Pages

Monday, February 10, 2014

மாடித் தோட்டமும் நகர மக்களும்


கி.பி. 1600 களில் 60 கோடியாக இருந்த உலக  மக்கள்தொகை அடுத்த 400 ஆண்டுகளில் 700 கோடி உயர்ந்தது. ஒவ்வொரு எழுபது ஆண்டுகளிலும் மக்கள் தொகை இரண்டு மடங்கானது. இதே நிலையில் போனால் 2050 இல் உலக மக்கள் தொகை ஐநா கணிப்பின்படி 915 கோடி ஆகும். நம் பூமியின் தாங்கும் அளவு என்ன? எத்தனை பேர் வாழ இந்த பூமியில் வளங்கள் உள்ளன? மக்கள் தொகை உயர்ந்ததோ மடங்குகளில். அதே அளவு வளங்கள் உயர்ந்ததா என்றால் இல்லை. உணவு உற்பத்தியை ஒரு அளவு வரை படிப்படியாக உயர்த்த முடிந்தது, இன்னும் இன்னும் உயர்த்திக் கொண்டே போவது சாத்தியமற்ற ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும்.



உணவு உற்பத்தியை மேற்கொள்பவர்களின் துயரங்கள் (நம் நாட்டு அரசியல் கொள்கைகளால்) அவர்களின் அடுத்த தலைமுறையினரை விவசாயத்தில், உணவு உற்பத்தியில் ஈடுபடுத்தாமல் தடுத்துவிடுகிறது. விவசாயம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கடன் பட்டதால் உழைப்புக்கு உணவு தரும் அட்சய பாத்திரமான  நிலங்களையும் விற்றுவிட்டு வேறு தொழில் தேடி தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நேரடியாக விவசாயம் செய்யும் மக்கள்தொகையில் 2035 பேர் குறைந்துகொண்டிருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் 53% பேர் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். ஆனால் 8% பேர் மட்டுமே நேரடியாக விவசாயத்தில் ஈடுபடுவோர். மற்ற அனைவருமே விவசாயக் கூலிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோர்.   விவசாயம் செய்வோரும், விவசாய நிலங்களும் குறையும் போது உணவு உற்பத்தி எப்படி அதிகரிக்கும்? கிராமங்களில் விவசாயம் செய்வோர் இல்லை. முதியோர்களும் சிறார்களுமே உள்ளனர். விவசாயியின் இடத்தை ஈடு செய்வது யார்? வீட்டுமனையாக அல்லது தொழிற்சாலையாக மாற்றுபவர்களா? அந்த இடத்தில் விளைந்துகொண்டிருந்த உணவுக்கு எங்கே போவது?

இந்திய வேளாண்துறை  2010-11 வரையான பத்து ஆண்டுகளில் 0.8% பயிர் செய்யும் நிலம் மட்டுமே குறைந்ததாக தெரிவிக்கிறது. மற்ற அனைத்து கணக்கீட்டின்படியும் விவசாய நிலம் இன்னும் பல மடங்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுமனைகளுக்காக வாங்கப்பட்டு உற்பத்தி எதுவும் இல்லாமல் வெற்று நிலங்களாக ஒன்றுக்கும் உதவாமல் வீணடிக்கப்படும் நிலங்களைப் பற்றிய புள்ளி விவரம் இல்லை. இயற்கையின் ஆற்றலை இப்படியெல்லாம் நாம் வீணடித்துக்கொண்டிருக்கிறோம். நகரத்தில் வாழும் நாமெல்லாம் உணவுக்கு எங்கே போவது? ஐநா உணவுகழகத் (FAO) தகவலின்படி மொத்த உலக உணவு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது. இதனால், 750 பில்லியன் டாலர் ஒரு வருடத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் உணவு தானியங்கள் 17,546 டன் இந்திய உணவு கார்ப்பரேஷன் (FCI) கிடங்குகளில் 2009-10 முதல் ஜூலை 2012 சேதமடைந்துள்ளன. இதுபோன்ற இக்கட்டான சூழலில் உணவு உற்பத்தியின் அளவை அதிகப் படுத்துவது எப்படி என்பது நாம் சந்திக்கும் கேள்வி. சவால் என்பது இன்னும் பொருத்தம்.



 மால்தூசியன்கோட்பாட்டின்படி உற்பத்தியாகும் உணவு அளவைத் தாண்டி மக்கள்தொகை அதிகரிக்கும் போது  நேரடியாகவும் பல்வேறு மறைமுக  காரணங்களாலும் அதிவேகமாக சரியும். இக்கணிப்பு பலிக்குமா என்று தெரியாது. ஆனால் இவ்வுலகத்தால் அளவுக்கு மீறிய மக்கள் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது என்பதை மட்டும் யாராலும் மறுக்க முடியாது.

உலக மக்கள்தொகைக்கு யாரால் உணவை அளிக்க முடியும்? உங்கள் வீட்டு மக்கள்தொகைக்கு தேவையான உணவை நீங்களே உற்பத்தி செய்ய முடியும்.
தனக்குத் தேவையான காய்கறிகளை, கீரைகளை நகரத்தில் உள்ளவர்கள் தங்கள் மாடியில், பால்கனியில், வீட்டு ஓரங்களில், வீட்டு முகப்பில், காலியான மண் நிலம் கூட தேவையில்லை வீணாகும் காலி பாட்டில்கள், அட்டைப்பெட்டிகள், ஏன் பிவிசி பைப்புகளில் கூட துளையிட்டு செடிகள் வளர்க்கலாம். மிகக் குறைந்த இடத்திலேயே பல வழிகளிலும் காய்கறிச் செடி வளர்க்கலாம். செலவும் குறைவுதான். இதனால் நகரத்திலும் உணவு உற்பத்தி செய்யப்படும்.
 
நான்கு சதுர அடியில் 50 செடிகள் வளர்க்க முடியும். தேவையான காய்கறிகளை விளைவிக்க முடியும். 60 சதுர அடியில் சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, தக்காளி, பச்சைமிளகாய், வெண்டைக்காய், அவரைக்காய், கத்தரிக்காய், புடலை, பீர்க்கன், பாகற்காய், கொத்தமல்ல்லி போன்ற எல்லாம் வளர்க்கலாம். பூச்சி வந்தால் இஞ்சி பூண்டு அரைத்து தெளிக்கலாம். மஞ்சள் நீர் தெளிக்கலாம். ஒரு சில பூச்சிககள் ஒரு குறிப்பிட்ட செடியை மட்டுமே தாக்கும். ஒன்றும் செய்யாமல் அச்செடியை பூச்சி diversion ஆக விட்டுவிடலாம். மற்ற செடிகளுக்கு பாதிப்பிருக்கது. உரமாக சமையலரறைக் கழிவுகள், ** (**நகரமென்பதால்  கால்நடைக் கழிவை குறிப்பிடவில்லை). மோர் கரைத்து தெளிக்கலாம், அதில் லேக்டோ பசில்லஸ் நுண்ணுயிரிகள் செடி வளர்ச்சிக்கு உதவுகின்றன. துளசி செடி பூச்சியைக் கட்டுப்படுத்தும். நீர் செலவு அதிகமில்லை. காய்கறி மற்றும் அரிசி கழுவும் நீர் மட்டும் போதும்.

 
மண் தயாரிப்பு – மண், காய்ந்த இலைச் சருகுகள், எரு, தண்ணீரில் கரைத்த ** , தேங்காய் நார், மரத்தூள் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். இவற்றில் ஒன்றிரண்டு இல்லையென்றாலும் மண் மட்டும் இருந்தால் கூட போதும். தேங்காய் நாரும், மரத்தூளும் அதிக ஈரத்தை தக்க வைக்கும். ஒவ்வொரு  வாட்டர் கேனையும் வெட்டி துளையிட்டு விதைநிலமாக்கலாம். தண்ணீர் தெளித்து விரலால் அழுத்தி விதையின் அளவில் மூன்று மடங்கு குழி செய்து ஊன்றினால் போதும். விதைத்த பின் ஒரு விதை முளைக்க நாம் செய்ய வேண்டியது எதுவுமில்லை. சிறு விதைகளை தூவினாலே போதும். எந்த ஒரு ரசாயனமும் கண்டிப்பாக செடிக்கு வேண்டாம். மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள்தான் செடிக்குத் தேவையான உணவை மண்ணிலிருந்தும் காற்றிலிருந்தும் பெற்றுத்தருகின்றன. நம் அனைவருக்கும் இயற்கை வேளாண் பேரறிஞர் மசானோபு புகோகா சொன்ன சொல் நம்பிக்கை ஊட்டுகிறது. “இயற்கையாக முளைக்கும் எந்த விதைக்கும் உழுத நிலமும் இரசாயனங்களும் தேவையேயில்லை”. காட்டில் சென்று யார் உரமிட்டார்கள்? பூச்சிகளால் எந்தக் காடாவது அழிந்துள்ளதா? காட்டில் உள்ள தாவரம் போல் செழுமையான தாவரம் எங்காவது உண்டா?

விதை ஓரிரு நாளில் வெளிச்சத்தைப் பார்க்க முளைத்து விடும். மேலும் வளரும். இரண்டு மாதங்களில் உங்கள் சமையலறைக்குள் உங்கள் உணவாக மாறத் தயாராகிவிடும்.

எரு தயார் செய்ய உங்கள் வீட்டு மக்கும் குப்பைகளை, செடிகளின் உதிர்ந்த இலைகளை ஒரு பக்கெட்டில் கொட்டி மண் தூவி மோர் கரைத்து ஊற்றிவந்தால், (**),  போதும். நீர் கசியும் என்று தோன்றினால் கீழே பழைய ப்ளெக்ஸ் பேனர் விரித்துவிடலாம்.

விதைகளை விவசாய நண்பர்களிடமும், தமிழ்நாடு தோட்டக் கலைத்துறை மையங்களிளிலும்   நர்சரிகளிலும் வாங்கிக்கொள்ளலாம். அண்மையில் கூட தமிழ்நாடு அரசு நகரங்களில் (சென்னை, கோவை மாவட்டங்கள்) மாடித்தோட்டங்கள் அமைப்பதை ஊக்குவிக்க தேவையான விதைகள், இடுபொருள்கள் மற்றும் அனைத்துகருவிகளும் ஐம்பது சதவிகித மானியத்தில் அளித்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது. நகரங்களில் பலர் தமது வீடுகளில் என்று மாடித் தோட்டங்கள் அமைக்க ஆரம்பித்து விட்டனர்.

உங்கள் வீடு பசுமை வீடாகும். பட்டாம்பூச்சிகளும் பறவைகளும் உங்கள் வீட்டை நந்தவனமாக்கும். உங்கள் வீட்டில் விளையும் காய்கறியை விட யாராலும் நஞ்சில்லாத பசுமையான காய்கறியை தந்துவிட முடியாது. எங்கோ தூரத்திலிருந்து எரிபொருளை எரித்து காற்றை மாசுபடுத்திக்கொண்டு லாரியில் வரும் காய்கறி வேண்டாம். உங்கள் வீட்டு காய்கறித் தோட்டம் உங்கள் carbonfootprintஐக் குறைக்கும்.



விவசாய நிலங்கள் இல்லாத சென்னையில் காய்கறி உற்பத்தி அதிகரித்துள்ளது என்று இன்னும் சில ஆண்டுகளில் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கப்பட வாய்ப்புண்டு. அதில் என் பங்கும் உங்கள் பங்கும் இருக்கும் என நம்புகிறேன்.