Pages

Monday, December 31, 2012

சமூக மாற்றத்திற்கு புதுமையான போராட்டங்களின் தேவை ??

உலகமே இந்த happy new year ஆங்கில வருடப் பிறப்பு கொண்டாடும் இவ்வேளையில் எனக்கு ஒரு சின்ன வருத்தம். மாயன் காலண்டர் இந்த வருடம் கிடைக்காது.

பெரிய வருத்தம், சமூக மாற்றத்திற்கான பழைய வழிமுறைகள் பயன்படாமல், செயல்படாமல் போய்விட்டதாக உணர்கிறேன். அந்த வழிமுறைகள் என்னவென்றால் அரசியல் ஆட்சிமுறைகளும், வன்முறை (தீவிரவாதம், கொடுந்தண்டனைகள்), புரட்சி, அகிம்சை போன்ற போராட்டங்களும் ஆகும். இவைகளெல்லாம், மக்கள் நலனுக்காக வரலாற்றில் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது வெற்றியும் பெற்றிருக்கிறது.

அரசியல் ஆட்சிமுறைகள் என்பது முடியாட்சி, சர்வாதிகார ஆட்சி, ராணுவ ஆட்சி, மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி ஆகும். ஒவ்வொன்றிலும்  பல நன்மைகளும் தீமைகளும் வரம்புகளும் உள்ளன. தற்போதைய ஜனநாயக அரசியல் இந்தியாவில் தீவிரவாததைவிட மோசமானதாகப் போய்க்கொண்டிருக்கிறது. நமது நிதி ஆதாரத்தில் அதிகப் பங்கு ராணுவத்திற்கு செலவழிக்கிறோம். அது மக்களின் அறவழிப் போராட்டங்களை ஒடுக்கவே அதிகம் பயன்படுகிறது. அறவழி அகிம்சை போராட்டத்தை உலகிற்கே (!?) அளித்தது நம்நாடு. ராணுவ மற்றும் சூழ்ச்சி முறைகளைப் பின்பற்றிய ஆங்கில அரசிற்கு, புதுமையான அகிம்சைப் போராட்டங்களை  எப்படி கையாள்வது எனத் தெரியவில்லை. அந்தக் காலகட்டத்தில் அகிம்சை போராட்டம் புதுமையாக இருந்ததால் எதிர்கொள்ளத் தெரியவில்லை, ஒடுக்க முடியவில்லை. அதே போல் தான் போரில் கொரில்லா முறை புகுத்தப் பட்ட காலகட்டத்தில் வெற்றிபெற்றது, காரணம், கொரில்லா போர்முறையை அணுகும் முறை தெரிந்திருக்கவில்லை. அதன்பிறகு அதே நாட்டில் அதே முறை வெற்றிபெற்றதில்லை. வேறு நாடுகளில் வெற்றி பெற்றதுண்டு. அதை அணுகி ஒடுக்கும் முறைகள் தெரிந்தபின் அவை எங்கும் பெரிதாக உருவெடுக்கக் கூட முடியவில்லை.

இந்த போராட்டத்திற்கான வழிமுறைகளில் வன்முறைதான் முதலில் தோன்றியது. நாகரிக வளர்ச்சிக்கேற்ப, முடியாட்சி, போர்கள், கொடுந்தண்டனைகள், சர்வாதிகார ஆட்சி, ஜனநாயக அரசியல், தீவிரவாத போராட்டங்கள், அறவழிப் போராட்டங்கள், என்பவை உருவாகியது. இவற்றில் காலத்தால் முதலில் தோன்றிய முறைகளுக்கு வெற்றிவாய்ப்பு குறைவாகவும், சமீபத்தில் தோன்றிய முறைகளுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகவும் உள்ளதாக தோன்றுகிறது.
இங்கே சொன்ன முறைகளில் மக்களால் பயன்படுத்தப்படுவது வன்முறை, தீவிரவாதம், அறவழிப் போராட்டங்கள். வன்முறையை ஒடுக்க அதிக சட்டங்கள் உள்ளன. அறவழிப் போராட்டங்களை ஒடுக்க அதைவிட அதிக சட்டங்களும் காவல் துறையும் ராணுவமும் உள்ளன. இந்த பழைய முறைகள் சமூக மாற்றத்தில் பலனளிக்காது என்று கருதுகிறேன்.

இப்போது சமூக மாற்றத்திற்கு தேவை புதுமையான போராட்ட வழிமுறை. சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் புதிய முறை தான் வெற்றி பெரும். அதுவும் அந்த முறைக்கு எதிரான சட்ட திட்டங்களை வகுத்து செயல்படுத்தும் வரை தான் வெற்றி பெரும். காலங்கள் மாறி கலாச்சாரங்கள் மாறிவிட்ட நிலையிலும் அதே பழைய போராட்ட முறைகளை நம்பி களத்தில் இறங்குவது ஒரு வகையில் முட்டாள்தனம்தான். சாப்பிடும் உணவு குடிக்கும் தண்ணீர், செய்யும் தொழில்கள், வாழ்க்கை முறைகள் மாறிவிட்ட இந்த தலைமுறை மக்களுக்கு ஏற்றதாய் பழைய தலைமுறையினரின் போராட்ட வழிமுறைகள் சாத்தியப்படுமா?

சமீபத்தில் எகிப்து நாட்டில் நடந்த புரட்சி துவக்கப்பட்டது facebook மூலம். டில்லியில் நடந்த அறவழிப் போராட்டத்திற்கான கூட்டத்தைச் சேர்த்ததும் சமூக வலை தளங்கள் மூலம் தான். சில அரபு நாடுகளில் (சிரியா) facebook, twitter போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. காரணம், அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு இத்தளங்கள் தரும் resistance தான், இது ஒரு வகையில் வெற்றி தான். வலைத் தளங்களில் மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கத் தொடங்கி விட்டார்கள். அந்த ஆதரவு ஒரே ஒரு “click/share/like” –உடன் நின்று விடாமல், களத்தில் இறங்கி போராட்டத்தில் ஒவ்வொருவரும் பங்கேற்கும் பட்சத்தில் தேவையான  சமூக மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன்.  ஒரு சில மணிகளில் ஆயிரக் கணக்கில் கூட்டத்தைச் சேர்க்கும் சக்தி இவற்றிற்கு உண்டு. ஒரு புதிய முறை உருவாகி விட்டதாகவே தோன்றுகிறது. ஆனால், எகிப்து, சிரியா போன்ற ஒரு நிகழ்வு இந்தியாவில் நடந்து விடுமோ என்ற பயத்தில் இந்தியா, IT Act 66 (A)வில் பேஸ்புக்கில் எழுதிய மும்பை பெண்ணையும் like கொடுத்த இன்னொரு பெண்ணையும் கைது செய்தது. ஒரு நாளைக்கு 5 sms என்பன போன்ற அடக்குமுறைகளை விதித்தது கடும் கண்டனத்திற்கு ஆளானது. இச்சட்டத்தில் போலீஸ் இணை ஆணையாளர் (DCP) அல்லது போலிஸ் தலைமை ஆய்வாளர் (IGP) முன் அனுமதியுடன் வழக்கு பதிவு செய்யலாம் என்று மாற்றம் கொண்டு வந்துள்ளார்கள். அடுத்த கட்டத்திற்கு இன்னும் புதிய போராட்ட முறைகள் தேவை.

கி. பி. 2013 ல் சமூக மாற்றத்திற்கான புதிய வழிமுறை கண்டெடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இனிய ஆங்கில வருடப்பிறப்பு வாழ்த்துக்கள்.


New Year's ReV(s)olution  - முதலில் வைத்த தலைப்பு இதுதான். சரியாகப் பொருந்தவில்லை, "சமூக மாற்றத்திற்கு புதுமையான போராட்டங்களின் தேவை" என மாற்றிவிட்டேன். 



----------------   ------------------  -----------------   ----------------  -------------  -----------------  -----------------  -----------  ------------- ------
(?!) இந்தியா விடுதலை பெற்றது காந்தி வழி அகிம்சைப் போராட்டத்தாலா? நேதாஜி வழி ராணுவப் போராட்டத்தாலா? இரண்டாம் உலகப்போரின் பின்விளைவுகளா?
பல போராட்டங்களைத் தொடர்ந்து அகிம்சைப் போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942இல் ஆரம்பிக்கப்பட்டது, ஒரு ஆண்டிற்குள் முக்கியத் தலைவர்களை சிறையில் அடைத்து இந்த இயக்கம் ஆங்கில அரசால் ஒடுக்கப்பட்டது. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் ஜப்பானிய அரசை நம்பியிருந்தது, இரண்டாம் உலகப் போரில் கடும் சேதத்திற்கு உள்ளான ஜப்பானிய அரசால் இந்திய தேசிய ராணுவத்திற்கு உதவ முடியவில்லை. இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்தின் பொருளாதாரம் சீரழிந்தது. இங்கிலாந்தின் பொருளாதார நிலை இங்கிலாந்தின் மறுசீரமைப்பிற்கே போதவில்லை, இந்தியாவில் இருந்து வரும் வருமானத்தை விட இந்தியாவின் நிர்வாகத்திற்கு அதிகமாக செலவானது விடுதலை அளிக்க முக்கியமான காரணமாகும். நாம் படித்த பள்ளிப் புத்தகத்தில் இதை மறைத்திருந்தார்கள்,  உலகப் போர்களைப் பற்றிய பாடங்களிலும் இதனை இந்தியாவின் சுதந்திரத்துடன் தொடர்புபடுத்தவில்லை.