Pages

Wednesday, March 6, 2013

பயணக் கட்டுரை எழுத ஆசை



மிக நீண்ட பயணம், சென்னையிலிருந்து அவலூர்பேட்டைக்கு தூரம் சுமார் 200 கி. மீ ஒரே ஒரு பேருந்தில் சென்று சேரலாம் 4 – 5 மணி நேரத்தில். ஆனால் இதிலென்ன சுவாரசியமுள்ளது? சுற்றுலாவுக்காக எங்கோ ஒரு தூரமான இடத்திற்கு செல்ல ஆசைப்படுகிறோம், நாம் ஊர் அருகிலுள்ள ஊர்கள், மக்கள், நடைமுறைகள், முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றி இன்னும் ஆழமாகத் தெரிந்து கொள்ள ஒரு பிரயாணத் திட்டமிட்டேன்.

திட்டப்படி சென்னையிலிருந்து அவலூர்பேட்டைக்கு டவுன் பஸ்சில் மட்டுமே செல்லலாம். மினி பஸ், ஷேர் ஆட்டோ, மாட்டு வண்டி, விவசாய டிராக்டர், ஆகியவற்றிலும் செல்லலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே மொபைல் போனை சுவிட்ச் ஆன் செய்யலாம். ஊர்களை, மக்களை, அவர்கள்தம் உரையாடல்களை அனுபவிக்க வேறெந்த இடையூறுகளும் இருக்கக் கூடாதல்லவா?

எடுத்துக் கொள்ளக் கூடிய பொருட்கள்- தண்ணீர் பாட்டில், பணம், அடையாள அட்டை, விசில், டார்ச் லைட், குடை, தீப்பெட்டி,  கத்தி, அவசரத்திற்கு தொடர்புகொள்ள வேண்டிய முகவரிகள், தொலைபேசி எண்கள். பயணம் ஒரு நாளுக்கு மேலே ஆகும் என்பதால், துண்டு, போர்வை, சோப்பும் தேவைப்படலாம்.

பணத்தை பேருந்துக் கட்டணம், உணவு, தேநீர் போன்றவைகளுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும். வேறு எந்த பொழுது போக்கிற்கும் செலவு செய்யக்கூடாது. சில்லரையாக வைத்திருந்தால் மிக நல்லது. டவுன் பஸ்ஸில் மிக அதிக கட்டணமே 15 ரூபாய்க்கு மேல் இருக்காது.
 

பயணத்தின் போது தூங்கக் கூடாது. அதிக சத்தத்தினால் தூங்க முடியாது மற்றும் ஒரு பேருந்தின் மொத்த பயண நேரமே 40 நிமிடத்திற்கு மேல் இருக்காது என்பதாலும் தூங்க முடியாது. படியில் நின்று பயணிக்கக் கூடாது. பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், நன்றாக இரு கால்களையும் படியில் வைத்து, நன்றாக கைகளால் பிடித்துக்கொண்டு பயணிக்க வேண்டும். பயணத்தை முழுமையாக முடிக்கவேண்டுமல்லவா?

பயண வரைபடத்தை பார்ப்போம். சென்னையிலிருந்து அவலூர்பேட்டைக்கு மூன்று வழிகளில் பேருந்துகள் உண்டு. குறைந்த தூரம் அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள்(122) இருக்கும் சென்னை-தாம்பரம்-திண்டிவனம்-செஞ்சி-கீழ்பென்னத்தூர்-திருவண்ணாமலை வழி. இன்னொரு வழி (208) சென்னை–தாம்பரம்-மேல்மருவத்தூர்-வந்தவாசி-சேத்பட்-அவலூர்பேட்டை வழி. மற்றொரு வழி, (422,435) சென்னை–காஞ்சிபுரம்-வந்தவாசி-சேத்பட்-அவலூர்பேட்டை வழி.

முதல்வழி, முற்றிலுமாக தேசிய நெடுஞ்சாலை, சாலையோர ஊர்கள் குறைவு. அதனால் டவுன் பஸ்களும் குறைவு இந்த வழியைத் தவிர்க்கவும் காரணம் இதுதான்.  இரண்டாவது வழியும், மூன்றாவது வழியும் நகரங்களை இணைக்கும் சாலைகள். சாலையோர ஊர்கள மிக அதிகம். டவுன் பஸ், மினி பஸ், மாட்டு வண்டிகள், அதிகம். அதிக மக்கள், அதிக நேரம், அதிகமான பயண இடைவெளிகள். பயணத் திட்டம் தயார். இந்தப் பயணம் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்.  கூடிய விரைவில் பயணக் கட்டுரை எழுதிவிடுவேன்.
எனக்கு முன் நீங்கள் உங்கள் ஊருக்கு இத்திட்டம்போல் சென்றால் அனுபவத்தைப் பகிரவும்.