உங்கள்
ஆரோக்கியத்தினால் யாருக்கு என்ன லாபம்? நோயில் தானே லாபம் உள்ளது.
திருக்குறளின்
மருந்து என்ற அதிகாரத்தின் பத்தில் ஏழு குறட்பாக்கள் உணவைப் பற்றித்தான் உள்ளன.
மூன்றுதான் மருத்துவம், மருத்துவர் பற்றியும் உள்ளது.
உணவு
மிஞ்சினாலும் குறைந்தாலும், ஒவ்வாத உணவைத் தவிர்த்து பசியின் தன்மைக்கேற்ப
செரித்தபின் அளவறிந்து உண்டால் மருந்து தேவைப்படாது. நீண்ட காலம் வாழலாம். நோயில்லை, இன்பம் என்று
ஏழு குறட்பாக்களிலும்............... நோயாளியின் வயது, தன்மை, நேரம்; நோயின் தன்மை
அறிந்து ஆராய்ந்து சிகிச்சையும் நோய் வராமல் காக்கும் வழிகளையும் கற்றவன்
மருத்துவன். நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவம், மருந்து கொடுப்பவன் எல்லாம்
உள்ளடக்கியது மருத்துவமுறை என்று மூன்று குறட்பாக்களிலும் கூறியுள்ளார்.
வள்ளுவன்
காலம் முதற்கொண்டு மருத்துவத் தொழிலையும், மருத்துவர்களையும் கடவுளுக்கு நிகராகப்
போற்றி வந்துள்ளனர். மருத்துவர்கள் செய்வது அறத்தொழில் என்பதில் எந்த மாறுபாடான
கருத்தும் இன்றி மருத்துவம்(ர்), மருத்துவத்துறையில் நம் நாட்டின் நிலைமை
சிந்திக்கத் தூண்டியது. அவற்றை இங்கு பகிர்கிறேன்.
இந்திய ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதை உலக
சுகாதார நிறுவனத்தின் வார்த்தைகளில் பார்க்க.
நகரங்களில்
கூட மருத்துவமனைகளின் எண்ணிக்கை தான் அதிகமே ஒழிய மருத்துவர்களின் எண்ணிக்கை
குறைவுதான். ஒரே மருத்துவர் பல மருத்துவமனைகளிலும் (consultant, specialist, etc)
பணியாற்றி வருகிறார் தன் சொந்த கிளினிக்கையும் சேர்த்து. நம் நாட்டின்
மருத்துவர்கள் தூங்கும் நேரம், உண்ணும
நேரம் தவிர அனைத்து நேரங்களிலும் மருத்துவப்பணிதான் செய்கிறார்கள். ஏன்? 6 லட்சம்
மருத்துவர்கள் பற்றாக்குறை. இதனால் என்ன பிரச்சனை என்று கேட்கலாம். ஒவ்வொரு
நோயாளிக்கும் சரியான பரிசோதனை செய்ய நேரம் இருக்காது, அதாவது நோயின் அறிகுறியை
சரியாக கணிக்காமலே தவறான சிகிச்சைக்கு வாய்ப்புள்ளது. ஒரே நோயின் தீவிரம் ஒவ்வொருவருக்கும் வேறுபாடும். ஒரே சிகிச்சை
பலனளிக்காது. ஒரே மருந்து அளவு தேவையில்லாத விளைவுகளை ஏற்படுத்தும். அதிகமான
பணிச்சுமையால் மருத்துவப் படிப்புடன் மருத்துவத் துறையின் புதிய விஷயங்களின்,
ஆராய்ச்சிகளின் update இல்லாமல் போய்
விடுகிறது. மருத்துவர்களின் அறிவு ஒரு வாரத்திற்கு இவ்வளவு மருந்துகள் விற்க
வேண்டுமென்ற விற்பனை இலக்கு/லாப நோக்கத்தோடு உள்ள மெடிக்கல் ரெப்பிரசண்டுகளின்
வாயிலாகவே நிகழ்கிறது. மருத்துவர்களின் சிறு பேனா முதல் கிளினிக்கில் உள்ள எல்சிடி
டிவி வரை மருந்துக் கம்பெனிகள் அளித்த அன்பளிப்புகளாகவே இருக்கும். இவ்வளவு
மருந்தும் தேவையில்லாமல் நோயாளிகளின் மேல் திணிக்கப்படுவதாக உங்களுக்கும்
தோன்றுகிறதா?
மக்கள் தொகைக்கு
ஏற்ப போதுமான மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லை. ஒரு வருடத்திற்கு
நாட்டிலுள்ள 350 மருத்துவக் கல்லூரிகளில் 45,000 மாணவர்கள் மருத்துவப் படிப்பில்
சேருகிறார்கள். இதே நிலையில் மருத்துவர்கள் வெளிவந்தால் மருத்துவர்கள் பற்றாக்குறை
அதிகமாகிக் கொண்டு தான் செல்லும். இதனால் தான் எந்த மருத்துவரைச் சந்திக்கச்
சென்றாலும் காத்திருக்க வேண்டியுள்ளது, கிராமத்தினர் பல கிலோ மீட்டர் தூரம் ஓட
வேண்டியுள்ளது. இந்த இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி மருத்துவர்களும்
மருத்துவமனைகளும் மக்களை சுரண்டிக்கொண்டுள்ளதாக நம்புகிறீர்களா?
நீதிபதிகளும்,
மக்கள் பிரதிநிதிகளும் தன் சொத்துக் கணக்கை காட்ட வேண்டிய சட்ட நிர்பந்தங்கள்
உள்ளன. இருந்தபோதிலும் நாட்டில் கருப்புப்பணம் அதிகமாவதற்குக் காரணமாக உள்ளனர்.
தொழிலதிபர்களும் தணிக்கைத் துறையின் கண்ணை மறைத்து கறுப்புப்பணத்தை
அதிகமாக்குகின்றனர். அரசாங்க மருத்துவர்கள், தன் கிளினிக்கின் மூலமாக
கறுப்புப்பணம் உருவாக்குவதில் பெரும் பங்கு உள்ளது. மருத்துவர்களின்
கிளினிக்குகளும் வணிக ரீதியானது, தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறதா? இதுபோன்ற
கிளினிக்குகளில் டோக்கன் போட ஆளிருக்கிறது. பில் போட ஆளிருக்கிறதா?
மருத்துவக்
கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவதிலும் கவலை அளிக்கும் விஷயம் கல்லூரிகளின்
அனுமதியில் ஊழல் நடப்பது.
கிராமங்களில்
மருத்துவர் மக்கள் விகித குறைபாட்டைப் தற்காலிகமாகப் போக்க அரசாங்க மருத்துவர்களை
வாரத்தில் இரண்டு நாள் கிராமங்களுக்குச் சென்று மருத்துவ சேவை செய்யப் பணிக்கலாம்.
தனியார் மருத்துவர்களும் இந்த கிராம சேவைக்கு பதிவு செய்து கொண்டு சேவை செய்த
நாள்களுக்கு அரசிடமிருந்து ஊதியம் பெறும்படி செய்யலாம்.
நாட்டின்
ஆரோக்கியம் மக்கள் ஆரோக்கியமே. மக்களின் ஆரோக்கியத்திற்கு மருத்துவத்துறை மட்டுமே
முழு காரணமல்ல. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், குடிநீர், மழைநீர் வடிகால் வாரியம்,
கழிவு நீர், கழிவு மேலாண்மை, துப்புறவுத்துறை ஆகியவற்றின் செயல்பாடுகளின் குறைகளே
மருத்துவத்துறைக்கு பெரும் சுமையை அளித்துள்ளது என்று தோன்றுகிறது.
டாடி எனக்கு ஒரு டவுட்டு ?
M. B. B. S. என்றால் Bachelor of Medicine, Bachelor of Surgery தானே,
சுருக்கமாக எழுதவேண்டுமென்றால் B. M. M. S. என்பதுதான் சரி. முதுநிலைப் படிப்பைப்
போல தோன்றுவதற்காக இப்படி எழுத்தை மாற்றி எழுதியதுமட்டுமில்லாமல் முனைவர்களை
அழைப்பது போல் Dr. என்றும்
அழைக்கப்படுகிறார்கள்.
மருத்துவத்துறை
மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இல்லாமல் போன காரணத்தால் போலி மருத்துவர்கள்
தோன்றக் காரணமாகிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பதின் அடிப்படையே மக்கள்
எண்ணிக்கைக்கு ஏற்றவாறு நாட்டின் வருவாயை மக்கள் நலனுக்காக திட்டமிடுதல்தானே. மத்திய, மாநில திட்டக் கமிஷன்களின் திட்டமிடுதல் குறைபாடுகளின் விளைவா இது.
இப்போதெல்லாம்
எளிமையாக நோய்க்குறிப்புகளைக் கண்டறியும் முறைகளை (கண்ணின் தன்மை, நாக்கை நீட்டச்
சொல்லிப் பார்த்தல், நாடித் துடிப்பைப் பார்த்தல், உணவு, செரிமானம் பற்றி
விசாரித்தல் போன்றவை) மருத்துவர்கள் பின்பற்றுகிறார்களா என்பதே
சந்தேகமாக உள்ளது. நோயாளியை சந்தித்த உடனே, ரத்தப் பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை,
MRI, CT scan, biopsy, endoscopy, tradmilltest, என்று என்னென்ன தன் கிளினிக்கில்
அல்லது தன் பார்ட்னர் ஸ்கேன் சென்டரில் உள்ளதோ அந்த பரிசோதனைகளைப்
பரிந்துரைக்கிறார். இவையெல்லாம் நோயாளிக்கு ஒரு திகிலை ஏற்படுத்துகிறது மற்றும்
பரிசோதனைகளின் முடிவுகள் புரியும்படி இல்லை. மருத்துவர்கள் புரியவைப்பதும் இல்லை.
நோயாளிகளை நோயைப் பற்றி தெளிவாகப் புரியவைக்காமல் மருத்துவர்களைச் சார்ந்தே
இருப்பது போன்ற ஒரு நிலையை வேண்டுமென்றே உருவாக்குகிறார்களா என்ற சந்தேகம்
எழுகிறது.
பாதுகாப்பான இரத்த அழுத்தம் (BP
normal) என்பது 160/100 என்பதாக இருந்தது. 140/90 ஆகக் குறைக்கப்பட்டது. மேலும் 120/80
என்று 2003இல் WHO ஆல் குறைக்கப்பட்டது. ஏன்? உலகத்தின் பாதி மக்கள் தொகையை இரத்த
அழுத்த நோயாளிகளாக வரையறுத்து தன் மருந்துக் கம்பெனியின் மருந்துகளுக்கான நீடித்த
வியாபார நோக்கமன்றி வேறு என்ன இருக்க முடியும். இதனால் இரத்த அழுத்தத்தின் ஆரம்ப நிலை
(pre hypertension, pre hypotension) நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடுகிறது. இதே போல
1997ல் இரத்தத்தில் சர்க்கரை
அளவையும் (fasting blood glucose level) 140
mg/dL இல் இருந்து 126/ mg/dL ஆக குறைத்தது அமெரிக்க
டையபெடிஸ் அசோசியேசன். இதற்கும் அதே வியாபார காரணம்தான். இந்த அளவுகள் என்பது அதிக மக்களின் சர்க்கரை/BPஅளவு
எந்த அளவு உள்ளது என்று கணிக்கப்பட்ட பின் வரையறுக்கப்பட்டது.
முதல் வரி
மீண்டும் “உங்கள் ஆரோக்கியத்தினால் யாருக்கு என்ன லாபம்? நோயில் தானே லாபம் உள்ளது”
இது போன்ற பல
சந்தேகங்கள் உங்களுக்கும் இருக்கின்றனவா?
References
- http://www.who.int/countryfocus/cooperation_strategy/ccsbrief_ind_en.pdf
- http://www.thirukkural.com/2009/02/blog-post_4289.html
- Subba, Reddy DV, and K. Palanichamy. "Health, disease, physician and medicine in Thirukkural." Bulletin of the Institute of Medicine (Hyderabad) 2 (1972): 141.
- http://www.tenet.res.in/Publications/Presentations/zip/Healthcare_in_India.pdf
- Deo, M. G. "Doctor population ratio for India-The reality." The Indian journal of medical research 137.4 (2013): 632. http://www.ijmr.org.in/article.asp?issn=0971-5916;year=2013;volume=137;issue=4;spage=632;epage=635;aulast=Deo
- http://articles.timesofindia.indiatimes.com/2010-05-12/india/28306471_1_t-dileep-kumar-nursing-colleges-countries
- http://www.cbhidghs.nic.in
- CHATTOPADHYAY, SUBRATA. "Corruption in healthcare and medicine: Why should physicians and bioethicists care and what should they do?." Indian journal of medical ethics 10.3 (2013). http://ijme.in/213chm153.html
- Mendelsohn, Robert S. Confessions of a medical heretic. Lebanon, IN: Warner Books, 1980.
- மார்க்ஸ் அ. நமது மருத்துவ நலப் பிரச்சனைகள். பொள்ளாச்சி, இந்தியா: எதிர் வெளியீடு, 2010
- http://www.vinavu.com/2013/08/19/a-doctor-exposes-unholy-hospital-practices/
- http://seattletimes.com/html/health/sick1.html
- http://www.obesitymyths.com/myth8.2.htm