Pages

Wednesday, November 9, 2011

தலையைச் சுற்றி மூக்கை..................



         அதிகமாக வேலை செய்தால் கைகள் வலிக்கும். நடந்தால், நின்றால், ஓடினால் கால்கள் வலிக்கும். ஓசை அதிகமாகக் கேட்டால் காது  வலிக்கும். கம்பியூட்டரையே பார்த்துக்கொண்டிருந்தால் கண்கள் வலிக்கும். கடினமான உடலுழைப்பால் உடம்பே வலிக்கும். அதிகமாக சாப்பிட்டால் நாக்கு வலிக்குமா? எப்போதும் மோப்பம் பிடித்துக்கொண்டிருக்கும் மூக்கு வலிக்குமா?
           
உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் செயலிழக்கும், மூக்கு செயலிழக்குமா? முகரும் சக்தி எந்த வயதிலும் மாறுவதில்லையே. மற்ற எல்லா உறுப்புகளுக்கும் செயற்கையான உறுப்புகள் இருக்கின்றன. இதயமே இயந்திரமாக(pacemaker) ஒரு சிலரை பல நாள்கள் வாழவைக்கின்றது. மோப்பம் பிடிக்கும் மூக்கிற்கு செயற்கை மூக்கு உள்ளதா?

           
கை கால்கள் செயலிழந்தால் ஊனம். கண்கள் செயலிழந்தால் குருடு. காது செயலிழந்தால் செவிடு. மூக்கு செயலிழந்தால் ..................??????

எந்த மொழியிலேனும் இதற்கு பதிலிருக்கிறதா? அப்படி என்ன இந்த மூக்கு செயலிழப்பது மனித வரலாற்றிலேயே நடந்திராத ஒன்றா?
ஜலதோஷம்........ அதனாலும் ஏழு நாட்களுக்கு மேல் முகரும் சக்தியை தடுக்க முடியாது.
           
மூக்கில்லாமல் சுவையும் தெரிவதில்லை. சோதித்துப் பார்க்கிறீர்களா அடுத்த முறை டீ, காபி சாப்பிடும் போது மூக்கைப்பிடித்துக்கொண்டு.

உணவை உட்கொள்ள பெரிதான ஒரு ஓட்டையுள்ள வாய். காற்று வாங்க எதற்கு இரண்டு ஒட்டையுள்ள மூக்கு.

மூக்கில்லை என்றால் தூங்கும் இரவுகளில் தீ விபத்திலிருந்து தப்புவது மிகக்கடினம். தீ உங்களை தொடும்போது, சுடும்போதுதான் தெரியும் தீ என்று.

ஒரு குழந்தை உலகத்தை முதன்முதலாக உணர்வதே மூக்கின் மூலம் தான். தாயைவிட்டு முற்றிலும் வெளிவராத முன்பே முதல் சுவாசம் நுரையீரலை நிரப்பியிருக்கும்.
  
நான் தலையைச் சுற்றி மூக்கைத் தொடவில்லை என்பது இப்போது புரிகிறதா?

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.........
கழுதைகளுக்கும் பிற விலங்குகளுக்கும் உணவு, எதிரி, ஆபத்தின் வாசனைகள் தெரியும். கற்பூர வாசனையால் ஒரு பலனுமில்லை.
            மண் வாசனை தெரியும். விண்வெளியின் வாசனை என்னவாக இருக்கும்!?

காதில் குத்தி அணியப்படும் அணிகலன்களுக்கு தோடு, கம்மல், ஜிமிக்கி என்றெல்லாம் பெயர்கள் இருக்கும்போது மூக்கில் அணியப்படும் அணிகலனுக்குப் பெயர் மூக்குத்தி. அவ்வளவுதானா? வேறேதும் பெயர்கள் இருக்கிறதா? மூக்குக்கண்ணாடி இருக்கிறது, அது கண்ணுக்கு அணியாகிறது. மூக்கணாங்கயிறு – அது மாட்டின் மூக்குத்தி.

            மூக்கு அதி முக்கியத்துவம் பெறுகிறது பெண்களைப் பற்றி ‘மூக்கும் முழியுமாக’ என்று குறிப்பிடும்போது. முழிகள்(கண்கள்) எத்தனையோ  உணர்ச்சிகளை வெளிப்படுத்த வல்லவை. எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத மூக்கை ஏன் அங்கே நுழைத்தார்கள்?

கண், காது, நாக்கு, தலை, வாய், வயிறு, கை, கால் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது.
மூக்கு என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஓட்டும்.

மூக்கு என்னதான் தவறு செய்ததோ, கோபம் கூட மூக்கின் மேல்தான் வருகிறது!!
உங்கள் மேலான கருத்துக்களை கீழே comments ல் தெரிவிக்கவும்.