கள், தீ அணைப்புத் துறையினர், விஞ்ஞானி, பொறியாளர் எனப் பலர் வந்து தாம் செய்யும் பணி குறித்து விளக்குவர். சில சமயம் பள்ளியே சிலரை அழைத்து வருவதுண்டு. இரண்டாவது நடவடிக்கையின் போது மாணவன் தனது தந்தை/தாய் செய்யும் பணி இடத்திற்கு தன் பெற்றோரால் அழைத்துச் செல்லப்பட்டு  அங்கு கவனித்த வேலைகளைக் குறித்து அடுத்த நாள் ஒரு கட்டுரை எழுதி வகுப்பில் படித்துக் காட்ட  வேண்டும். 

இந்த இரண்டு முறைகளையும், விவாத வகுப்புகளையும் பள்ளிகளில் கடைப்பிடிக்க அரசாங்கம் ஆவன செய்யலாம்.

இதெல்லாம் எதற்குக் கூறுகிறேன் என்றால் – அங்கு  உள்ளவர்களுக்கு பலப் பல துறைகளைக் குறித்து மிகச் சிறிய வயதிலேயே தெரிவிக்கப் படுகிறது. அதிலிருந்து அவர்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நமது ஊரில் சிறுவயதினருக்கு, நம்மால் முடிந்தவரை பல வேறு துறைகளை அறிமுகம் செய்ய வேண்டும்.


இந்தப் பதிவையும் கொஞ்சம் பாருங்களேன்....

Saturday, May 25, 2013

Krikhokor hondhanot (In Search of farmer... in Assamese)

My heartfelt thanks to Ms. Babita Mahanta for Assamese translation

Tamil language link: எங்கே விவசாயி? (source)

 

 
don't hesitate to give your comments, suggestions, opinions, corrections.......

for typing in  বাংলা  ગુજરાતી  हिंदी  ಕನ್ನಡ  മലയാളം मराठी  नेपाली ଓଡ଼ିOriya,  ਪੰਜਾਬੀ ,   தமிழ் తెలుగు and  اردو  . follow the link & download a small app to your computer, this works in offline very well. 
http://www.google.com/ime/transliteration/

Thursday, May 23, 2013

"நான்" அவன் இல்லை. நான் யார்?


இந்த உலகில் மிக சிலரே “நான்” என்ற அனுபவத்தை அடைந்ததாக உணருகிறேன், என்னை பொறுத்தவரை “நான்” என்பவன் அவன் நினைப்பதை செய்பவன், யாரையும் எதிர்நோக்காதவன், யாருக்கும் கடமைப்படாதவன், யாரையும் நேசிப்பவன் இங்க திருத்தும் செய்கிறேன் யாவற்றையும் நேசிப்பவன். அவனுடைய உறைவிடம் இந்த உலகம்... அவனுக்கு உள்ள சொந்தம் இந்த பூமி தாய்... அவன் அவளை நேசிக்கிறான். அவளை புரிந்துகொள்ள நினைக்கிறான். ஆனால் அகங்காரம் கொண்ட உலகானது அந்த அனுபவத்தை அவனுக்கு தர மறுக்கிறது, அதன் பக்கத்திலும் நியாயங்கள் இருக்கதான் செய்கிறது என்ன செய்ய ?

“நான்”, அவன் கடவுளுக்கு கீழே உள்ளவன் அவனுடைய வேலை அவன் தாயை புரிந்துகொள்வது. “நான்” வாழ்நாள் முழுவதும் அலைவான், நிரந்தரத்தை வெறுப்பவன், முடிவிலியை தெரிந்துகொள்ள ஆசைப்படுபவன் அவனுடைய ஆசைகள் எபோதும் நிறைவேறபோவதில்லை என அறிந்தும் அதை அடைய முற்படுபவன். “நான்” ஒரு தனி மனிதன், தனித்த மனிதன் ,தனிமையின் அழகை உணர்ந்த மனிதன். அதன் கிறக்கத்திலிருந்து மீண்டு வர மனமில்லாதவன்.. அவன் நடக்கிறான். சில நேரங்களில் பறக்கிறான்.. புரியவில்லை பரிணாமத்தில் அதற்கு வழியில்லையே என்றாலும் “நான்’ பறக்கிறான்.

நான் அவனை பார்க்க விரும்புகிறேன். “நான்” என்னை விட ரொம்ப வருடங்கள் முன்னோக்கி இருக்கிறான். ஒரு பத்து பதினைந்து வருடங்களாவது அவன் முன் நின்று நடக்கிறான்.

நான் “நான்” – ஐ பார்க்க வேண்டும். அவனுடன் பேசி சில விஷயங்களை பகிர வேண்டும்... இல்லை இல்லை உண்மையில் நான் “நானிடம்” கதை கேட்கவே அவனை பார்க்க விரும்புகிறேன்; எனக்கு தெரியும் “நானிடம்” ஏகப்பட்ட கதைகள் இருக்கும் அதைவிட அந்த கதைகளை யாரிடமும் சொல்லமாட்டன் என்பதும் தெரியும். நான் அவனை பார்க்க வேண்டும் அவன் இருபது வருடங்கள் தள்ளி இருக்கிறான் என்று நினைக்கிறேன் அதற்கு பிறகு கூட இருக்கலாம் அவனை கண்டுபிடிப்பேன் என்று கூட எனக்கு நம்பிக்கை இல்லை. அவன் அப்போது எப்படி இருப்பான் என்ற கற்பனைக்கு கூட வழியில்லாமல் அவனை இங்கு எழுதுகிறேன். அவன் இந்த காலத்தில் என்ன செய்வான் ? தூங்கிக்கொண்டிக்கலாம்............ இல்லை இல்லை “நான்” இன்னும் பிறக்கவில்லை சொல்லப்போனால் பிறக்கப்போவதும் இல்லை என அறிகிறேன். ஆசா பாசங்கள் அவனை கருத்தரிக்க விடாது... அவனை இந்த உலகிற்கு அறிமுக ப......(இதை எழுதி முடிக்கவில்லை .... “நான்” என்னை எச்சரிக்கிறான் அவனைப் பற்றி சொல்ல கூடாது என்று ..!!!!)

நான் அவனை மதிக்கிறேன் அதனால் நிறுத்திவிடுகிறேன்.
பி.கு: நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன் – என்னை நீங்கள் பூட்டி வைத்துள்ளிர்கள் – உடைக்க முடியாத பூட்டு உணர்வுகளால் திரித்த பூட்டு உயிரை நெறிக்கும் பூட்டு – கடைசி வரை நான் நானாக போவதில்லை, நீங்களும் விட போவதில்லை – போகட்டும் நான் “நீங்களாகவே” இருக்கிறேன்.

- திரு. கா. கா.

Wednesday, March 6, 2013

பயணக் கட்டுரை எழுத ஆசை



மிக நீண்ட பயணம், சென்னையிலிருந்து அவலூர்பேட்டைக்கு தூரம் சுமார் 200 கி. மீ ஒரே ஒரு பேருந்தில் சென்று சேரலாம் 4 – 5 மணி நேரத்தில். ஆனால் இதிலென்ன சுவாரசியமுள்ளது? சுற்றுலாவுக்காக எங்கோ ஒரு தூரமான இடத்திற்கு செல்ல ஆசைப்படுகிறோம், நாம் ஊர் அருகிலுள்ள ஊர்கள், மக்கள், நடைமுறைகள், முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றி இன்னும் ஆழமாகத் தெரிந்து கொள்ள ஒரு பிரயாணத் திட்டமிட்டேன்.

திட்டப்படி சென்னையிலிருந்து அவலூர்பேட்டைக்கு டவுன் பஸ்சில் மட்டுமே செல்லலாம். மினி பஸ், ஷேர் ஆட்டோ, மாட்டு வண்டி, விவசாய டிராக்டர், ஆகியவற்றிலும் செல்லலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே மொபைல் போனை சுவிட்ச் ஆன் செய்யலாம். ஊர்களை, மக்களை, அவர்கள்தம் உரையாடல்களை அனுபவிக்க வேறெந்த இடையூறுகளும் இருக்கக் கூடாதல்லவா?

எடுத்துக் கொள்ளக் கூடிய பொருட்கள்- தண்ணீர் பாட்டில், பணம், அடையாள அட்டை, விசில், டார்ச் லைட், குடை, தீப்பெட்டி,  கத்தி, அவசரத்திற்கு தொடர்புகொள்ள வேண்டிய முகவரிகள், தொலைபேசி எண்கள். பயணம் ஒரு நாளுக்கு மேலே ஆகும் என்பதால், துண்டு, போர்வை, சோப்பும் தேவைப்படலாம்.

பணத்தை பேருந்துக் கட்டணம், உணவு, தேநீர் போன்றவைகளுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும். வேறு எந்த பொழுது போக்கிற்கும் செலவு செய்யக்கூடாது. சில்லரையாக வைத்திருந்தால் மிக நல்லது. டவுன் பஸ்ஸில் மிக அதிக கட்டணமே 15 ரூபாய்க்கு மேல் இருக்காது.
 

பயணத்தின் போது தூங்கக் கூடாது. அதிக சத்தத்தினால் தூங்க முடியாது மற்றும் ஒரு பேருந்தின் மொத்த பயண நேரமே 40 நிமிடத்திற்கு மேல் இருக்காது என்பதாலும் தூங்க முடியாது. படியில் நின்று பயணிக்கக் கூடாது. பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், நன்றாக இரு கால்களையும் படியில் வைத்து, நன்றாக கைகளால் பிடித்துக்கொண்டு பயணிக்க வேண்டும். பயணத்தை முழுமையாக முடிக்கவேண்டுமல்லவா?

பயண வரைபடத்தை பார்ப்போம். சென்னையிலிருந்து அவலூர்பேட்டைக்கு மூன்று வழிகளில் பேருந்துகள் உண்டு. குறைந்த தூரம் அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள்(122) இருக்கும் சென்னை-தாம்பரம்-திண்டிவனம்-செஞ்சி-கீழ்பென்னத்தூர்-திருவண்ணாமலை வழி. இன்னொரு வழி (208) சென்னை–தாம்பரம்-மேல்மருவத்தூர்-வந்தவாசி-சேத்பட்-அவலூர்பேட்டை வழி. மற்றொரு வழி, (422,435) சென்னை–காஞ்சிபுரம்-வந்தவாசி-சேத்பட்-அவலூர்பேட்டை வழி.

முதல்வழி, முற்றிலுமாக தேசிய நெடுஞ்சாலை, சாலையோர ஊர்கள் குறைவு. அதனால் டவுன் பஸ்களும் குறைவு இந்த வழியைத் தவிர்க்கவும் காரணம் இதுதான்.  இரண்டாவது வழியும், மூன்றாவது வழியும் நகரங்களை இணைக்கும் சாலைகள். சாலையோர ஊர்கள மிக அதிகம். டவுன் பஸ், மினி பஸ், மாட்டு வண்டிகள், அதிகம். அதிக மக்கள், அதிக நேரம், அதிகமான பயண இடைவெளிகள். பயணத் திட்டம் தயார். இந்தப் பயணம் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்.  கூடிய விரைவில் பயணக் கட்டுரை எழுதிவிடுவேன்.
எனக்கு முன் நீங்கள் உங்கள் ஊருக்கு இத்திட்டம்போல் சென்றால் அனுபவத்தைப் பகிரவும்.