நாம்
எப்போதும் அணியும் உடைகள், ஒரு துணி அல்லது இரு துணி அடுக்குகள் கொண்டு
தைக்கப்பட்டிருக்கும். கவச உடை சாதாரண உடையப் போல் இல்லாமல் சுமார் 20-40 அடுக்கு
துணிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும். இவ்வுடையிலிருக்கும் நூலிழைகள் அதிக வலிமையையும்
குறைந்த நீளும் தன்மையும் கொண்டிருக்கும். பாரா அராமிட் (para aramid) இழைகள்
பயன்படுத்தப்படுகிறது. இரண்டு கிராம் முதல் 20 கிராம் வரையும் நொடிக்கு 200 முதல்
800 மீட்டர் வேகத்திலும் தாக்கக் கூடிய துப்பாக்கி தோட்டாக்களை தாங்கி கவச உடை
அணிந்திருப்பவரைக் காக்கிறது. இதன் பின்னணியில் உள்ள அறிவியல் இதுதான். கவச உடை
தோட்டாவின் ஆற்றலை உள்வாங்கி குறுக்கும் நெடுக்குமாக நெய்யப்பட்டுள்ள பாவு மற்றும்
ஊடை நூலிழைகளின் வழியாக பரவவிட்டு தாக்கும் வேகத்தையும் குறைக்கிறது. இவ்வாற்றல்
தோட்டா தாக்கிய புள்ளியியை நோக்கி அலை போல் ஆடை அடுக்குகள் உள் நோக்கி குவிந்து
ஆற்றல் பரவுதலை சமன்படுத்தும். தோட்டாவின் வேகம் குறைந்து குவிந்த துணி அடுக்குகள்
தன் இயல்பு நிலைக்குத் திரும்பும் போது துணி அடுக்குகளினுள் சிக்கி கவச உடை
அணிந்திருப்பவரைக் காக்கும். இந்த ஆற்றல் குறைப்பு கவசப் பணியின் முக்கிய அம்சம்.
ஆகவே சாதாரண உடையைப் போல் பல துண்டுகளாக வெட்டித் தைக்கப்படாது. பல துண்டுகளாக
வெட்டினால் தோட்டாவின் ஆற்றல் பரவி வேகம் குறைவது தடைபடும். நூலின் முறுக்கும் குறைவாகவே இருக்கும்,
அப்போதுதான் ஆற்றல் பரவுதல் விரைவாகவும் ஒரே கோணத்திலும் நடக்கும். நூலின்
முறுக்கினால் தோட்டாவுக்கும் நூலுக்கும் இடையே ஏற்படும் உராய்வும் நெருக்கமான நெய்தலினால் ஏற்படும் உராய்வும் தோட்டாவின்
வேகக் குறைப்பில் பங்கேற்கிறது. இந்த அனைத்து செயல்களும் ஒரு விநாடிக்குள்ளாகவே
நடந்து முடிந்துவிடும். ராணுவ வீரர்களின் முக்கிய உறுப்புகளைக் காத்து உயிர்
காக்கவும் வேகமாகச் செயல்படவும், மேலுடம்பை (கை, கால் மற்றும் தலை தவிர்த்து)
காக்கும் கவச உடை சுமார் ஆறு கிலோ வரை இருக்கும். வெடிகுண்டு செயலிழக்கச் செய்பவர்களின்
கவச உடை, (தலைக்கவசம் முதல் கால்கள் வரை முழு உடல்) சுமார் 25 கிலோ வரை இருக்கும்.
இந்த முழு உடல் கவச உடையுடன் வேகமாக நடக்கவோ ஓடவோ முடியாது. மேலும் உடையினுள் காற்றோட்டம்
இல்லாததால் உடல் வெப்பம் சீராக இருக்காது அதிக வியர்வை வெளியேறும். நீண்ட நேரம்
அணிய முடியாது. ஆகவே தான் ராணுவ வீரர்களின் கவச உடை, முழு உடலையும் காக்காமல்
முக்கிய உறுப்புகளை மட்டும் காப்பது போல் வடிவமைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment