புது மழை
மழை வருது மழை வருது நெல்லு வாருங்கோ முக்கா படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்கோ ஏரோட்டுற மாமனுக்கு எண்ணி வையுங்கோ சும்மா திரியுற மாமனுக்கு சூடு வையுங்கோ என்று பாடிக்கொண்டு தெருவெங்கும் முழுதாக நனையும் வரை அனைவர் வீட்டு நெல்லையும் வாரி முறுக்கு சுட சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து பூசை வாங்குவதற்குக் காரணம் இந்த மழை தான். இது யார் சொல்லிக் கொடுத்தார்களோ தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடல் தான் அனைவர் வாயிலும் காதிலும். ஓட்டு விளிம்புகளில் சொட்டும் நீரை கைகளில் சேகரிப்பது திண்ணையில் இருந்துகொண்டு. இதெல்லாம் ஒரு விளையாட்டு. ஒரு வேடிக்கை. மழை நாளின் வாடிக்கை. மழைக்கு ஒதுங்கும் திண்ணைகளில் ஈரமும், குளிரும், அவ்வப்போது அடிக்கும் காற்றும் அங்கே உருவாகும் கதைகளும் அப்பப்பா இப்போது நினைத்தாலும் ஈரமாக இருக்கிறது. அந்தக் கால மழை. மழை வரும்போது அண்ணாந்து பார்த்திருக்கிறீர்களா? துளித் துளியாகத் தோன்றாமல் கற்றை போன்று மிக வேகமாக வரும். ஒரு கற்றை மேல் மட்டும் கவனம் கொள்ளாமல் எத்தனை கற்றைகளைப் பார்க்க முடியுமோ அத்தனையையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது, "டேய்! மழையில நனையாத....